இருப்பு.
இருப்பு என்பதற்கு இருப்பது (Sitting) என்பது மட்டுமே பொருளல்ல.'இருப்பு சரியாக இருந்தால் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்' என்பது எங்கள் தந்தையார் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் கணக்கு எழுதும் கணக்காப் பிள்ளைகள் ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து காலில்லாத மேஜையில் பெரிய பேரேடுகளை வைத்து சம்மணமிட்டு அமர்ந்து கணக்கு எழுதுவார்கள்.
இங்கும் இருப்பு மிக முக்கியம். அவர்களது தொழில் தனிப்பட்ட கணக்காளராக இருந்ததால் இருப்பு கணக்கு மிகமுக்கியமாகப் பட்டிருக்கலாம். லாப நஷ்ட கணக்கு சரியாக வரவேண்டுமானால் சரக்கு இருப்புக் கணக்கு மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பது கணக்குப்பதிவியலின் அடிமட்ட அத்தியாவசியங்களுள் முதன்மையானதாகும்.
இருந்தாலும், கை இருப்பாகவோ வங்கியில் நிலுவையாகவோ 'ரொக்க இருப்பு' இருந்தால்தான் தனி மனிதனுக்கோ, நிறுவனதிற்கோ, அமைப்பிற்கோ அல்லது சர்வ சுதந்திரமும் பெற்ற நாட்டிற்கும் கூட தனிமரியாதை இருக்கும். இருப்பு இல்லையென்றால் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு முன்னேறிய நாடுகளின் தயவில் காலம் கடத்த வேண்டியதுதான். அந்நிய செலாவணி இருப்பு இருப்பதைக்கொண்டே ஒருநாட்டின் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப் படுகிறது.
தற்போதைய சூழல்களில் எல்லோருமே இருந்து கொண்டுதான் எல்லா வேலைகளையும் செய்கிறோம். அலுவலகத்தில் வேலைபார்க்கும்போது கூட இருக்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் சொல்லித் தருகிறார்கள். கெட்ட இருப்பு இருப்பதால் முதுகுத் தண்டுவடம் பாதிப்புள்ளாகும் வாய்ப்பு அதிகமாம். நல்ல இருப்பு இருந்தாலுமே ஒரேயடியாக இருக்காதீர்கள் நில்லுங்கள், நடங்கள் முடிந்தால் ஓடுங்கள். ஆரோக்யம் சேந்து கொள்ளும் உங்களோடு என்பது அப்பட்டமான உண்மை.
முக்கியமாக, உயிர் இருக்கும் வரைதான் உடல் இருக்கும். உடல் ஆரோக்கியமாய் இருந்தால்தான் உயிரும் அதில் தங்கி இருக்கும். எல்லோரும் எப்போதும் இருந்து கொள்ளலாம் என்றாலும் அதுவும் இயலாத காரியம்தான்.
அப்படியென்றால் என்னதான் செய்வது?
மனிதர்கள் யாவரும் தமது இருப்பை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் இறப்பை இறைவன் பார்த்துக் கொள்வான்.
தத்தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் யாவரும் ததிகிடதோம் ஆடியவண்ணம் இருக்கிறோம்.
'இருப்பது விருப்பானால்
விரும்பியது இனிதாகும்' - என்று நான் என்றோ எழுதிய கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment