Sunday, July 16, 2017

என்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க முடியலே.

எனக்கு வேலைப்பளு எப்போதுமே அதிகம், இப்போ ரொம்ப அதிகம். டைப்செட்டிங் செய்யறதுக்கு புதுசு புதுசா புத்தகம் கைக்கு வந்துட்டே இருக்கு. எல்லாமே வெவ்வேறு மொழி நூல்கள். குஜராத்தி-இந்தி, இந்தி-பஞ்சாபி, இந்தி-கன்னடம், இங்கிலீஷ்-இந்தி-போடோ, இங்கிலீஷ்-இந்தி-மணிப்புரி.... இப்படியே நீ........ளு.....து பட்டியல்.
முன்னொரு காலத்தில் இருந்தமாதிரி இப்போ கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கிடைக்கிறதில்லே. அப்படியே கிடைக்கிற ஆட்களுக்கு இந்த வேலையை இப்படிச் செய்யணும்னு நாம எவ்வளவு சொல்லிப் புரிய வச்சாலும் கடைசியில அவங்க அவங்க புரிதல்படிதான் வேலை செய்யறாங்க. 300 பக்க புத்தகத்தைக் குடுத்தா டபுள் ஸ்பேஸ்ல டைப் செஞ்சு 500 பக்கமா கணக்கு காட்டுவாங்க. காசு குடுத்து டைப் செஞ்ச பினனாடியும் அதை சரி செய்யற வேலையும் சேந்துக்குது.

சமயத்துல வேலைமேலே கடும் வெறுப்பா இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சுவாரசியமான வேலை வந்து சேரும். அல்லது, செய்யற வேலைகளிலேயே புதிதாக சில தகவல்கள் அறியக் கிடைக்கும். அதை நினைச்சு சந்தோஷமாகும். ஆஹா... நாம செய்யறது வெறும் தொழில் அல்ல. ஞானத்தைப் பெறும், ஞானத்தைப் பரப்பும் கடமைன்னு தோணும்.
அப்படித்தான் நேத்து நாலடியார் கைக்கு வந்திருக்கு.
திருக்குறள் மாதிரியே இதிலும் அறம், பொருள், இன்பம். திருக்குறளில் உள்ளதுபோலவே இதிலும் பத்துச் செய்யுள்களைக் கொண்ட அதிகாரங்கள். குறள் ஈரடி வெண்பா. நாலடியார் நாலடி வெண்பா. குறள் ஒரே நபரால் எழுதப்பட்டது. நாலடியார் பலரால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டது. (வெங்கடேஷ் ஆறுமுகம் கவனிக்கவும்.)
கைக்கு வந்த நாலடியாரைப் புரட்டினேன். நம்ம பார்வை எங்கே போகும்? கல்வி அதிகாரத்துக்குத்தானே... முதல் வெண்பா —
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. 131
(தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.)
இன்னொரு செய்யுள் —
கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான். 334
கற்கள் மிகவும் நல்லனவாகும். எப்படியெனில், பிறர் சொல்லும் சொல்லை அறிந்து கொள்ளாதவை என்றாலும், தம்மைச் சார்ந்தவர்க்கு அப்போதே நிற்பதும், உட்காருவதும், படுப்பதும், நடப்பதும் ஆகிய செயல்களுக்கு உதவுதலால் அவை யாருக்கும் ஓர் உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்.
கல்லாதவர்களைவிடக் கல்லே பெட்டராம். குறைஞ்சபட்சம் ஏதாவது ஒருவகையில் உதவுதாம். அடேயப்பா... என்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க முடியலே.


Shahjahan R

No comments: