Monday, September 18, 2017

நெல் விளைந்தால்தானே நமக்கு சோறு....!

கடந்த வாரம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் டூவீலரில் வைத்து அழத்துக்கொண்டு மயிலாடுதுறைக்கு செல்லும் வழியில் நீடூர் இரயில்வே கேட்டை தாண்டி அதன் அருகாமையில் இருந்த வயல் வெளிகள் சிலவற்றில் நெல் நாற்று நடப்பட்டிருந்தது!
அதைப்பார்த்துவிட்டு எனது மூத்தமகள் கேட்டால் அத்தா..! இது என்ன செடி..? என்று.
நான் சொன்னேன் இது நெல் நாற்றுடா செல்லம்..! இதை இங்கே நடவு செய்து பயிர் செய்தால்தான் நெல் விளையும்! அதிலிருந்து நமக்கு அரிசி கிடைக்கும் அதை சமைத்தால்தான் நாம் சாப்பிடும் சோறு என்றேன்!

நேற்று இராஜகிரி செல்லும் முகமாக சென்ற இரயில் பயணத்தில் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் மாலை நேர பேசன்ஜர் இரயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மயிலாடுதுறையில் புஷ்கரம் விஷேசம் என்பதால் கூட்டம் அதிகம்.
எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை! அதனால் இளைய மகளை கையில் வைத்துக் கொண்டு நானும் மனைவியும் நிற்க, மூத்தமகளை ஒரு வயதில் மூத்த பெரியம்மா தன்னுடன் அமர வைத்துக்கொண்டார்.
இரயில் மாப்படுகை கிராமத்தை கடந்து சற்று தூரம் சென்றது அங்கே உள்ள வயல் வெளிகள் சிலவற்றில் சேர் அடித்து தண்ணீர் கட்டி வைத்திருந்தார்கள் நடவு செய்யும் பக்குவத்தில்.
அதைப்பார்த்த எனது மூத்தமகள் தனது அருகில் அமர்ந்திருந்த அந்த பெரியம்மாவிடம்!
பாட்டி...! இந்த வயலில் ஏன் எதுவும் இல்லை...? இங்கிருந்து நெல் வந்தால்தானே நமக்கு சோறு கிடைக்கும் என்று சொல்ல...! அந்த பெரியம்மா...ஏம்மா உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்..? ஸ்கூலில் சொல்லிக்கொடுத்தார்களா...? என்று கேட்க, மகள் சொன்னாள்...இல்லை பாட்டி நான் இன்னும் ஸ்கூலுக்கு போகவில்லை! இதை எனக்கு எங்க அத்தா சொல்லிக்கொடுத்தாங்க...! என்று பேசிய மாத்திரத்தில் மகிழ்வின் உச்சத்திற்கே சென்றேன் நான் ...மாஷா அல்லாஹ்...! 💕
எனது இறைவன் நான் மீட்டி எனை மீட்க எனக்களித்த ஆனந்த யாழே...! அன்புமகளே...!
இறையருளால் நான் உன்னில் விதைப்பதையெல்லாம் நீ இந்த மண்ணில் விதை...!
அது விளைந்து பயிராகி இந்த சமுதாயம் செழிக்கட்டும்...! 🌹

Samsul Hameed Saleem Mohamed

No comments: