Friday, July 14, 2017

சிஷேரியன்

நம்பிவந்த
எங்களை பணத்திற்கு
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள்
பணத்தை உருவுகிறாய்!



விழித்து - நான்
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து
அடுத்தப் பிள்ளைக்கும்
கத்தியுண்டென சப்தமில்லாமல்
உணர்த்தினாயோ!

கருத்தடைக்கு நாங்கள்
கறுப்பு கொடிக்
காட்டுவதாலோ - இப்படி
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!

வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும்
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!

சிசுவென கூறி
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள்
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய்
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு
உண்டியலையும் உனதாக்கி!

பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?

by yasar arafat என் பக்கம் 

No comments: