Monday, October 24, 2016

மார்பகப் புற்றுநோய் - கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 3)

by Shahjahan R

 கட்டுக்கதை-16 : பருமனாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம்.
• பருமனாக இருப்பதாலேயே மார்பகப் புற்றுநோய் வருவதில்லை. ஆயினும். உடல் பருமன் அல்லது அளவுக்கு மீறிய எடை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, மாதவிலக்குப் பருவம் கடந்தவர் அல்லது வாழ்வின் பிற்காலத்தில் பருமனானவர் என்றால், நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
கட்டுக்கதை-17 : கருத்தரிப்பு சிகிச்சைகளால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
• மார்பகப் புற்றுநோய்க்கும், பெண்களுக்கே உரிய ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனுக்கும் தொடர்பு உண்டு; எனவே, கருத்தரிப்பு சிகிச்சைகள் புற்றுநோயை உருவாக்கும் என்ற கருத்து உருவானது. ஆனால், ஆய்வுகளில் அதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தக்காரணியை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இத்துறையில் ஆய்வுகள் நடத்துவது அவ்வளவு எளிதான செயலும் அல்ல.

கட்டுக்கதை-18 : கருக்கலைப்பு செய்வதால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கும்.
• புற்றுநோய்க்கும் ஹார்மோன்களுக்கும் தொடர்பு உண்டு. கருத்தரிக்கும்போது ஹார்மோன் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும். எனவே, கருக்கலைப்பு செய்வதால் புற்றுநோய் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால், பல்வேறு ஆய்வுகளில் இதற்கும் ஆதாரபூர்வமான சான்று ஏதும் கிடைக்கவில்லை.
கட்டுக்கதை-19 : கருத்தடை மருந்துகளால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கும்.
• அதிகரிக்கலாம். இப்போது சந்தையில் கிடைக்கும் கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகக் குறைவு, அல்லது அறவே இல்லை. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கருத்தடை மாத்திரைகளுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், ஐந்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலே கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது குறித்து மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.
கட்டுக்கதை-20 : 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான் மார்பகப் புற்றுநோய் குறித்துக் கவலைப்பட வேண்டும்.
• மார்பகப் புற்றுநோய் எந்த வயதிலும் வரக்கூடும். மாதவிலக்குப் பருவம் கடந்தவர்கள் (சுமார் 50 வயதைக் கடந்தவர்கள்) மத்தியில்தான் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்றாலும், 20-25 விழுக்காட்டினர் நாற்பது வயதுக்கும் குறைந்த இளம்பெண்கள்தான். இளம் வயதினருக்கு நோய் வரக்கூடிய ஆபத்து குறைவு என்றாலும், தேவைப்படும்பட்சத்தில் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
கட்டுக்கதை-21 : ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது.
• உடற்கூற்றியலின்படி பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் வரும் என்று கருதுகிறார்கள். இது தவறு. ஆண்களுக்கு புற்றுநோய் விகிதம் மிகக் குறைவு என்று சொல்ல்லாமே தவிர, அவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதுண்டு. பெண்களுக்கான அதே பரிசோதனைகள், சிகிச்சைகள்தான் ஆண்களுக்கும் பொருந்தும்.
கட்டுக்கதை-22 : மரபணுவில் புற்றுநோய் இல்லாதவருக்கு புற்றுநோய் வராது.
• குடும்பத்தில் பரம்பரையாக புற்றுநோய் இருந்திருக்கிறது என்ற காரணி, மற்ற காரணிகளைவிட நோய்க்கான சாத்தியத்தை 5-10 விழுக்காடு அதிகரிக்கிறது, அவ்வளவுதான். புற்றுநோய் கண்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு குடும்பத்தில் பரம்பரையாக புற்றுநோய் இருப்பதில்லை. எனவே, மார்பகப் புற்றுநோய் எவருக்கும் வரக்கூடும் என்பது தெளிவு.
கட்டுக்கதை-23 : ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றினால் மார்பகப் புற்றுநோய் வராது.
• ஆரோக்கியமான உணவு முறை எல்லா வகையிலும் எல்லாருக்கும் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விடாது. புற்றுநோயைப் பொறுத்தவரை உணவைவிட இதர விஷயங்களே காரணிகளாக உள்ளன. அதற்காக ஆரோக்கிய உணவைக் கைவிட்டுவிடக்கூடாது. சமச்சீர் உணவுமுறை எல்லா வகையிலும் சிறந்ததுதான்.
கட்டுக்கதை-24 : ஊசி மூலம் பயாப்சி பரிசோதனை செய்வதால் புற்றுநோய் அணுக்கள் இதர பகுதிகளுக்கும் பரவி விடும்.
• பயாப்சியில் பல வகைகள் உண்டு. எதுவாக இருந்தாலும், கட்டியின் திசுக்களை பரிசோதனைக்காக எடுப்பதுதான் அதன் நோக்கமாகும். ஊசி மூலம் எடுப்பது என்பதில், சாதாரணமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகளைவிட மெல்லிய ஊசியை கட்டியில் செலுத்தி, அதிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதிப்பார்கள். ஊசி துல்லியமாக கட்டியை எட்டவில்லை என்றால், கட்டியல்லாத சாதாரணத் திசுக்கள் ஊசியில் வந்துவிடக்கூடும். இது பரிசோதனை முடிவை தவறாகக் காட்டும். எனவே, அல்ட்ராசவுண்ட், அல்லது சிடி ஸ்கேன் மூலம் கட்டி எங்கே இருக்கிறது என்பதை நேரடியாகக் கவனித்து, ஊசியைச் செலுத்தி திசுக்களை எடுப்பார்கள், புற்றுக் கழலையா அல்லது சாதாரணக் கட்டியா என்று பரிசோதனை செய்வார்கள். இதற்கும் புற்றுநோய் பரவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கட்டுக்கதை-25 : மம்மோகிராம் சோதனையில் நோய் இல்லை என்று தெரிந்தால், அதன்பிறகு கவலைப்படத் தேவையில்லை.
• மம்மோகிராபிதான் மருத்துவரீதியான முதல் பரிசோதனையாகும். ஆயினும், பரிசோதனைகளில் 10-20 விழுக்காடு நோய்களை அது கண்டறியத் தவறி விடுகிறது. எனவே, மருத்துவப் பரிசோதனையோடு சுய பரிசோதனையும் முக்கியத்துவம் உடையதாகும்.
கட்டுக்கதை-26 : மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியும்.
• தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை. புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகளை அடையாளம் கண்டு, வாழ்க்கை முறையை மாற்றி, நோய் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கலாம். பரம்பரையாக நோய் வருதல் போன்றவை ஆபத்துக் காரணிகள். எடை குறைத்தல், மது-புகைப்பழக்கம் கைவிடுதல் போன்றவை பாதுகாப்பு வழிகள். (அடுத்த பத்தியைப் பார்க்கவும்.) மார்பகப் புற்றுநோய்க்கு ஆளானவர்களில் சுமார் 70% பெண்களுக்கு ஆபத்துக் காரணிகள் ஏதும் இருக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கட்டுக்கதை 27 : லம்பெக்டமி (கட்டியை மட்டும் அறுவை சிகிச்சையால் நீக்குவது) செய்து கதிரியக்க சிகிச்சை தருவதைவிட, மாஸ்டெக்டமி (மார்பகத்தை நீக்குவது) செய்வதால் அதிக காலம் வாழலாம்.
• கட்டியை மட்டும் நீக்குவது – மார்பகத்தையே நீக்குவது ஆகிய இரண்டு விதமான சிகிச்சைகளை செய்தவர்களுக்கும் சர்வைவல் விகிதம் கிட்டத்தட்ட ஒன்றேதான். கட்டி பெரிதாக இருக்கும்பட்சத்திலும், அல்லது புற்றுநோய் அணுக்களின் தன்மையைப் பொறுத்தும், சிலருக்கு லம்பெக்டமியும் ரேடியேஷனும் மட்டும் போதுமானதாக இருக்காது. நோயாளிக்கு எந்த சிகிச்சை தேவை என்பதை அவரது நிலைமையைப் பொறுத்து மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும்.
கட்டுக்கதை-28 : மார்பகப் புற்றுநோய் கண்டால் மாஸ்டெக்டமி – மார்பகத்தை நீக்குவது ஒன்றே தீர்வாகும்.
• புற்றுநோய்க்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளன. மாஸ்டெக்டமி என்னும் மார்பக நீக்க அறுவை சிகிச்சையும் அவற்றில் ஒரு வழியே தவிர, அது மட்டுமே தீர்வு அல்ல. லம்பெக்டமி என்பதில் புற்றுக்கழலை மட்டும் நீக்கப்படும். கீமோதெரபி என்னும் மருந்து சிகிச்சை உண்டு. ரேடியேஷன் தெரபி என்னும் கதிரியக்க சிகிச்சை இருக்கிறது. நோயாளியின் நிலைமைக்கேற்ப எந்த சிகிச்சை தருவது என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
கட்டுக்கதை-29 : மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய காரணிகள் இருக்கிறவர் என்றால், அறிகுறிகள் தெரிகிறதா என்று பார்த்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை.
• மார்பகப் புற்றுநோய் வராமல் காப்பதற்கு பெண்கள் மேற்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன : எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்; எடை அதிகமாக இருந்தால் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்; உடற்பயிற்சிகள் செய்யலாம்; மது அருந்துவதை நிறுத்தலாம்; புகைப் பழக்கத்தை நிறுத்தலாம்; சுய பரிசோதனைகளை தவறாமல் செய்யலாம்; ஆபத்துக் காரணிகள் உள்ளவர்கள் அவ்வப்போது அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ. பரிசோதனை உள்பட மருத்துவப் பரிசோதனைகள் செய்யலாம்.
மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்.

Shahjahan R

No comments: