ஆயிரத்தி தொளாயிரத்தி ஐம்பதுகளின் இறுதிக் காலம் அது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்.. தான் துவங்கி இருந்த எலக்ட்ரிக் கடையில் தனது கல்லாவின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறான் இருபது வயதுகளின் மத்தியில் இருக்கக்கூடிய அந்த இளைஞன்.
அப்போது கடைக்கு வருகிறார் விற்பனை வரித் துறை அதிகாரி. வந்தவர் கல்லாவில் அமர்ந்து இருக்கும் அந்த இளைஞனை எழச் சொல்கிறார் . காரணம்..அப்போதெல்லாம் தமிழகமெங்கும் சேல்ஸ் டேக்ஸ் ஆஃபீசர் ஆய்வுக்கு வந்தால் நேராகச் சென்று முதலாளியின் இருக்கையில் அமர்ந்துதான் கணக்கு வழக்குகளைப் பார்ப்பார். அவர் பார்த்து முடிக்கும் வரை முதலாளி அவர் அருகில் நின்று கொண்டு இருக்க வேண்டும். இதுதான் வழக்கம். இது அந்த இளம் முதலாளியும் அறியாதது அல்ல.
இருப்பினும் தனது இருக்கையில் இருந்து எழ மறுத்து " உங்களுக்குத் தேவை எனது கொள்முதல் பில்களும், விற்பனை பில்களும், கணக்கு வழக்கு புத்தகமும்.. அவற்றைத் தருகிறேன். ஒரு ஓரமாக அமர்ந்து சரி பாருங்கள். ஆனால் என் இருக்கையில் நீங்கள் அமர நான் அனுமதிக்க மாட்டேன்" என்று உறுதியாக மறுக்கிறார்.
கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த அதிகாரி தகாத வார்த்தை பேச பதிலுக்கு அந்த இளைஞனும் பேச " உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கூறிச் சென்ற அதிகாரி காவல் நிலையம் சென்று அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தன்னை தாக்கியதாகவும் புகார் அளிக்கிறார். அந்தப் புகாரின் பேரில் அந்த இளைஞனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.
அப்போது அந்த ஊரில் வர்த்தக சங்கத் தலைவர் கருப்பையாபிள்ளை. விசயம் தெரிந்த பிள்ளை கடை வீதியில் அத்தனை கடைகளையும் அடைக்கச் சொல்லியதோடு தமிழகம் முழுவதும் வர்த்தகர் சங்கங்களை தொடர்பு கொண்டு கடைகளை மூடச் செய்கிறார். விசயம் முதல்வர் காமராசர் கவனத்திற்குச் சென்று அந்த இளைஞனை விடுதலை செய்ததோடு " இனி விற்பனை வரி அதிகாரிகள் முதலாளி சீட்டில் அமர்ந்துதான் கணக்கு பார்ப்பேன்" என்று சொல்லும் திமிர்தனத்தை தடுத்ததோடு வணிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை குடுக்கிறார்.
சின்ன பையனான தன் மீது இருந்த நியாயத்திற்காக இறங்கி வந்த அவ்வ்வ்வளவு பெரிய முதல்வர் மீது மரியாதை கொண்டு அந்த இளைஞன் காங்கிரஸ்காரன் ஆகிப் போனான். இயல்பிலேயே சுயமரியாதை ஊறிப் போன அவன் இரத்தத்தில் பிறந்த அவன் மகன் பெரியார் பின்னால் போய் விட்டான்.
# அவன் இஸ்மாயில். இவன் அப்துல்லா.
M.m. Abdulla
No comments:
Post a Comment