புதிய வானம் - புதிய பூமி
டாக்டர்.ரெய்ஹான்
புதுமைகள் நிறைந்தது மனித வாழ்க்கை.
பழையன கழிதலும், புதியன புகுதலும்
வார்த்தைக்கு அழகு சேர்க்கலாம்!
வாழ்க்கைக்கு சுவை தருமா?
அநுபவித்தோரால் மட்டுமே இதனை
உணர முடியும்.
டாக்டர்.ரெய்ஹான்....
எனது நெருங்கிய நண்பர்.
பிரபல டெர்மோ காஸ்மடாலஜிஸ்ட்.
புனித மக்கா நகரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
தெய்வீக களை சொட்டும் அருள் முகம். கருணை சுரக்கும் கண்கள், அடர்ந்த தாடி.
தோற்றத்துக்கேற்ற கூரிய அறிவுத்திறன்.
அவர் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருங்கச் சொன்னால் ஒரு பண்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்.
திருகுர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிஸ்.
ஹஜ் காலங்களில் மக்கா மாநகரில் ஹாஜிகள் நலனுக்காக இவர் புரியும் சேவைகள் சொல்லி மாளாது.இந்திய ஹாஜிகளுக்காக இவர் நிகழ்த்தும் பேருரைகள் மிக்க பயனை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்டர் என்று சொல்வதை விட ஒரு பெரிய மார்க்க அறிஞர் என்றே இவர் இன்றும் போற்றப்படுகிறார்.பெரும்பாலான இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.சிறந்த பேச்சாளர்.வளை குடா வாழ் இந்நியர் மத்தியில் மிகவும் பாப்புலராக திகழ்பவர்.
நான் புனித மக்காவில் டாக்டராக
பணிபுரிந்த நேரம்....
முதல் ஹஜ்ஜை நான் நிறைவேற்ற எண்ணிய நேரம்.டாக்டர் ரெய்ஹான் தான் எனக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து உதவினார்.
அவரை ஒரு தலை சிறந்த ஹஜ் கைடு என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு மார்க்க அறிவில் சிறந்தவர்.பல விஷயங்களை எனக்கு கற்று தந்தவரும் அவர் தான்.
இதில் ஒரு உண்மை என்னவென்றால் அவர் அளவுக்கு இஸ்லாமிய சட்ட திட்டங்கள் எனக்கு தெரியவில்லை என்பது தான்.
மார்க்க விஷயங்களில், சில் நேரங்களில் நான் தவறிழைப்பது உண்டு.அந்த நேரங்களில் என்னை அவர் கண்டிப்பதும் உண்டு.
எவருக்கும் அஞ்சாதவர்.எந்த கொம்பனாலும் உண்மையை உரக்க சொல்ல தயங்காதவர்.
அதே நேரம் நோயாளிகள் நலனில் அதிகம் அக்கறை கொள்பவர் தவறு செய்வது,
மேனேஜ்மெண்ட் என்றாலும் தட்டிக் கேட்க தயங்காதவர்.
முஸ்லிம் என்றால் தாடியோடு இருக்க வேண்டும்.அதுவும் ஹஜ்ஜை முடித்த பின்னர் தாடி என்பது ஹாஜிகளுக்கு ஒரு மரபாகி விட்டது.தாடி இல்லாத என்னை பார்த்து அவர் முறைப்பதும் உண்டு.தொழுகையை சில நேரங்களில் நான் தவற விடுவது கண்டு என்மேல் கோபம் கொள்வதும் உண்டு.
ஓசோவின் புத்தகங்களை நான் விரும்பி படிப்பது உண்டு.ரெய்ஹானை கண்டால் நான் அந்த புத்தகங்களை மறைத்து வைத்து விடுவதும் உண்டு.என்னை ஒரு முஸ்லிம் தானா என்று கூட இவர் சிலநேரங்களில் ஐயப்படுவதும் உண்டு.சில விஷயங்களில் என்னை சோதிப்பதும் உண்டு..
என்ன சார்.... கதையை நீட்டிக் கொண்டே போகிறீர்கள். சீக்கிரம் சொல்லி தொலை யுங்கள்...யார் சார்... இந்த ரெய்ஹான்!!
டாக்டர்.ரெய்ஹான்
இந்தியாவில் பெங்களூர் நகரை சார்ந்தவர்.
உயர் பிராமண குலத்தில் பிறந்தவர்.தந்தை
வேத புராணங்களில் மகா அறிஞர்.மிகவும் ஆச்சாரமான குடும்ப பிண்ணணியை கொண் டவர்.சமஸ்கிருதத்தில் வித்தகர்.அவரது இயற்பெயர் ராமன் என்பது.ராமன் தான் பின் னாளில், ரெய்ஹானாக மாறினார் என்பது தான் ஆச்சரியம் தரும் உண்மை.
தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரிடம் குர்ஆனின் ஒரு பிரதியை கொடுத்து படித்து பார்க்கச் சொன்னாராம் டாக்டர் ரெய்ஹான்.
கற்றுணர்ந்த தந்தைசொன்னாராம்...
அருமையான விஷயங்கள் பல இதில் புதைந்து கிடக்கின்றன.நீ விரும்பினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என்பதால் டாக்டர் ரெய்ஹான் இஸ்லாத்தை உளமாற ஏற்றுக் கொண்டார்.
உங்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தது எது. நான் டாக்டர் ரெய்ஹானிடம் கேட்டேன்.
'என் இறைவன்! அவன் எனக்கு காட்டிய
வழி இது.'
மிகவும் அடக்கமாக அமைதியாக பதில் சொன்னார் டாக்டர்.
அவர் என்னை பார்த்து சொன்ன ஒரு விஷயம் மட்டும் இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை.
நீங்கள் இஸ்லாமியராக பிறந்திருக்கலாம்.
அது ஒன்றும் உங்களுக்கு இறைவனிடம்
பெரிய சிறப்பை பெற்றுத் தர முடியாது.
இறைநம்பிக்கை ஒன்றே அளவுகோல்.
இஸ்லாத்தில் புதிதாக நுழைந்த என்னிடம் ஈமான் அதாவது இறைநம்பிக்கை உங்களை விட மிகவும் அதிகமாகவே இருக் கிறது.
இஸ்லாத்தை என்னவென்று அறியாமல் இஸ்லாத்தில் பிறந்து வெறும் பெயர் தாங்கிகளாக வாழ்வதை விட இஸ்லாத்தை முழுமையாக அறிந்த பின் அதை எனது
வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ள என்னை அநுமதித்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும். அல்ஹம்து லில்லா!
நண்பா! உன் அளவுக்கு இஸ்லாத்தின் நெறி முறைகளை என்னால், இந்த வயதில் கூட கடை பிடித்தொழுக முடியுமா என்பது
என்னை பொறுத்த வரை சந்தேகமே.!
Dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment