Monday, August 7, 2017

"மருத்துவ முத்தம்"

Rafeeq Sulaiman
"மருத்துவ முத்தம்"
2011இல் என்று நினைவு.
ஒரு தாய் தான் பாலூட்டும் குழந்தையினை முத்தமிடும் வேளையில் குழந்தையின் முகத்திலோ அல்லது உடலிலோ எங்கேனும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருந்துவிட்டால், அது தாயின், 'டான்ஸில்' போன்ற துணைநிலை நிணநீர் சுரப்பிகள் மூலம் உணரப்பட்டு 'பி -டைப்' நினைவக செல்கள் மூலம் குறிப்பெடுத்துக்கொள்கிறது. பிறகு அந்த நோயினை எதிர்க்கும் சக்தியினைத் தயாரிக்கும் தாயின் உடல் தாய்ப்பால் வழியே குழந்தைக்குச் சேர்க்கிறது. நோயிலிருந்து காக்கிறது.

இந்த மருத்துவச் செய்தியினைத் தழுவி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி தனது கல்லூரியில் நடக்கும் பேசசுப் போட்டியில் பேசுவது போன்ற கட்டுரையினை ' கன்னத்தில் முத்தமிட்டால்' என்று தலைப்பிட்டு அப்போது Siraj Ul Hasan அவர்கள் பொறுப்பாசிரியராக இருந்த சமரசம் இதழுக்கு (பத்திரிகைதாங்க ;) ) அனுப்பியிருந்தேன். அவரென்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'முத்தமில்லை பதவியில்லை' என்று அதே கட்டுரையில் முத்தம் தொடர்பாக சுட்டியிருந்த இன்னுமொரு வரலாற்றுச் சம்பவத்தைக் கோடிட்டு தலைப்பை மாற்றி வெளியானது அந்தக் கட்டுரை. நமது நிருபர் போன்ற வலைப்பூ தளங்களும் வெளியிட்டன.
அதுவேற இதுவேற என்று சொல்பவர்களுக்கு
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ரெம்கோ கார்ட் எனும் ஆராய்ச்சியாளர் (அன்புடன்) தரும் அனைத்து முத்தமும் மருத்துவ குணம் மிக்கது - இவர்கள் மொழியில் சொன்னதுபோல 'மருத்துவ முத்தம்'தான் என்று 2014இல் ஒரு நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தார்.
நமது உடலில் நூறு ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் அனுதினமும் பிறக்கின்றன. இவைகளை microbiome என்று அழைக்கிறார்கள். இவைகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கி நாம் உட்கொள்ளும் உணவுகளைச் செரிக்கும் பணி, உடலினை நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பணி என ஒரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் போல இரவுபகலாக அயராது உழைக்கிறது.
Microbiome என்ற குழுவில் உள்ள தனியொரு செல்லை Microbiota என்கிறார்கள். வயது, மரபுவழி மற்றும் உட்கொள்ளும் உணவு ஆகியவை இவைகள்
மட்டுமன்றி நாம் நெருங்கிப் பழகுபவர்களும் இதை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாகிறார்கள்.
நமது சுற்றுப்புறங்களால் இந்த மைக்ரோபயோடா பெரிதும் பாதிப்படைகின்றன. சாதாரணமாக நம் ஒவ்வொருவரின் வாயிலும் சுமார் எழுநூறு வகையான பாக்டீரியாக்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர்.
சோதனைக்குட்படுத்தப்பட்ட தம்பதியரிடம் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் தரும் பானமதை அருந்தச் சொல்லி, பிறகு அவர்கள் உமிழ்நீர் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் லேக்டோபேசில்லஸ் மற்றும் பயோ ஃபீடோ பாக்டீரியா போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறித்துக்கொள்ளப்பட, அடுத்தது அவர்கள் அன்போடு நெருக்கமாக முத்தமிட பத்து வினாடிகள் கொடுக்கப்பட்டது. இப்போது உமிழ்நீர் சோதனையில் அதே (நன்மைதரும்) பாக்டீரியாக்கள் மும்மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. பத்துவிநாடி முத்தத்தில் என்பது மில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாம்.
இதெல்லாம்விட...
முத்தம் - நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது; கலோரியை எரிக்கிறது; அதிகமான ஆக்சிடாஸின் கொடுத்து அமைதிப்படுத்துகிறது.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சார், 'மருத்துவ முத்தம்' அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. முத்தமே மருத்துவம்தான் - அன்போடு முத்தமிட்டால் .......
 Rafeeq Sulaiman

No comments: