Saturday, July 22, 2017

பயணம் ! - அபு ஹாஷிமா

மேகங்களை 
கிழித்தெறிந்தபடி
மின்னல் வேகத்தில் 
பறந்து கொண்டிருந்தது
பயணம் !
கர்பலாவிலிருந்து 
கொடூர சிரிப்பொலி எழுந்தது !
ஹுசைனாரின் 
அறுத்தெடுக்கப்பட்ட 
தலையை வைத்துக் கொண்டு 
கூபா வாசிகள் 
கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள் !
டமாஸ்கஸ் நகரின்
அரண்மனை 
மஞ்சத்தில் 
யஜீது சிரித்துக் கொண்டிருந்தான் !
பயணம் கொஞ்சம் 
முன்னேறிச் சென்ற போது 

மனைவி ஜஹ்தா கொடுத்த
விஷமூட்டப்பட்ட 
உணவை உண்டு
ஹசன் இறந்து கொண்டிருந்தார் !
பயணத்தின் இறக்கைகள்
முன்நோக்கி நகர்ந்து செல்ல
அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் முராதி 
வீசிய வாள்
அலீ அவர்களின் நெற்றியைப்
பிளந்து 
உயிரைக் குடிக்க ஆரம்பித்தது !
பயணத்தின் திசை 
மதீனாவை நோக்கி திரும்பிய 
இருட்டான நேரத்தில்
ஃபாத்திமாவின் உடலை
வீட்டுக் கதவின் மீது வைத்து 
சுமந்து வந்து கொண்டிருந்தார் 
கணவர் அலீ !
அருகிலேயே 
ஹசனும் 
ஹுசைனும் !
உஹதுக் களத்தின் மேல்
பயணத்தின் பார்வை 
பதிந்த வேளையில் 
வீரர் ஹம்சாவின் ஈரலைக் 
கடித்துக் கொண்டிருந்தாள் 
ஹிந்தா !
மூத்தாவில் ஜாபரையும்
பத்ருக் களத்தில் உபைதாவையும்
வெட்டிக் கொண்டிருந்தார்கள் !
மக்காவின் வீதிகளில் 
மரண ஓலம் கேட்டு
எட்டிப் பார்த்த போது
மூதாட்டி சுமைய்யாவின் 
பிறப்புறுப்பில் 
அம்பெய்து கொன்று கொண்டிருந்தான்
அபு ஜஹல் !
முதுகு வெந்து எரியும்
வேளையிலும்
" அஹதுன் ... அஹதுன் ..."
என 
விடாமல் மொழிந்து கொண்டிருந்தார் 
பிலால் !
மவுனமாய் பார்த்து விட்டு 
வேகமாய் பறந்து 
அடர்ந்த காட்டிற்குள் 
நுழைந்தது பயணம் !
ஆதம் நபியின் 
மூத்த புதல்வன் ஆபீலை 
அன்பு காட்டி 
அழைத்து வந்த 
இளைய மகன் காபீல்
குற்ற உணர்வே இல்லாமல் 
கொலை செய்து கொண்டிருந்தான் !
மனித இனத்தின் 
முதல் கொலையையும் 
பார்த்த களைப்பில்
மனிதனே இல்லாத 
இடம்தேடிப் புறப்பட்டது 
பயணம் !
சிறகுகள விரிய விரிய
இயற்கையின் எழிலும் 
மாசு படாத காற்றும்
தெள்ளிய நீரும்
மனித சஞ்சாரமே இல்லாத 
ஏகாந்த அமைதியும்
அலுப்பைத் தர
பயணம்
வந்த வழியே திரும்பியது !
நிலமெங்கும்
பச்சை ரத்தம் 
பெருக்கெடுத்து 
நதியாக ஓடிக் கொண்டிருக்க
வெட்ட வெட்டக் 
குறையாமல் 
மனிதத் தலைகள் 
முளைத்துக் கொண்டேயிருந்தன !
ஈராக்கிலும்
பாலஸ்தீனிலும்
பச்சைப் பிள்ளைகளின்
அழுகுரல் ஓய்ந்து 
பச்சைப் பறவைகளின்
பரவச பாட்டு 
ஒலிக்கத் தொடங்கி இருந்த்து !
பூமியெங்கும்
பிலால்களின்
அழைப்போசை 
அலையலையாக 
மிதந்து வர
உலகம் 
சில கணங்கள் பணிந்தும் 
மறுபடி எழுந்தும் 
போர்களிலேயே 
மூழ்கிக் கிடந்த்து !
யுத்தமும் 
சத்தமும் இல்லாத 
உலகத்தின் 
முடிவான பகுதிகளை நோக்கி 
சிறகுகளை அசைத்து 
முடிவே இல்லாமல் 
பயணித்துக் கொண்டிருக்கிறது
பயணம் !

Abu Haashima

No comments: