Monday, July 31, 2017

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம்(வபாத்து) காலமானார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் செயலாளர், எனது தந்தையார் திரு.கா.முகமது இஸ்மாயில் அவர்கள் கடந்த 28/07/2017 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் இயற்கை எய்தினார்.
செய்தி அறிந்து நேரிலும், அலைபேசியிலும், குறுஞ்செய்தி மற்றும் முகநூல் மூலமும் எனக்கு ஆறுதலும், தேறுதலும் அளித்த அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், சினிமா வர்த்தகம் உள்ளிட்ட பிறதுறை நண்பர்கள், பள்ளி,கல்லூரி மற்றும் இணைய வழி தோழர்கள், உற்றார் உறவினர்கள் இவர்களோடு, உடன் தோள் நின்ற கழக உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அவர் இறைவனின் பாதத்தில் சொர்கவாசியாக விளங்க உங்கள் பிராத்தனைகளைக் கோருகிறேன். நன்றி.
M.m. Abdulla
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
குர்ஆன் 67:2



Jothimani Sennimalai

யாரையாவது சந்திக்கவேண்டும் என்று தோன்றினால் ,அதுவும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் தள்ளிப்போடாமல் உடனடியாக சந்தித்துவிட வேண்டும்.

எதிர்பாராமல் ஏதாவது நடந்து, பிறகு சந்திக்கவே முடியாமல்போய் வருந்த நேரிடலாம்.

அப்படித்தான் ஆகிவிட்டது அண்ணன் M.m. Abdulla அவர்களின் தந்தையார் விசயத்தில்.

அண்ணா அவரைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்கள், அவர்மீது அளவுகடந்த அன்பையும்,மரியாதையையும்
ஏற்படுத்துவதாக இருந்தன.

அவர் ஒரு காங்கிரஸ்காரர். கடைசிவரை காங்கிரஸ்காரராக வாழ்வதை பெருமையாக நினைத்து, அப்படியே வாழ்ந்தவர்.

ஆனால் தனது மகன் தீவிரமான திமுககாரராக இருப்பதற்கான உரிமையை மதித்தவர்.

"நான் பள்ளியில் படிக்கும் போது கீரை.தமிழ்செல்வனால் ஈர்க்கப்பட்டு திமுககாரனாக வளர்ந்தேன். ஆனால் ஒரு முறை கூட அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமுறை நானே காங்கிரஸ்காரனான உங்கள் மகன் வளரும் போதே திமுககாரனா மாறிபோய்ட்டேனே வருத்தம் இல்லையான்னு கேட்டேன். நாட்டுக்கே சுதந்திரம் வாங்கித் தந்தோம் உன் சிந்தனைக்கு உனக்கு நான் சுதந்திரம் அளிக்க மாட்டேனா என்றார்" என்று அண்ணா சொன்னபோது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது.

தனது நம்பிக்கைகளை தனது மகன் உட்பட யார்மீதும் திணிக்காதவர். அதே நேரத்தில் தனது நம்பிக்கைகளோடு எவ்விதமான சமரசமும் செய்துகொள்ளாத மனிதர். உண்மையான காங்கிரஸ்காரரி்ன் அடையாளம்!

பேரன்பும்,மனிதநேயமும் நிறைந்த அவரைப் பற்றி எனக்குள் இருந்த பிம்பத்தை நேரில் முதலும்,கடைசியுமாகப் பார்த்தபோது அப்படியே உறைந்துபோனேன்.

எனது கற்பனைப் பிம்பத்திற்கு உருவம் கொடுத்ததுபோல் உறங்கிக்கிடந்தார். மரணம் போல தெரியவே இல்லை. இறுதி உறக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம் .

அதிர்ந்து பேசாத மென்மையான அவருக்கு,சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டார் என்று சொன்னால் மட்டும் கோபம் வந்துவிடுமாம். அவ்வளவு பற்று!

நிறைவாழ்வு வாழ்ந்தவர். மரணமும் அவருக்கு அவ்விதமே அமைந்தது.

ஆனாலும் அவருடைய இழப்பு ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை, யாராலும் நிரப்ப முடியாது என்பதை உடைந்துபோய் இருந்த அப்துல்லா அண்ணனைப் பார்த்தபோது உணரமுடிந்தது.

சொல்வதற்கு ஆறுதல் வார்த்தைகள் ஏதும் என்னிடம் இருக்கவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இழப்பு... அவ்வளவு மகத்தான மனிதர் அவர்! அவரது ஆன்மா அமைதிகொள்ளட்டும்!

தேற்றிக்கொள்ளுங்கள் அண்ணா நாங்களிருக்கிறோம். Hugs!
Jothimani Sennimalai
நன்றி ஜோதி. எப்போதும் நீ எழுதுவதைப் படிக்கும் அப்பா இப்போது இதைப் படிக்க இல்லை :(

No comments: