Wednesday, July 19, 2017

Abu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந்திறங்கி பணிகள் துவங்கின ...


இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

அமுதெனும் தமிழால் பண் பாடி உலவும் வெண் தாடி வேந்தருக்கும் எனக்கும் நிலவும் ஆத்மார்த்த அன்பு வலிமை வாய்ந்தது ....

கவிஞர் எழுத்தாளர் கட்டுரையாளர் சமுதாய சிந்தனையாளர் புராதன வரலாற்று ஆய்வாளர் சமூக ஆர்வலர் போன்ற இன்னும் பல வண்ணமய நூல்களால் நெய்த ஏற்றம் மிகுந்த அவதார ஆடைகளை அணிந்து மகிழ்பவர் ...

முகநூல் சுற்றம் பாராட்டும் முற்றம் பத்திரிகை ஆசிரியரான கரீமுல்லாஹ் என்கிற அபு ஹாஷிமா அவர்களை ஊரில் சந்தித்து நான் உரையாடிய தருணங்களில் மகிழ்ச்சியெனும் பேனா எம்மிருவரின் உள்ளக் காகிதங்களில் வர்ணங்களை வரைந்தது ....



சிந்தனை மரத்திலிருந்து பழுத்து விழும் எழுத்துக் கனிகளை கழுத்து வலிக்க எளிமையான வார்த்தைகளாய் புனைந்து முகநூல் தட்டுகளில் நிரப்பி நமது நாவுகள் சுவைத்திட முனைந்து பரிமாறும் கெட்டிக்காரரான இவருக்கு நிகர் இவரே ....

விரலில் பூக்கும் எழுத்தையும் குரலில் பூக்கும் பேச்சையும் கரம் பிடித்து நடக்கும் பலரில் இவரும் ஒருவர் என்பதும் அவ்வறிவு இவருக்கு இறைவன் கொடுத்த வரம் என்பதும் நிதர்சன உண்மை ....

வரலாறுகளை பலப்படுத்திய கோட்டாறை பிரபலப்படுத்திய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது ....

தினமும் நடு நிசியில் தமது கண்களை உறக்கம் துளைக்கும் வேளையிலும் உடலும் மனமும் சளைக்கும் எண்ணமில்லாது நாட்டு நடப்புகளை சேகரித்து உற்சாக பாத்திரங்களில் சுடச்சுட சமைத்து விளம்புகிற ருசியான இவரது பதிப்புகள் படிப்போரை வியக்க வைப்பது மட்டுமல்ல இவர் அடுக்கும் எதுகையும் மோனையும் நம்மை மயக்க வைக்கும் ....

பதிவெழுதிய குறுகிய நேரத்தில் இவருக்கு பெருகும் லைக்குகளும் கருத்துரைகளும் பகிர்வுகளும் இவரது திறமைகளுக்கு சான்றுகள் எழுதுகிறது என்பதை முகநூல் நட்புகள் நன்கறிவர் ....

நான் எழுதுகிற பல பதிவுகளுக்கு இவர் அருமையாக கருத்துரைத்து என்னை பாராட்டுவதை நான் பெருமையாக கருதுகிறேன் ....

சிந்தனைக்கு சந்தம் அமைக்கும் கவிஞர் அபு ஹாஷிமாவுக்கும் எனக்குமுள்ள பந்தம் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே இடலாக்குடியில் எங்களது ஏவிஎம் சைக்கிள் கடையில் துவங்கியது என்பதையும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....

வல்ல இறைவன் அபு ஹாஷிமாவுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வளங்களையும் வழங்குவானாக ...

நட்புடன்
அப்துல் கபூர்
-------------------------------------------------------------
 உகாண்டா வந்திறங்கி 
பணிகள் துவங்கின ...


நட்பெனும் ஊற்றுகள்
அன்பால் பொங்கி
என்பால் தெளித்த
துவாவிலும் வாழ்த்திலும்
ஏகமாய் நனைந்து
சுகமாய் பயணித்தேன் ....

இறையருளின் சங்கமத்தில்
என்னை நலமாய்
வாழ வைத்து
ஆரோக்கிய பலமாய்
எழ வைத்திடும்
உகாண்டா வந்திறங்கி
அகம் மகிழ்ந்து
முகம் மலர்ந்தேன் ....

அல்ஹம்துலில்லாஹ் ....

வாழ்க்கை பிரகாசிக்க
பருக்கைகள் ஊட்டி
அரவணைக்கும் உகாண்டா
இருக்கைகள் விரித்து
இரு கைகள் நீட்டி
புன்னகையோடு வரவேற்றது ....

ஊரில் அனுபவித்த
விடுமுறை நாட்களில்
நேரில் உரையாடிய
நட்புறவுகளின் சந்திப்புகளில்
தேங்கிய நினைவலைகள்
மனச் சாலைகளில்
ஊர்வலம் நிகழ்த்திட
வருவாய்க்கு அச்சாரமிடும்
தொழிலக பணிகளை
சிறப்பாய் துவங்கினேன் ....

பேரருள் பொழிந்து
வாழ்வு ஏற்றமுற
பேரிறைவன் நல்குவானாக ....

அப்துல் கபூர்
18.07.2017 ...

No comments: