துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும்
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ
பின் நேர்மையின் தடயங்களைச் சிறு காகிதப் படகாக்கினாய்
பின் இக்கட்டான தருணங்களில் அணிந்திருந்த நம்பிக்கைகளை துடுப்பாக்கினாய்
பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை
மிதக்கும் ஒரு மரமாக்கிப் படகிலேறினாய்
இது கவிழ்ந்து விடக்கூடாதே என்று
உன் மனைவியின் கண்ணீரைக்கொண்டு பிரார்த்தித்தாய்
எப்படியாவது கரைசேர வேண்டுமே என்று
உன் குழந்தைகளின் நம்பிக்கைகளைக் கொண்டு இறைஞ்சினாய்
சலனப்பட்ட தருணங்கள் ஒரு திமிங்கலமாக உருவெடுத்து
மூழ்கடித்துவிடுமோ என்று திகிலுடனே படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறாய்
இந்த நெருக்கடியில் எடுத்துக்கொண்ட சபதங்களும்
இந்த வழுக்கலில் கற்றுக்கொண்ட பாடங்களும்
இனியாவது புத்தி புகட்டட்டுமென
காற்றும் கடலும் கரைசேர்க்கட்டும் உன்னை என்றேன்
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment