Wednesday, September 6, 2017

மீண்டும் பூக்கும்

மீண்டும் பூக்கும்
by கஜினி அய்யூப்
“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு!?

பொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே போயிருக்கிறதென்பேன்…

சரி, எப்படி துவங்குகிறது இந்நாவல் என்று நான் வாசிக்கத்துவங்கிய நிமிடங்களில்தான் உணர்ந்தேன் இதை வாசித்துமுடிக்காமல் மூடி வைக்க முடியாதென்று !



‘ஸக்கியா’ என்கிற ஒரு ஏழை அபலைப் பெண்ணின் வாழ்க்கை வட்டத்தை வைத்தே சுழுல்கிறது முழு நாவலின் சாரமும்.

ஸக்கியாவின் மணவாழ்க்கையில் வாய்த்த ‘அலி’ என்கிற குடிகார கேங்கர் கணவன் எப்படி தன் துர் நடத்தையால் ஸக்கியாவின் வாழ்க்கையை சீரழிக்கிறான் என்பதை வாசிக்கும்போது மனம் கவலைபடுகிறது . அதன் பின் அவளின் நிலை என்ன? ஸக்கியா வேறு இடம் தேடிப்போனாளா?  இந்த வேதனையில் இருந்து மீண்டாளா என்பதுதான் முழு கதையோட்டத்தின் கரு ஆகும் !

முழு நாவலும் தமிழ் இஸ்லாமிய கலாச்சார சூழல் நடையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு சிறப்பு.

பெண்ணாக பிறந்தவள், அதுவும் ஏழை அனாதையாக பிறந்தால் அவள் எவ்வளவு துன்பத்தை தன் வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் துல்லியமாக நாவலாசிரியை இந்த கதையோட்டத்தில் விவரித்திருப்பதை வாசிக்கையில் என் மனதை மீறி இரக்கத்தால் இமைகள் இரண்டிலும் விழி நீர் துளிகள் முட்டிக்கொண்டது என்பது நான் மறைக்க முடியாத உண்மை!

எழுத்துச்சிற்பி ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்கள்”  நாயகி ‘கங்கா’ போல் இதில் எழுத்தாளினி பானு ஹாரூன் அவர்களுக்கு ‘ஸக்கியா’ !

அஞ்சம்மா, ஜம்ஷத், ரஃபியம்மா, அர்ஷியா எனும் இதில் வரும் கதாபாத்திரங்கள் நம்மோடு சேர்ந்தே உயிரோட்டமாக வாழ்ந்து உலவுகிறார்கள் மனதில் இந் நாவல் வாசிக்கையில் !

இந்த நாவலாசிரியையின் முன் மரபணு வம்சத்தில் மூத்த தலைமுறையில் எவரோ தமிழறிஞர்களாக இருந்திருப்பார்களோ ? மனுஷி யதார்த்த மொழி நடை இலக்கியத்தில் பின்னி எடுத்திருக்கிறார் !

வடகரை அரங்கக்குடியில் … மறைந்த அறிஞர் அரசியல் ஞானி வடகரை எம்.எம்.பக்கர் அவர்களின் மருமகளும், பிரபல யுனானி டாக்டர்.எம்.ஏ.ஹாரூன் அவர்களின் மனைவியுமாவார் இந் நாவலாசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நாவல் முஸ்லிம் பெண்கள் மாத இதழான ‘நர்கிஸ்’ பத்திரிக்கையில் தொடராக முன்னர் வெளிவந்தாகும்! அப்போது இதை வாசிக்கத் தவறியவர்களுக்கு இப்போது இது நாவலாக முழுநூலாக மறு அச்சில் கிடைத்திருப்பது வாய்ப்பு!

இதில் இந் நாவலாசிரியையே மீண்டும் பூக்கும் உந்துதலில் சில ஓவியங்களை வரைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்! ஏனெனில் இப்போதைய கணனி யுகத்தில் இது சற்று பழமையாக தெரிகிறது.

இந் நாவலை வாசித்து முடித்த பின் இவரின் தமிழார்வத்திற்காக இதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க நினைத்தேன். ஆனால் நான் வாழ்த்தாமலேயே வாழும் வல்லமை இவர் எழுத்துக்களுக்கு இருக்கிறது!

நூல் வெளியீடு / கிடைக்குமிடம்

அபு பப்ளிகேஷன்ஸ்
Dr.M.A.ஹாருன்
4/321 – 1, தவ்லத் தெரு
வடகரை – 609 314
தமிழ்நாடு – இந்தியா
நன்றி:http://tamilnenjam.com/?p=2548
------------------------------------------------------------------------------------------------------

வெளிவந்திருக்கும் என் நாவல் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா ?....
-- ஜெ .பானு ஹாருன்
'' மீண்டும் பூக்கும் '' --- சில வருடங்களுக்கு முன் திருச்சியிலிருந்து வெளிவரும் நர்கிஸ் முஸ்லீம் பெண்கள் மாத இதழில் தொடராக வெளிவந்தது .
மறைந்த நர்கிஸ் ஆசிரியர் சகோதரி அனீஸ் பாத்திமாவுக்கும் ,மல்லாரி பதிப்பகம் டாக்டர் .ஹிமானா சையத் அவர்களுக்கும் என் அன்பும் , நன்றியும் உரித்தாகட்டும் ....
யதார்த்தமான தமிழ் முஸ்லீம் வாழ்வியலை சொல்லும் ...நம் வீட்டு வளர்ப்புப்பெண்ணின் கதை தான் இது ...
இப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது ...
இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன் .நம்மைச் சுற்றிலும் நடப்பதை ...வடகரையை மையப்படுத்தி சொல்லியிருக்கிறேன் ....
பிரபல திரைப்பட இயக்குனர் சகோதரர் எஸ் .பி .ஜனநாதன் முன்னுரையாக தன்னுடைய மதிப்புரையை வழங்கியிருக்கிறார் .இயற்கை ,பேராண்மை ....உள்ளிட்ட ஐந்து படங்கள் இயக்கியவர் .மரியாதையான நல்ல மனிதர் .அவருடைய பார்வையில் என்னுடைய எழுத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே எண்ணுகிறேன் ..
மற்றவர்களும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் ..
----இறைவன் நாடினால் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டு இன்னும் எழுதவே விரும்புகிறேன் ...
மிக்க அன்புடனும் ,நன்றியுடனும் ..உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி யவளாக ....
--- ஜெ .பானு ஹாருன் J Banu Haroon

No comments: