கலாம் உயிருடன் இருந்தபோது வீணை வாசித்தார், கீதையை படித்தார் என்பதெல்லாம் உண்மை எனும்போது கலாம் வீணைவாசிப்பது போலும் அருகில் கீதை புத்தகம் இருப்பது போலும் சிலை அமைத்தது ஹிந்துத்துவ அரசியலாம். அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்//
— வாசு ராமதுரை
கலாம் கீதை வாசித்தார். அவரே சொல்லியிருக்கிறார். சந்தேகமே இல்லை. ஆனால் அவர் கீதை வாசிப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கவில்லை. கீதையை மட்டுமே வாசிக்கவில்லை. அவர் வாசித்த எத்தனையோ நூல்களில் கீதையும் ஒன்று. கீதை மட்டுமே சிறந்த நூல் என்று அவர் சொல்லியிருக்கிறாரா என்ன? அல்லது கீதையில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தாரா?
கலாம் வீணை வாசித்தார். ஆமாம், அப்படிக் கேள்விப்பட்டதுண்டு, படங்களில் பார்த்ததுண்டு. அவர் வீணையை திறம்பட வாசித்தாரா, வீணைக் கலைஞரா என்று தெரியாது. ஆனால் அவர் வீணை வாசிப்பதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கவில்லை. வீணைக் கச்சேரிகள் நடத்தவில்லை.
கலாமின் அடையாளம் கீதையோ வீணையோ அல்ல. அவருடைய நேர்மைதான் அவருடைய அடையாளம். மாணவர்கள்பால் - எதிர்காலத் தலைமுறையின்பால் அவர் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் அடையாளம். ஏவுகணைகள் அவருடைய அடையாளம். அறிவியல் மீது கொண்டிருந்த ஆர்வம் அவரது அடையாளம்.
கலாம் குரான் படித்திருப்பாரே? கலாம் பைபிள் படித்திருப்பாரே? அதையெல்லாம் ஏன் சிலையாக்கவில்லை என்றெல்லாம் கேட்கவே மாட்டேன். ஏனென்றால், கீதை வாசிப்பதோ, வீணை வாசிப்பதோ (குரான் வாசிப்பதோ) அவருடைய தனிப்பட்ட விஷயங்கள். நாட்டுக்குத் தொடர்பற்ற விஷயங்கள். இதேபோல வெளியே சொல்லத்தக்க, சொல்லத் தேவையற்ற இன்னும் பல தனிப்பட்ட ஆர்வங்கள் அவருக்கு இருக்கக்கூடும்.
இதையெல்லாம் அடையாளம் ஆக்குவது அவருடைய உண்மை அடையாளத்தை மறைப்பதற்கான உத்திதான்.
காவிகளின் நுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்திறமை ஏதும் தேவையில்லை.
Shahjahan R
No comments:
Post a Comment