Tuesday, October 25, 2016

மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 2)

Shahjahan R
கட்டுக்கதை-11 : குடும்பத்தில் ஒருவருடைய தந்தைக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது என்பது, அவருடைய தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்த அளவுக்கு ஆபத்துக் காரணி அல்ல.
தாயாருக்கு புற்று நோய் இருந்தது என்பது மகளுக்கு எந்த அளவுக்கு ஆபத்துக்காரணியோ, அதே அளவுக்கு தந்தைக்கு இருந்ததும் ஓர் காரணியாகும். ஆனால், ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மிகவும் அரிதாகவே (ஆயிரத்தில் ஒருவருக்கு) வருகிறது. குடும்பத்தின் பரம்பரை நோய் வரலாற்றை மதிப்பிடும்போது எல்லாருடைய நோய்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை-12 : கருச்சிதைவு செய்து கொள்வதால் புற்றுநோய் ஆபத்து அதகரிக்கும்.
தவறு. பெண்களின் வாழ்வில், பல்வேறு காரணங்களால் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஹார்மோன்களின் மாற்றம் மார்பகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை ஹார்மோன்கள் தூண்டி விடுகின்றன. கருவுறுதல் அல்லது கருச்சிதைவும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், (இயற்கையான அல்லது செயற்கையான) கருச்சிதைவு காரணமாக மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதில்லை என ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.

கட்டுக்கதை-13 : காபி குடிப்பதால் புற்றுநோய் வரும்.
தவறு. மார்பகப் புற்றுநோய்க்கும் காபிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சொல்லப்போனால், காபி அருந்துவது, புற்றுநோய் வாய்ப்புகளைக் குறைக்கக்கூடும் என்று தெரிகிறது.
கட்டுக்கதை-14 : மார்பில் கட்டிகள் (ஃபைப்ரோசிஸ்டிக் கட்டிகள்) உள்ள பெண்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் உண்டு.
ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள் (fibrocystic breast changes) என்பது ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக நோய் என்றும் அழைக்கப்படுவதுண்டு. மார்பகத்தில் புற்றுநோய் சாராத கட்டிகள், நீர்க்கட்டிகள் ஆகியவை இதில் அடங்கும். பெண்களில் 50 சதவிகிதம் பேருக்கு வாழ்க்கையில் ஏதேனுமொரு நேரத்தில் ஃபைப்ரோசிஸ்டிக் கட்டிகள் வருகின்றன. குறிப்பாக 30-50 வயதுப் பிரிவினரில் பெரும்பாலும் காணப்படும. சிலருக்கு ஆயுள் முழுவதும்கூட இருக்கலாம். ஃபைப்ரோசிஸ்டிக் கட்டிகள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் என்று ஆரம்பகாலத்தில் கருதப்பட்டது. ஆனால், அது தவறு என்று இப்போது தெளிவாகி விட்டது. இவற்றால் ஆபத்து இல்லை என்றாலும் ஒரு சிக்கல் உண்டு – சாதாரணக் கட்டியா அல்லது புற்றுக்கழலையா என்ற அச்சத்தை தரக்கூடும். சாதாரணக் கட்டிக்கும் புற்றுக் கழலைக்கும் வித்தியாசம் கண்டறிவதில் சிரமம் ஏற்படக்கூடும். எனவே மம்மோகிராம், அல்டிராசவுண்ட் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். மாதவிலக்கை கட்டுப்படுத்துகிற ஹார்மோன்கள்தான் இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்குப் பருவம் முடிந்தபிறகு இவை மறைந்து விடும்.
கட்டுக்கதை-15 : ஆண்டுக்கொருமுறை மம்மோகிராம் பரிசோதனை செய்தால், அதன் கதிரியக்கம் காரணமாக புற்றுநோய் ஆபத்து அதிகமாகிறது.
மம்மோகிராம் கருவியில் கதிரியக்கம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கதிரியக்கம் இல்லை. ஒரு எக்ஸ்ரேவுக்கான கதிரியக்கத்தைவிடக் குறைவு. அதன்மூலம் கிடைக்கும் பயன்கள் மிகவும் அதிகம். சாதாரணமாகப் புலப்படாத கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய மம்மோகிராம் உதவுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோய்க்கு சிகிச்சை தருவதும் எளிதாகிறது. ஆயுளும் அதிகரிக்கிறது.
மம்மோகிராமைவிட சோனோமம்மோகிராம் நல்லது என்று ஒரு கருத்து இருக்கிறது. இதுவும் விவாதத்துக்கு உரியதே. மம்மோகிராம் எக்ஸ்ரே வகையைச் சேர்ந்தது. சோனோமம்மோகிராம் அல்ட்ராசவுண்ட் வகையைச் சேர்ந்தது. மம்மோகிராம் சோதனையில் கட்டி இருக்கிறதா என்று மட்டுமே தெரியும் – திசுக்களால் ஆன கட்டியும், நீர்க்கட்டியும் ஒன்றுபோலவே தெரியும். அல்டிராசவுண்ட் சோதனையில் கட்டி நீர்க்கட்டியா என்பதும் தெரியும். ஆனால் மம்மோகிராம் நுண்ணிய விவரங்களை காட்டும், அல்டிராசவுண்ட் அதைக் காட்டாது. ஆக, இரண்டும் அவற்றுக்கே உரிய சாதக பாதகங்களைக் கொண்டுள்ளன. பரம்பரையாக புற்றுநோய் வரலாறு உண்டு போன்ற ஆபத்துக் காரணிகள் இருந்தால், எந்தச் சோதனை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
கட்டுக்கதைகள் அடுத்த பதிவுடன் முடியும்.

Shahjahan R

No comments: