Monday, September 4, 2017

புதிய விதி செய்வோம்

Vavar F Habibullah

இளம் தலைமுறையின் நீட் தேர்வு எனும் உடன் கொல்லி மருந்தால் மருத்துவ கனவுகள் சிதைந்து போய் உயிருக்கு போராடும் அவசர நிலையில் தமிழக மாணவர் உலகம் தத்தளிக்கும் வேளையில்......
சில கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ள எனது அருமை நண்பர் டாக்டர் ஜெய்ன் காதிரி என் இல்லம் வந்திருந்தார்.
இவரை நான் சமீபத்தில் என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன்.
அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் பிரபல மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை பேராசிரியர் இவர்.கடந்த 50 ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஸ்டெம் செல் மருத்துவ தொழில் நுட்பத்தில் புகழ் பெற்ற நிபுணர்.

ஸ்டெம் செல் தெராபி பற்றி இவர் நிகழ்த்தும் அற்புத ஆராய்ச்சி குறிப்புக்கள் பற்றி மருத்துவ மாணவர்களிடையே இவர் நிகழ்த்தும் பேருரைகளின் தொகுப்பினை சற்று புரட்டி பார்த்த என்னால் மருத்துவர் என்ற முறையில் என் நண்பரின் தனித்திறமைகள் பற்றி வியந்து பாராட்டாமல் இருக்க இயலவில்லை.
தீர்க்க முடியாத நோய்கள் என்று வருங்காலத்தில் எதுவும் இருக்காது என்று தீர்க்கமாக சொல்லும் இந்த டாக்டர், இனி ஸ்டெம் செல் தெராப்பி ஒன்றே நோய் குறை பாடுகளுக்கு தீர்வாக அமையும் என்று மிகவும் தெளிவாக சொல்கிறார்.
செயலிழந்த மூளை, இதயம், கிட்னி, சுவாசப் பை கோளாறிலிருந்து இரத்த புற்று நோய் ஆட்டிஸம், செரிபரல் பல்சி வரை பல மருத்து வ குறைபாடுகள் இதன் மூலம் சீர்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை தெளிவாக விளக்குகிறார்.விரைவில் சென்னையில் ஒரு ஹைடெக் ஸ்டெம் செல் லேப் துவங்க இருப்பது பற்றி எனது ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.இது ஏழை குழந்தைகளுக்காக இலவசமாக செயல்படும் நிறுவனமாக திகழும் என்பது தான் அவர் முன் வைத்த கருத்தாகும்.
இடலாக்குடி அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் மீடியத்தில் படித்தவர் இவர்.MBBS மதுரை யில் படித்து, லண்டனில் மேல் கல்வி முடித்த இவர் அமெரிக்காவில் லாஸ் ஏன்ஜல்ஸ் நகர பிரசித்தி பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ஆவார்.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவராக இயலாத நிலை குறித்து கருத்து தெரிவித்த இவர், நீட் தேர்வுக்கும் மருத்துவ அறிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.
அமெரிக்காவில், லண்டனில், ஐரோப்பா வில் உள்ள பெரும்பாலான பிரசித்தி பெற்ற டாக்டர்கள் பெரும்பாலோர் தமிழகத்தை சார்ந்தவர்களே என்பது இவரது கருத்து.
அன்று நீட் தேர்வு இருந்தால்
நான் என்ன!
நீ கூட டாக்டராகி இருக்க முடியாது!
என்று சொல்லி சிரிக்கிறார்.
அமெரிக்காவில் 50 வருடங்களாக வாழும் இவரால் எப்படி அழகிய தமிழில் பேச முடிகி றது. நாஞ்சில் நாட்டு உணவை ருசிக்க
முடிகிறது.
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும்
நா பழக்கம்.......
என்னை ஆச்சரியப்பட வைத்த அதிசய நண்பர் இவர்.
அகில உலகும் சுற்றி வரும் இவர் விரைவில் தெற்காசிய நாடுகளுக்கும் ஸ்டெம் செல் தெராபி பற்றிய தொடர் சொற்பெழிவுகளுக்காக செல்ல இருக்கிறார்.
விரைவில் நாகர்கோவில் நகர மருத்துவர்கள் மத்தியிலும் உரையாட இருக்கிறார்

.Vavar F Habibullah

No comments: