Saturday, September 2, 2017

ஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.

by-Jothimani Sennimalai

இன்று அனிதாவுக்கு இதயம் கனக்க இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்.ஒரு அரசியல்வாதியாக அந்தக் குழந்தையின் முன் குற்ற உணர்ச்சியோடு தலைகுனிந்து நின்றேன்.
நன்றாகப் படிக்கும் மகளை மருத்துவராக்கத் தந்தைக்கு ஆசை. அவரோ மூட்டை தூக்கும் தொழிலாளி.
"இது பேராசை இல்லையாப்பா" என்று கேட்டிருக்கிறார் மகள். "குறுக்கு வழியில் பணம்சேர்ப்பது தான் பேராசை .நன்கு படித்து மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்வது பேராசையல்ல "என்று சொன்னார் தந்தை.
அனிதா நன்கு படித்தார். ஆனால் மருத்துவர்தான் ஆகமுடியவில்லை!
மூட்டை தூக்குபவரின் மகள், மருத்துவர் ஆக கனவுகாண்பது பேராசைதான் என்று அடித்துச் சொல்லும் மனுநீதி, சமூக நீதியைக் கொன்றுவிட்டது!
நாம் அனைவரும் இன்று அதற்கும் சேர்த்துதான் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

மகளுக்கு நன்கு படிக்க ஊக்கம் கொடுத்த தந்தை " இந்த பாழாப்போன படிப்பு எம்புள்ளைய கொன்னுடுச்சேம்மா" என்று கதறி அழுகிறார். ஆறுதல் சொல்வதற்கு வார்த்தையில்லை.
அனிதாவின் தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் நொறுங்கிப் போயிருக்கிறார்கள். நாங்கள்ளாம் ரொம்ப வறுமையில் இருக்கோம். எப்படிக்கா கோச்சிங்கிளாஸ் போறது? என்று கேட்கிறார்கள்.என்ன பதில் சொல்வது?
அரியலூர் மாவட்டமே மிகவும் பின்தங்கியிருக்கிறது. அதிலும் அனிதாவின் கிராமம் இன்னும் மோசம். அனிதாவின் குடும்பமோ அதைவிட அதிக கஷ்டத்தில் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து,ஒருபெண் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி ,அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்து வருவது சாதரணமானதல்ல.
ஓட்டப்பந்தயத்தில் அனைத்து வசதிகளோடும், ஆதரவோடும் ஓடுவதும், கால்கள் இரண்டும் தடைகளால் பிணைக்கப்பட்டு, தன்னந்தனியாக எவ்வித ஆதரவும் இல்லாமல் பந்தயத்தில் கலந்துகொள்வதும் ஒன்றா?
ஆனால் அசாதாரண மனவலிமையோடு அப்பந்தையத்தை ஓடிக்கடந்து, பத்தாம்வகுப்பில் 470 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 1174 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார் அனிதா.
இது தகுதியில்லையென்றால் பிறகு எது தகுதி?
கிராமங்களில் மிகுந்த பின்தங்கிய சூழலில் இருந்துவரும் ஒடுக்கப்பட்ட,விவசாயிகள் கூலித்தொழிளார்களின் குழந்தைகள், நகர்ப்புற சேரி என்னும் வாழ்வின் விழிம்பில் அவதிப்படுபவர்களின் குழந்தைகள் போராடி, நன்கு படித்து ,நல்ல பதிப்பெண் பெறுவ தகுதியில்லை என்று சொல்ல எந்தவொரு அமைப்புக்கும், அரசுக்கும் அமைப்பிற்கும் உரிமையில்லை.
சரியான நேரத்தில் மாணவர் நலனில் அக்கறை செலுத்தி முடிவெடுக்காமல் அரசியல் பேரத்தில் ஈடுபட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மன்னிப்பே கிடையாது.
அனிதாக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது மௌனம் சமூக நீதியை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும்.
நாளை நம்வீட்டுக் குழந்தைகளையும் இந்த "தகுதி "என்ற விஷம் தீண்டும் முன் விழித்துக்கொள்வோம். எது தகுதி என்ற கேள்வியை எழுப்புவோம்.ரௌத்திரம் பழக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
-Jothimani SennimalaiJothimani Sennimalai
--------------------------------------------------------------------------------------------

மருத்துவராகும் கனவை தகர்த்த நீட் தேர்வு: அரியலூர் மாணவி அனிதா 
தற்கொலை
-----------------------------------------------



No comments: