Sunday, July 9, 2017

குற்றப்பத்திரிக்கை

சிறு வயதில், பள்ளியிலிருந்து திரும்பிய பொழுதில், வீட்டின் மாடத்தில் யாரோ வைத்திருந்த ஒரு ரூபாய் என் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு, கடைவீதியில் இருக்கும் லாலா மிட்டாய்க் கடைக்கு ஓடிச்சென்று காராபூந்தி வாங்கினேன்.
வாங்கியவன், அங்கேயே தின்றிருக்க வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோருக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு சாப்பிட்டது என் தவறுதான்.
"காராபூந்தி வாங்க காசு ஏதுடா?"- என் அக்கா
"நான் சேத்து வச்ச காசுல இருந்து வாங்கினேன்" -நான்.
உடனே, மாடத்திலிருந்த ஒரு ரூபாயைச் சென்று தேடினாள். சத்தியமாக, அந்த எருமையின் ஒரு ரூபாய் என்று தெரியாது.
"டேய், இங்க இருந்த ஒரு ரூபாயை எடுத்துட்டு போயிதான வாங்குன? உண்மையச்சொல்லு"

"இல்லை. இது நான் சேத்து வச்சிருந்த காசு. உன் காசை ஒன்னும் நான் எடுக்கல"
சண்டை போட ஆரமித்து விட்டாள். என் காசில் தான் வாங்கினேன் என்று சொல்வதில் நான் உறுதியாக இருந்தேன்.
அருகிலிருந்த என் அம்மா, "இல்லடி, என் புள்ள அப்படிலாம் காசை களவாங்க மாட்டான். நீ ஒழுங்கா எங்க வச்சன்னு தேடிப்பாரு" என்று எனக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வில்லி விடுவதாய் இல்லை.
"எங்க, நீ எடுக்கலைனு என் மேல சத்தியம் பண்ணு"
"உன் மேல சத்தியமா நான் எடுக்கல, போதுமா?"
அந்தப்பொய் சத்தியத்தில் சமாதானம் அடையாதவள்,
"சரி, நம்ம அம்மா மேல சத்தியம் பண்ணு நீ எடுக்கலன்னு"
"அம்மா மேலைலாம் சத்தியம் பண்ண முடியாது, போடி"
"அம்மா மேல சத்தியம் பண்ண முடியலைனா, நீதான்டா என் காச களவாண்டிருக்க களவாணிப்பயலே.. "
"நான், ஒன்னும் எடுக்கல" , என் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டிருந்தது.
அவள் விடுவதாய் இல்லை, "பாருமா, உன் மேல சத்தியம் பண்ண பயப்படுறான், அப்ப அவந்தாம்மா எடுத்திருக்கான் என் காச"
என் அம்மா, என்னிடம் திரும்பி, "என்ன வாப்பா, உண்மையச்சொல்லு, நீயா எடுத்த?" என்று கேட்ட அடுத்த கணம் உடைந்தழுது விட்டேன்.
"ஆமாம்மா, நாந்தான் எடுத்தேன், தெரியாம எடுத்துட்டேம்மா."
என் அக்கா வில்லி, இன்னும் விடுவதாய் இல்லை.
"பாருமா, நீ சரியான திருட்டுப்பிள்ளையை பெத்து வச்சிருக்க. சரியான கள்ளப்பய" என்று தொடர்ந்து வசைபாடிக் கொண்டிருந்தாள், அந்த காராபூந்தியில் அவளுக்கும் பங்கு கொடுத்திருக்கிறேன் என்ற நன்றி உணர்ச்சி இல்லாமல்.
"என்ன வாப்பா, உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். இப்படி பொய் சொல்லிட்டியே? எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடா" என்று என் அம்மா சொன்ன வார்த்தைகளை தாங்கவே முடியவில்லை.
அழுது கொண்டே அடுப்பறைக்கு ஓடிச்சென்று, ஒரு நீளக்கத்தியை எடுத்துக் கொண்டு வந்து, என் அம்மாவின் கையில் திணித்து, "தப்பு பண்ணிட்டேம்மா, இந்தப் பொய் சொல்ற புள்ளை உனக்கு வேண்டாம்மா, உன் கையாலே குத்தி கொன்னுரு என்னை" என்று அம்மா கையிலிருக்கும் கத்தியை என் வயிற்றில் "மெல்ல மெல்ல" முட்டினேன் .
என் அம்மா, தன் கையிலிருந்த கத்தியை தூக்கி எறிந்து விட்டு, என் தலையை கோதியபடி,
"சரி வாப்பா, உன் தப்ப உணர்ந்துட்டாலே போதும். நான் உன்னை மன்னிச்சுட்டேன். உன்னைப்போல நல்ல புள்ளை ஊர் ஒலகத்துல கிடைக்குமா " என்று சொல்லி அனைத்துக் கொண்டார்கள். என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.
இப்பொழுதும், என்றாவது ஒரு நாள், என் அம்மாவிடம் சென்றமர்ந்து, இந்த உலகத்தில் வாழ்வதற்கு, அறிந்தோ அறியாமலோ, பல பொய்கள், துரோகங்கள் என பல குற்றங்கள் செய்து விட்டேன் என்று சொல்லி கதறியழ வேண்டும்.
அப்பொழுதும், "உன் தவறை உணர்ந்துட்டீல, அது போதும். உன்னைப் போல நல்ல புள்ளை ஊர் ஒலகத்துல கிடைக்குமா வாப்பா?" என்று சொல்லி ஆசிர்வதிக்கப் போகிறாள் என் தாய்.
அந்த நிமிடத்தில், என் தாயுடன் சேர்ந்து, அந்த இறைவனும் என்னை மன்னித்து பரிபூரணமாக இரட்சிக்கப் படுவேன் என்ற நம்பிக்கை மனதில் இருக்கிறது...

ராஜா முகமது சீன தேசத்திலிருந்து

No comments: