அரபுத் தமிழ் பற்றி முன்பு எழுதியுள்ளேன். Dravidian Sahibs and Brahmin Moulanas என்ற நூலிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு. இதை அர்வி என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். இதுபற்றி Torsten Tschacher என்பார் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எழுதியுள்ள Islam in Tamilnadu: Varia என்ற நூல் இணைய வழி வாசிக்கக் கிடைத்தது. நூலாசிரியர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து எழுதி இருக்கிறார். அதுதவிர மேலும் சில தேடல்களிலிருந்து...
அரவம் + அரபி என்பதுதான் அர்வி என்றாகியது என்றும் அரபி என்பதே அர்வி என மருவியது என்றும் கூறப்படுகிறது.
அரவம் என்றால் தமிழ் மொழியாம். அரவம் என்பதற்குக் கூறப்படும் சில காரணங்களைப் பார்ப்போம்...
போருக்கு முன் வீரர்கள் சப்தமிடுவதை அரவம் என்பர். அதைப் போன்று கத்திப் பேசும் வழக்கமுடைய மக்கள் பேசும் மொழி என்பதால் தமிழை அரவம் என்றனர்...
தமிழகத்தின் வடக்கில் உள்ள தொண்டைநாட்டின் ஒரு பகுதி அருவா நாடு எனப்பட்டதாம். அருவாநாட்டு மக்கள் பேசிய மொழி அரவம்...
தெலுங்கு, கன்னடம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் 35 மெய்யெழுத்துகள் உண்டாம். தமிழில் அதில் அரை பகுதி(யான 18) மெய் எழுத்துகளே என்பதால் "அர"வம்...
ஆயக்கலைகள் அறுபத்து நான்கு கலைகளையும் கூறும் மொழி என்பதால் (அரவை = அறுபது) அரவம்...
எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அரவம் + அரபி அல்லது அரபி திரிந்து அர்வி என பெயர்க்காரணத்தில் வேறுபடுவது போன்று, இது தோன்றிய காலத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பழந்தமிழருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த அரபியர் தமிழைப் பேசவும் கற்றுக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் வருகைக்குப் பின் இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்து கொள்வதற்காகவே அர்வி எழுத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், வங்காளம் துருக்கி, மலேசியாவின் ஜாவி, உஸ்பெக், ஸ்வாஹிலி என இஸ்லாம் தொடக்கத்தில் அறிமுகமான பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளை அரபு எழுத்தில் எழுதும் வழக்கும் அப்போதே தொடங்கிவிட்டிருந்தது.
#அர்வி #Arwi
அழகப்பன் அப்துல் கரீம்
No comments:
Post a Comment