ராஜா வாவுபிள்ளை
காங்கோ பயணக்குறிப்பு ....!
குள்ளமனிதர்கள் (PYGMIES) தொடர்ச்சி.
சொல்லச் சொல்ல சுவாரசியம் குறையாத இந்த நிகழ்வுகளில் தொகுப்பில், கழிந்தவாரம் குள்ளமனிதர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தோம்.
இந்தவாரம் குள்ளமனிதர்களான பட்வா இனத்தவர்களின் திருமண சடங்குகளையும் திருமணவாழ்வையும் பற்றிய நிகழ்வுகளையும் பார்ப்போமா ?
பட்வா இனத்தில் அல்லாது மாற்று இனத்தவரை மணப்பதற்கு அனுமதி இல்லை. பட்வா இளைஞர் இளம்பெண்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முட் வா இளைஞனின் பெற்றோர்கள் நல்ல குணநலன்கள் உள்ள இளவயது பெண்களில் பிடித்தவராகப் பார்த்து தனது மகனுக்கு பொருத்தமான பெண்ணைத் தேர்வுசெய்கின்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோருடைய அனுமதியுடன் பெண்ணின் வீட்டிற்கு பலவகையான கலயம் கலயமாக தேனும், தேனிலிருந்து வடிக்கப்பட்ட ஒருவகை பானமும் பழவகைகளும், பாடம் செய்யப்பட்ட இறைச்சியும் முதற்கொண்ட பரிசில்களுடன் சென்று பெண்கேட்கும் சம்பிரதாயமான சடங்குகளை நிறைவேற்றுகின்றனர்.
இந்த சடங்கின்போதே திருமணநாள் (கன்னிகா தானம் என்றே அவர்களது மொழியில் திருமணத்தை குறிப்பிடுகிறார்கள்) மற்றும் வரதட்சணையையும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்கிறார்கள். இங்கு வரதட்சணையை மணமகன்தான் பெண்ணிற்கும் அவளது பெற்றோருக்கும் கொடுப்பது கடமையாக்கப் பட்டுள்ளது.
பட்டவாக்களின் வரதட்சணை பட்டியலில் அடங்கும் பொருட்களாவன:
- உண்மையான வனவிலங்குகளின் பல், கொம்பு போன்றவற்றில் செய்யப்பட்ட பாசிமணி மாலைகள்
- பாடம் செய்யப்பட்ட வனவிலங்குகளின் தோல்கள் - இவற்றை ஆடையாகவும் கடும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உபயோகின்றனர்.
- யானைத் தந்தங்கள்
- பாடம்செய்யப்பட்ட வனமாமிச வகைகள்
- விஷக்கொடுக்கு இல்லாத தேனீக்களின் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட சுவையான தேன் கலயங்களின் எண்ணிக்கை சம்மதித்ததுபோல்
- பிய்ப்பாய் கணக்காக தேனிலிருந்து வடிப்பட்ட பானங்கள்
- நல்ல திறமையான மணமகன் வேட்டைநாய்களையும் வரதட்சணையாக கொடுக்கின்றனர்.
இத்தனை பொருட்களையும் மணப்பெண்ணின் பெற்றோருக்கு கொடுத்து பட்வா இனத்தின் முதியவர்கள் முன்னிலையில் அவர்களின் நல்லாசியுடன் திருமணம் வெகுவிமரிசையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடம் கூட்டம் குடும்பத்தோடு நடத்தப் படுகிறது.
வரும் வாரம் திருமணமான இளம் தம்பதியர் எவ்வாறு தங்களது வாழ்வியலை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை காணலாம்.
பாகம் 6.
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment