Saturday, September 23, 2017

முகம் மூடி அகம் திறப்பவர்கள்

*
முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.

எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்.....


ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை அனைத்தின் கலவைதானே உண்மையான நான்?

என் நிஜமுகத்தோடு, அது எத்தனை அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக் காட்டிக்கொள்வதுதானே சரி.

ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் கொண்டவன்தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் உண்மை முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார்.

போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெருமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும் கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நானாக இருப்பதால் எவருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில் இழப்பு என்ன இருக்கிறது?

அன்புடன் புகாரி
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
https://anbudanbuhari.blogspot.in/

No comments: