நீட்டாக ஒரு உரையாடல்
நேற்று வீட்டுக்கு இருவர் வந்திருந்தனர். அவர்களோடு உரையாடுகையில், மூன்றாவதாக ஒரு தோழியின் மகள் குறித்துப் பேச்சு வந்தது. அவள் கடந்த ஆண்டே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். எட்டு லட்சம் நன்கொடை கொடுத்து தனியார் கல்லூரியில் சேர்ந்தாள் என்றார்கள். எட்டு லட்சம் மிகவும் குறைவுதான்.இப்போது வந்திருந்த ஒருவரின் மகள் நீட் தேர்வு எழுதியிருக்கிறாள். ஸ்கூல் டாப்பர், இடம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் நிச்சயமற்ற நிலை இருப்பதால் அவர் சற்றே ஆத்திரத்துடன் பேசினார். அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அவர் பேசிய கருத்துகள் பொதுவாக மேல்தட்டு மக்களின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தன. என்னால் இயன்ற வரையில் அவருக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினேன். தெளிவு பெற்றாரா தெரியாது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித இடம் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்ததை நீதிமன்றம் ரத்து செய்தது அவருக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளித்தது. காரணம், அவருடைய மகள் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் பயின்றிருக்கிறாள். உங்கள் மகள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றிருந்தால் இப்போது என்ன சொல்வீர்கள் என்று நான் கேட்கவில்லை. :) சிபிஎஸ்ஈ முறைப்படி கேள்விகள் தயாரித்த்து தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி படித்தவர்களுக்கு துரோகம் இல்லையா? அதிலும், சில மாநிலங்களில் எளிதான கேள்வித்தாள், சில மாநிலங்களுக்கு கடுமையான கேள்வித்தாள் என்பது இன்னும் துரோகம் இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.
ஆமா, அது தப்புத்தான், ஆனா அதுக்காக இப்படி ஒதுக்கீடு செய்ய முடியுமா என்று கேட்டார். ஒதுக்கீடும் தப்புத்தான்னு வச்சுக்குவோம், ஆனா இப்படி விதவிதமா கேள்வித்தாள்கள் குறித்து நீங்கள் ஏன் பேசவே இல்லை என்று கேட்டேன். பாவம் அவருக்குத் தெரியாது.
அது சரி, நீட் எதற்கு? மார்க்குகளின் அடிப்படையில் இடங்கள் தர வேண்டியதுதானே என்றேன். ஐஐடி உள்பட எல்லாத்துக்கும் என்ட்ரன்ஸ் இருக்குதானே என்றார். அதுதான் எதற்கு என்று கேட்கிறேன். நாளை பத்தாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு போவதற்கு நுழைவுத்தேர்வு வைப்பார்களா? ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு வைப்பார்களா? என்று கேட்டேன். அப்படிப்பார்த்தால் இருக்கிற சீட்கள் எல்லாருக்கும் போதாதே என்று கேட்டார். நம் நாட்டில் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை கிடையாது. இன்னும் எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் வந்தாலும் போதாது. அப்படியிருக்கையில், இன்னும் கல்லூரிகளைக் கட்டி இன்னும் அதிக இடங்களை உருவாக்க வேண்டுமா இல்லை, இருக்கிறவர்களுக்குள் மோதலை உருவாக்க வேண்டுமா என்று கேட்டேன். எல்லாவற்றுக்கும் நுழைவுத்தேர்வு என்றால் பள்ளிகளில் தேர்வுகள் எதற்கு? அவற்றை எடுத்துவிட்டு முதல் வகுப்பிலிருந்தே நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்யத் துவங்கி விடுவது உத்தமம் அல்லவா? மற்ற படிப்புகளுக்கெல்லாம் கட்-ஆஃப் வைத்திருப்பதுபோல இதற்கும் வைத்துக் கொண்டால் போதாதா என்று கேட்டேன். பாவம் அவருக்குத் தெரியாது.
தமிழ்நாட்டில்தான் எக்கச்சக்கமான காலேஜ் இருக்கு என்றார். உண்மை. அதனால்தான் தமிழ்நாடு மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் என்னதான் ஊழல் இருந்தாலும் பொது மருத்துவச் சேவை தமிழகத்தில் இருப்பது போல எங்கும் கிடையாது என்றேன். இதுவும் அவருக்குத் தெரியாது.
அவர் முன்வைத்த இன்னொரு கருத்து – நீட் தேர்வால் தகுதி உடையவர்கள் மட்டும்தான் மருத்துவர்கள் ஆக முடியும், தகுதி இல்லாதவர்கள் நுழைய முடியாது.
இதுதான் எனக்கு மிகவும் அதிர்ச்சியான - இல்லையில்லை, கடுப்பேற்றிய விஷயம்.
நீட் என்பது இடத்தைப் பிடிப்பதற்கான நுழைவுத் தேர்வுதானே தவிர, நீட்டில் தேர்ச்சி பெற்று இடத்தைப் பிடிப்பவன்தான் நல்ல மருத்துவனாக வருவான் என்று யார் சொன்னது? உங்கள் மகள் ஸ்கூல் டாப்பர். நீட்டிலும் தகுதி பெற்று விட்டாள், இடமும் கிடைத்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் சரியாகப் படிக்காவிட்டால் அவள் நல்ல மருத்துவராகி விட முடியுமா? நீட் போன்ற நுழைவுத் தேர்வு, இடம் கிடைக்க உதவுமே தவிர, அடுத்த ஐந்தாண்டுகளில் மாணவரின் படிப்பு, தேர்வு, தகுதி ஆகியவற்றுக்கு எந்த உதவியும் செய்யாது. அதுபோக, மருத்துவத்துறையில் தமிழ்நாட்டிலேயே சிறந்து விளங்குவது தமிழகம்தான். நுழைவுத் தேர்வு இல்லாமல் தகுதியில்லாதவர்கள் நுழைந்து விட்டார்கள் என்றால் தமிழகம் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்க முடியுமா என்று கேட்டேன். பாவம் அவருக்குத் தெரியவில்லை.
இந்தப்பதிவை எழுதுவதன் காரணம், கடைசிப் பத்தியில் குறிப்பிட்ட விஷயம்தான். நீட் தேர்வு இல்லாதபோது தகுதியில்லாதவர்கள் மருத்துவர்கள் ஆகிவிடுகிறார்கள் என்று கோட்டுப்போட்ட சில அறிவுக்கொழுந்துகள் இங்கே விஷ(ம)த்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் தகுதி இல்லாதவர்கள் படிக்க வந்து விடுகிறார்கள் என்று விஷம் கக்குகிற அதே விஷமக் கொழுந்துகள்தான் இவையும்.
கடைசியாக இன்னொன்றும் சொன்னேன். இந்த அரசு எதைச் செய்கிறதோ இல்லையோ, மாநிலங்களிடமிருந்து அதிகாரத்தைப் படிப்படியாகப் பிடுங்கிக் கொண்டே இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாதவரை நீட், ஜிஎஸ்டி என தனித்தனிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பயனில்லை.
Shahjahan R
No comments:
Post a Comment