Monday, September 18, 2017

மழையில் நனைந்தும்

ராஜா வாவுபிள்ளை

மழையில் நனைந்தும்
ஆசை தீரவில்லை
காக்கை குளியல்!
#கொஞ்சம்_விளக்கம் தருகிறேன்.
பகல்நேர மழையில் நன்றாக நனைந்து விட்டாலும் சாலையில் இருக்கும் சிறு குழிகளில் தேங்கிய நீரில் காக்கை குளியல் போடுவது சிறுவனாக கண்டு ஆச்சர்யமாக பார்த்து மகிழ்ந்த இயற்கை நிகழ்வு, காணக் காண தெவிட்டாத ஒரு காட்சி.

இயற்கையின் கழிவுகளை சுத்தமாக்குவது தலையாய பணியானாலும் சுத்தம் பேணுவதில் காகங்கள் பறவைகளில் முதலிடம் வகிக்கிறது.
காகம் வீட்டுக்கூரையில் வந்து நின்று கரைந்தால் வெளியூரில் இருந்து செய்தி ( கடிதம் ) வரும் என்று சொல்லக் கேட்டதில் இருந்தே அவற்றின் மீதொரு சொல்லொணா வியப்பு சிறுவயது தொட்டே இருக்கிறது.
என் வயதொத்தவர்க்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
சிறு வயதில் உகாண்டா வந்ததும் எல்லாவற்றையுமே ஆச்சர்ய கண்கொண்டு கூர்ந்து கவனிப்பது வழக்கம் அதுபோலவே காகத்தையும் கண்டேன் அவைகள் நம்மூர் காகங்களைவிட பெரிதாக அண்டங்காக்கைப்போல கரிய நிறத்தில் இருந்தன அவற்றின் பிடரியிலும் கழுத்திலும் வெண்மை நிறம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஆனாலும் உகாண்டா காக்கை கரைந்ததை கேட்டதில்லை ஏனென்றால் அவை நம்மூர் காகங்கள்போல் அதிகம் கரைவதில்லை இருந்தாலும் கடிதம் வரத்தான் செய்தது. இப்போது மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் கூடத்தான்.
சற்றுமுன்னர் பெய்த மழையில் நினைவை தட்டியெழுப்பியது அதுவே ஒரு துளியாக ஹைக்கூ கவிதையாக வெளிப்பட்டது.
உகாண்டா நினைவுகள் ....!
தொடரலாம்

.ராஜா வாவுபிள்ளை

No comments: