கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து
மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! – மன்னுபுகழ்
பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி
இன்னும் கலையுறுக ஈங்கு!
அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும்
இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! – நன்வாழ்கை
அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்!
பொன்னை அகமேந்தும் பூத்து!
கம்பன் இதழேங்கக் கற்ற கலையளித்த
நம்மின் தமிழ்நெஞ்சம் நல்லமினார்! – செம்மொழியை
எங்கும் பரப்பும் இனியபணி ஓங்குகவே!
பொங்கும் புகழிற் பொலிந்து!
நல்ல இதழ்ப்பணியை நாடிப் படைக்கின்ற
வல்ல தமிழ்நெஞ்சம் வண்ணமினார்! – பல்லாண்டு
வாழ்க! வளங்கள் வளர்ந்தோங்கி விண்ணருளால்
சூழ்க நலங்கள் சுடர்ந்து!
நூலின் வடிவமைப்பாம் நுட்பம் பலகற்ற
பாலின் தமிழ்நெஞ்சம் பண்ணமினார்! – ஆலின்
தழைப்பேந்தி வாழ்க! தனித்தமிழ் கொண்ட
செழிப்பேந்தி வாழ்க சிறந்து!
No comments:
Post a Comment