வாழும் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்வை தெரிவித்துக் கொள்வதற்காக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். வாழ்த்தைக் வழங்குபவரும் பெறுபவரும் அன்பால் பிணைக்கப்படுகிறார்கள் , நட்பு உறுதியாகிறது, தொடர்கிறது. இருவருக்குமே இழப்பேதும் இல்லை ஆனால் ஆனந்தம் ஆட்கொள்ளுகிறது, சமத்துவம் நிலைபெறுகிறது.
ஆளும் அரசு நாடாளும் இயந்திரத்தை இயக்குவதற்காக அந்நாட்டில் வாழும் மக்களுக்கு வரிவிதிக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகள் சரமாரியாக விதிக்கப்படுவது வளரும் நாடுகளின் வருடாந்திர விளையாட்டு போலவே நிகழ்த்தப்படுகிறது.
தனிநபரின் அதிக வருமானம் வருவதிலும் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திலும் வரிவிதித்து
நாட்டுக்கும் நாட்டு ஏழைமக்களுக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே வரிவிதிப்பின் இலக்காக இருக்கவேண்டும்.
நடப்பதென்ன?
ஏழைமக்கள் வீட்டில் சமைத்துண்ணும் உணவுக்கு வரிவிதிப்பில்லையென தம்பட்டம் அடிக்கும் மந்திரிகுமாரிகள் அடிவருடும் நவீன ராஜாக்களுக்கே வரிவிதிப்பில் கொண்டாட்டம்.
பொருளாதார அரிச்சுவடியைக்கூட பாமர குடிமக்களுக்கு கற்றுக்கொடுக்காமல் வாழ்வாதார அடிப்படைகள் கண்ணிலும் கண்டிடாமல் இருக்கும் பெரும்பான்மையினர்கள் வறுமைக்கோட்டின் தாழ்வாரத்தில் தவழும் மக்கள் அவர்களிடம் 'அதிநவீன' வரிவசூலிப்பு முறைகளை திட்டம்போட்டு திணிப்பது என்பது மக்கள்நல அரசாக இருக்க முடியுமா?
கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
விசயத்திற்கு வருவோம்.
நான் வசிக்கும் உகாண்டாவில் மக்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அது மிகவும் அந்நியோன்னியமாகவும் ஆத்மார்தமாகவும் இருக்கும். லுகாண்டா மொழியில் முழுமையான வாழ்த்து தெரிவித்துக்கொள்ள குறைந்தது முப்பது நிமிடங்களாவது தேவைப்படும்.
இங்கும் பண்டுதொட்டே நாடாளும் அரசன் காலத்திலிருந்தே வரிவசூலிப்பு நடந்து வருகிறது. இங்கு வரிவசூலிப்பதற்கென்றே தனியாக குண்டர்படைகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது.
இப்போதும் அதற்கொன்றும் குறைவில்லை.
இங்குள்ள மக்களின் வாழ்த்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது 'ஓவாங்காலேங்க ஓமுஸோலோ' அதாவது ஒருவரை அவரது பிறந்த நாளிலோ அல்லது அவரது நற்செயலுக்காகவோ வாழ்த்தும்போது 'நீங்கள் வரியைப்போல நிலைத்து நின்று வளர்ச்சியுடன் வாழுங்கள்' என்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
வரியும் வாழ்த்தும் நல்லா இருக்குல்லா?
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.
No comments:
Post a Comment