எனக்குத் தலை வலிக்கிறது என்று
எப்போதாவது உன்னிடம்
சொல்லவரும்போது
உனக்கு எப்போதுமே
தலை வலித்துக் கொண்டிருப்பதாக
அலுத்துக் கொள்கிறாய்
பல்வலிப்பது போலிருக்கிறது எனும்போது
நீ எப்போதுமே பல்வலியோடே
வாழ்ந்து கொண்டிருப்பதாக மாய்ந்துபோகிறாய்
நேற்று சரியாகத் தூங்கவில்லை எனும்போது
நான் தூங்கி வெகுநாட்களாகி விட்டதென
ஒரு மாபெரும் துயரச் சரிதத்தைச்
சொல்லத் துவங்குகிறாய்
எனக்கு அபூர்வமாக ஏற்படும் உபாதைகளுக்கு
புறக் காரணிகள் ஏகமுண்டு
ஆனால்
உன் நிரந்தர நோவுகள் அனைத்திற்கும்
அகக்காரணியாய்
என் பொருட்படுத்தாமை மட்டுமே உண்டு
ஒரு கனிவான புன்னகை
ஆதரவான ஒரு தடவல்
கொஞ்சம் அக்கறையான விசாரிப்பு
எனும் இலகு மருந்துகளால்
இருவரையும் குணப்படுத்தவியலும் எனும்போது
நாம் ஏன் ஒவ்வாமையை உருவாக்கும்
கடின மருந்துகளை நோக்கி நகரவேண்டும் ?
என் தலைநோவு போக்கும்
மாமருந்து நீயென்றாள்,
என் மனப்புழுக்கம் தீர்க்கும்
ஆசுவாசம் நீயென்றேன்.
நிஷாமன்சூர்
No comments:
Post a Comment