Friday, September 15, 2017

பேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை.....

பேரறிஞரின் நினைவு நாளில் இந்த எளியோனுக்கு அமைந்த ஒன்றை சொல்லி வைக்க நினைக்கிறேன். அதாவது அன்றைக்கு 1972 என்று நினைக்கிறேன்,
அப்போது மாலை மணி ஆறு. வேலை முடிந்து நுங்கம்பாக்கம் மெயின் சாலையை கடந்து ஒரு தெருவை தாண்டிச் செல்லும் போது, நண்பனொருவன் சொல்லிவைத்த செய்தி நினைவுக்கு வர, அட ஆமா போய் பார்த்துதான் வருவோமே என்று பக்கத்தில் எந்த வீடு அது என்று கேட்டு, கிட்டத்தட்ட கடைசி வீடு என்று தெரிந்து வீட்டின் முன்னே நின்று பார்த்தால், ஒரு வயதான அம்மா, வீட்டுக் கூரையை தாங்கி நிற்கும் அந்த இரண்டு தூண்களில் ஒன்றை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு சாவாதானமாக மிக எளிமையாக நி்ன்று கொண்டிருந்தார்கள். சிறிது தயக்கத்துடன் அம்மா இது அண்ணாவின் வீடு என்று சொன்னார்கள், ஒன்றுமில்லை, அண்ணி இருந்தால் சும்மா ஒருமுறை பார்த்து நலம் விசாரிக்கத்தான் என்று மிகுந்த தயக்கத்துடன் நான் சொல்ல, அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் நான்தாம்ப்பா நீ பார்க்க வந்த அண்ணி என்று சொன்னதும் அப்படியே நான் திகைத்துப் போய்விட்டேன், காரணம்.....

அவர்களின் எளிமையும் பாமரத்தனமும், யாரும் இவங்களை கவனிப்பது கூட கிடையாதோ என்று நினைக்கிற அளவில் அவர்களின் நிலையும் உடையும் அன்றைக்கிருந்தது. பனித்த கண்களை துடைத்துக் கொண்டு, சரிம்மா, நல்லா இருங்கோ என்று சொல்லிவிட்டு என் இருப்பிடம் நோக்கி நடக்கும் போது எனக்குள் சொல்லிக் கொண்டேன்....
அண்ணா மிக நிச்சயமாக தமிழனுக்காக மட்டுமே உழைத்து தன்னையே உருக்குலைத்து கொண்டவர் என்று. அன்றைக்கு மட்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட டாக்டர் மத்தியாஸ் அவர்களுக்கு வேண்டி, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றிற்காக அத்தனை சூடான அந்த ஒளிகளுக்கு மத்தியில் நோய்வாய்பட்டிருந்த அந்த நிலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசி இருந்திராவிட்டால்......அவ்வளவு சீக்கிரமாக அவர்
நம்மையெல்லாம் விட்டு பிரிந்திருக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்று இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் !


Raheemullah Mohamed Vavar

No comments: