பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் மானாவாரியாய் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாதில்லையா? எனவே, உரையாற்ற விரும்புபவர் தமது கருத்தையும் வாக்கியங்களையும் எழுதித் தெரிவிக்க வேண்டும். குழுவொன்று அதைப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கும் என்பது ஏற்பாடு.
பெரும்புள்ளிகளும் சிந்தனையாளர்களும் அறிவில் மூத்தவர்களும் வீற்றிருக்கும் மேடை என்பதால், சீரிய கருத்தும் செம்மையான மொழியும் கொண்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு நிமிடம் பேசினாலே போதும், கிடைத்தற்கரிய வாய்ப்பு அது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்ததால், விஷயமுள்ளவர்கள் பெருமுயற்சி எடுத்து மெனக்கெட்டார்கள். மற்றவர்கள் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் வர்த்தக மூளை உடம்பெங்கும் பரவியிருந்த ஒருவன் இருந்தான். அது அவனுக்கு விறுவிறுவென்று வேலை செய்தது. நிறுவனங்களுடன் இலாப ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, ‘இந்தா பிடி’ என்று அங்கு நிரம்பியிருந்த அனைவருக்கும் ஆளுக்கொரு மைக் அளிக்க ஆரம்பித்தான். அதுவும் முற்றிலும் இலவசம். விளைவு? மேடை ஏறித்தான் பேச வேண்டும், அதுவும் குழுவொன்றின் பரிசீலனைக்குப் பிறகுதான் அனுமதி என்ற கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது கும்பல். நல்லதோ, கெட்டதோ, கண்றாவியோ - உரத்த குரலில் ஆளாளுக்கு மைக்கில் தத்தம் கருத்துகளைப் பொழிய ஆரம்பித்தனர். மொழி நாகரிகம், அவை நாகரிகம் என்பதெல்லாம் காற்றோடு தூசாக, கழுதை மேய்ந்த களமானது அரங்கு.
விளக்கம் அதிகம் தேவைப்படாத உவமை இது. அச்சிலும் பத்திரிகையிலும் தமது ஆக்கங்களும் கருத்துகளும் இடம்பெற வேண்டுமென்றால் அதற்கு மக்கள் மெனக்கெட வேண்டியிருந்தது ஒரு காலம். அதனால் மொழியும் தரமும் சமரசத்திற்கு இடமில்லாமல் முக்கிய அங்கம் வகித்தன. சமகாலத்தில் அத்தகு கட்டுப்பாடுகள் எதுவுமின்றி நீயே ராஜா, நீயே மந்திரி' என்று அலங்கார வாசலொன்றை சோஷியல் மீடியா அகலத் திறந்து இலவச அனுமதி அளித்ததும் சென்னை நகரின் பிரபல ஆறாய் மாறிப்போனது நிலைமை. அவற்றில் மிதந்து வரும் நறுமணப் பூக்களை தேடிக் கண்டுபிடித்து எடுப்பது பெரும் பிரயத்தனம்!
மாற்றமும் முன்னேற்றமும் கால நகர்வில் இன்றியமையாதவை. அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது. ஆனால் நாகரிகத்தையும் நாவடக்கத்தையும், இறையச்சத்தையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாக அமைத்துக்கொண்டால் அது நமக்கு நலம், சமூகத்துக்கும் ஆரோக்கியம். எழுத்தோ, பேச்சோ, கலந்துரையாடலோ, சோஷியல் மீடியாவோ - எதுவாக இருந்தாலும் இது அடிப்படை விதியாக அமைய வேண்டும்.
முந்தைய அத்தியாயங்களில் தகவல் பரிமாற்றத்தில் எவையெல்லாம் கூடாது என்று பட்டியலிட்டுப் பார்த்துவிட்டோம். இனி எவையெல்லாம் தேவை, முக்கியம் என்பதைப் பார்ப்போம்.
1. மரியாதை - மரியாதை முக்கியம். மிக முக்கியம். பெற்றோராகட்டும், ஆசிரியராகட்டும், கணவன்-மனைவியாகட்டும் மரியாதையற்றப் பேச்சு, மரியாதை குறைவான பழக்கம் வெகு உடனே அதன் விளைவைக் காண்பித்துவிடும். அடி, உதை, திட்டு, கோபம், அறைக்கு வெளியே படுக்கை என்று உறவுக்கேற்ப அது மாறுபடும். காசுக்காகவும் காரியத்திற்காகவும் மரியாதையை இழந்து தாழ்ந்துபோகும் அரசியல்வாதிகள்கூட தங்களுக்கான வாய்ப்பு அமையும்போது அதற்குரிய எதிர்வினையை மறைப்பதில்லை. எனவே, மரியாதைக்குரிய தகவல் தொடர்பு நமது வெற்றிக்கு முக்கியம்.
உதட்டளவிலான போலி மரியாதையை மனித மூளை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நாம் யாருக்குக் கட்டுப்பட்டிருக்கிறோமோ அவரிடம் மரியாதை என்ற பெயரில் குழைவதும் நமக்குக் கீழுள்ளவரை அவமரியாதையுடன் அதட்டி, உருட்டி காரியம் சாதிக்க நினைப்பதும் இழிசெயல். மரியாதை மனத்திலிருந்து உண்மையாய் வெளிப்படும்போதுதான் உரையாடுபவர் மனத்தில் நாம் மதிக்கப்படுகிறோம் என்ற திருப்தியும் மகிழ்வும் இயல்பாய் ஏற்படும். நமது கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அவர் செவிசாய்க்க வாய்ப்பு அமையும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமரசத்திற்கு சாத்தியம் உருவாகும். 'நாயே, பேயே, சொம்பு' என்று சகட்டுமேனிக்கு ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு காரியத்தையும் சாதிக்க முடியாது, வெள்ளைக் கொடியையும் பறக்கவிட முடியாது.
2. அமைதி - அமைதியான தகவல் பரிமாற்றம் அடுத்தது. கூச்சலும் ஆத்திரமுமாக வெளிப்படும் வார்த்தைகள், நம் பக்கம் நியாயம் இருந்தாலுமேகூட எதிர்வினையைத்தான் உருவாக்கும். ஏட்டளவில் இன்றி, தனிப்பட்ட முறையில் எனக்கு அனுபவம் கற்றுத்தரும் பாடம் இது. அமைதியாகவும் நிதானமாகவும் பரிமாறப்படும் கருத்துகள்தாம் முக்கியத்துவம் பெறுகின்றன. தவிர, நமது அமைதியான அணுகுமுறை எதிர் தரப்பையும் தொற்றிக்கொள்ளும். பெரும் பிரச்சினைக்குரிய விஷயமேயானாலும் இரு தரப்பும் அமைதியாக அணுகும்போது அவ்விஷயத்தின் நன்மை தீமைகளை அனைவரும் தெளிவாய்ச் சிந்திக்க, அதற்கேற்ப முடிவெடுக்க அது வழியமைக்கும்.
3. நளினம் - காரசாரமான விஷயங்களாகவே இருந்த போதிலும் நளினமான முறையில் அதை எடுத்துரைப்பதும் தெரிவிப்பதும் முக்கியம். கருத்து வேறுபடுகிறார் என்பதற்காக கத்தியை எடுத்துக் குத்தினால் என்னாகும்? காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைய வேண்டியதுதான். மாறாக அணுகும்முறையில் மென்மை ஏற்படும்போது அது இணக்கத்தை உருவாக்கி, களேபரத்தைத் தடுக்கும்.
திண்ணமாக அல்லாஹ் நளினமானவன்; நளினத்தை விரும்புபவன். நளினத்தை ஏற்றுக் கொள்வதைப்போல் அவன் முரட்டுத் தனத்தை ஏற்றுக் கொள்ளதில்லை (கருத்து : முஸ்லிம் 4374; புகாரீ 6927) என்பது முக்கியமான நபிமொழி.
தொடரும்...
http://www.satyamargam.com/
No comments:
Post a Comment