மக்கள் மனதில் ஆட்சி புரிவது என்பது ஒரு வரம்.இது ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் வழங்கிய அருட்கொடை.
குமரி மாவட்டம் - மண்டைக்காடு கலவரங்களின் பிண்ணணியில் சிதறுண்டு கிடந்த போது அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஒரு துடிப்பான இளைஞரை குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்ய விரும்பினார். முதல்வரின் நேரடிப் பார்வையில் மாவட்டத்தை மத நல்லிணக்க மாவட்டமாக மாற்றியமைக்க அரும்பாடு பட்ட அந்த இளைய, அந்த நாள் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தான் முனீர் ஹோடா IAS
சிஎம்டிஎ தலைவர், உள்துறை செயலாளர் மெட்ரோ ரயில் தலைவர், மாநில தேர்தல் ஆணையர் போன்ற பெரிய பதவிகளில் அமர்ந்த போதும் மாவட்ட கலக்டர் என்ற சிறப்புப் பெயரில் இன்றும் மாவட்ட மக்களால் அறியப்படுபவராக இவர் இன்றும் திகழ்கிறார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற சில நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்த பெருமை இந்த அதிகாரியின் நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சக அதிகாரிகள் கருதினர்.
முதல்வர் கேட்டுக் கொண்ட பின்னரும் பதவியில் தொடர இவர் விரும்பவில்லை.
கல்விப் பணியில் அதீத அக்கறை காட்டும் இவர் ஏழை மாணவர் நலன் கருதி ஒரு அறக்கட்ளை (trust) ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
சென்னையின் பிரபல எஸ்ஐஇடி போன்ற கல்வி குழுமங்களின் நிரந்தர செயலாளராக திகழும் இவர் அந்த கல்லூரி சென்னை பல்கலை கழகத்தின் முதல்தர கல்லூரியாகும் அளவுக்கு அதன் தரத்தை உயர்த்தி காட்டி இருக்கிறார்.பல தொழில்நுட்ப கல்லூரிகளின் ஆலோசகராக திகழும் இவர் அந்த நாள் ஜாம் ஷெட்பூர் பல்கலைக்கழக முதல் நிலை MBA மாணவர்.கோல்ட் மெடலிஸ்ட்.
சில நாட்கள் முன்பு நாகர்கோவில் வந்த முனீர் ஹோடாவைக் காண நூற்றுக் கணக் கில் மக்கள் கூடுவர் என்று நான் எண்ணவில்லை.ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழா- பிரதம விருந்தினராக வந்த இவரை வரவேற்று நகர் முழுக்க அலங்கார வளைவுகள், பதாதைகள் என்று வைக்கப்பட்ட நிகழ்வு பதவியில் இல்லாத போதும் நகர மக்கள் இவர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது என்று சொல்லலாம்.
நகரில் அமைந்த சிறப்பு மருத்துவமனைகள் பிரபல மருத்துவர்கள் என பிரபலங்கள் பலர் இவரை அழைத்து கவுரவித்ததை கண்டு நான் சற்று நெகிழ்ந்து போனேன்.
எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடுவார்..
"இருந்தாலும் இறந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவன் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
முனிர் ஹோடா என் நண்பர் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
அவரை என் நண்பர்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்து வைப்பதில் அக மகிழ்கிறேன்
Vavar F Habibullah
No comments:
Post a Comment