Friday, November 4, 2016

தோசையம்மா தோசை ஷாஜஹான் சுட்ட தோசை


தோசை வார்க்கும்போது முதல் தோசை வெற்றிகரமாக வந்து விட்டால் முழுக் கிணறும் தாண்டியாயிற்று என்று அர்த்தம். அடுத்தடுத்த தோசைகளும் வெற்றிதான். உங்கள் பிபி எகிறுவதும், வாயில் கெட்ட வார்த்தைகள் துள்ளித்துள்ளி வந்து விழாமல் இருப்பதும் அநத் முதல் தோசையைப் பொறுத்த்து. முதல் தோசையை கல்லிலிருந்து சுரண்டிச் சுரண்டி எடுத்து குப்பையில் போடாதிருக்க என்ன வழி?
கல்லை அடுப்பில் வைத்தபிறகு சரியான சூடேறும் வரை காத்திருக்க வேண்டும். புரோட்டா மாஸ்டர் தண்ணர் தெளித்துப் பார்ப்பதுபோல ஒரு துளி தண்ணீர் தெளிக்க வேண்டும். ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று தண்ணீர் பொரிந்து துள்ளி மாயமானால் சூடாகிவிட்டதென்று அர்த்தம்.
அப்புறம் எண்ணெய் தடவ வேண்டும். கல்லில் எண்ணெய் தடவுவதற்காகவே அம்மாக்கள் ஒரு குச்சியில் துணியைச் சுத்தி வைத்திருப்பார்கள். அது அந்தக்காலம். இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை. புரோட்டா மாஸ்டர் துடைப்பத்தால் எண்ணெய் தடவுவதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல செய்யலாம் என்று துடைப்பத்தை தூக்கி விடாதீர்கள். அப்புறம் வீட்டம்மா வீடு திரும்பியபிறகு அவர் அதையே கையில் எடுக்கக்கூடும். வெங்காயத்தை குறுக்காக வெட்டி, கத்தி முனையிலோ குச்சியிலோ குத்தி வைத்துக் கொள்ளலாம். கல்லில் சில துளிகள் எண்ணெய் விட்டு வெங்காயத்தால் தடவி விட்டு அப்புறம் கரண்டி மாவை விட வேண்டும். முதல் தோசையை அளவில் பெரியதாக வார்க்காமல் இருப்பது நல்லது. தோசையை வார்த்தபிறகு சில துளிகள் எண்ணெயை தோசையின்மீதும், ஓரங்களிலும் விட வேண்டும். அடுத்தடுத்த தோசைகளுக்கு வெங்காயத்தால் தேய்க்க வேண்டிய அவசியம் வராது.
அப்புறம்...
மெல்லிசா, பொன்னிறமா, சிறிசா, கடையில் வாங்குகிற பேப்பர் ரோஸ்ட் மாதிரி தோசை வார்க்கறது எப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க ஆர் வெல்கம் டு மை ஹோம்.
பி.கு. - இது எந்த டயட்டுக்கும் ஆதரவானதும் அல்ல, எதிரானதும் அல்ல. தோசை சுடத் தெரியாத மக்கள் நலம் கருதி வெளியிடப்படுகிறது.

தோசையம்மா தோசை
ஷாஜஹான் சுட்ட தோசை
....
ரெடி ஷ்டாட் மீஜிக்.


Shahjahan R

No comments: