Thursday, October 6, 2016

மரணம் சூழ்ந்த வாழ்க்கை

Dr.Vavar F Habibullah
மரணம் சூழ்ந்த வாழ்க்கை
மருத்துவன் என்ற முறையில் மரண தரிசனங்களே வாழ்வின் அன்றாட நிகழ்வாகி விட்ட நிலையில், மரணத்தோடு போராடும் நோயாளிகள் குறிப்பாக குழந்தைகள், அதைக் கண்டு துயர்படும் தாய்மார்கள்
அவர்களின் நெஞ்சை பிளக்கும்
அழுகை சத்தங்கள், ஓலங்கள், ஒப்பாரிகள்
காண்பவர், கேட்பவர் மனதை ஈரமாக்கும்.
உல்லாச உலகம் ஒன்று உலகில் இருக்கிறது
என்ற எண்ணம் மரணத்தை நித்தமும் காண்பவர் மனதில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவதில்லை.வாழ்க்கையை சுவைக்க மரண அநுபவங்கள் அதிகம் தேவை.
இளம் வயதில் நான் சந்தித்த முதல் மரணம்..
என் தாயின் தாய் மாமன் மரணம். நான் அதை பார்க்கக் கூடாது என்று என்னை ஒரு அறையில் அடைத்து பூட்டி விட்டார்கள்.
இறந்தவர்களை மீண்டும் பார்க்க முடியாது என்ற எண்ணம் மனதில் தோன்றாத வயது.
தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட அகால மரணங்கள்......
தாயின் தாய், தாய், தந்தை, தந்தையின் உடன் பிறப்புகள், தாயின் உடன் பிறந்தோர். அவர் தம் இளம் வாலிப குழந்தைகள். தாய் மாமன்மார், தூக்கி வளர்த்த அத்தைமார், மனைவியின் தாய் தந்தையர்,சகோதரனின் இளம் மகள், தங்க மகனின் பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்.......
எண்ணற்ற உற்றார், உறவினர், அருமை நண்பர்கள், சந்தோஷத்திலும், துன்பத்திலும் நம்முடன் உறவாடி அன்பு செலுத்தியவர்கள்.
இப்படி மனதோடும், ஊனோடும், உயிரோடும் கலந்து உறவாடிய பந்த பாசங்களை ஒவ் வொன்றாக இழந்து வரும் நிலையில்....
சிங்கம் போல் வாழ்ந்த என் சின்ன தம்பி கூட என்னை விட்டு மறைந்து விட்டான் என்ற செய்தி என்னையும் சற்று நிலை குலைய வைத்து விட்டது.
நஜீம்
தம்பி நஜீம்...
எவருக்கும் கட்டு படாதவன்
கைகட்டி, வாய் பொத்தி சேவகம் செய்யாதவன்.
சுதந்திர பறவை அவன்.
அவன் கால் படாத ஊரில்லை, நாடில்லை
அவன் அறியாத மொழிகளில்லை
ஆகாயம் போல் வாழ்ந்தவன்.

மரண ரகசியங்கள் அறிந்ததனால், மரணங்கள் என்னை அதிர்ச்சியடைய செய்வதில்லை.
மரணத்தோடு கொஞ்சி விளையாடும் வயதில் நான் இருப்பதாலோ என்னவோ.....
மரணம் கூட என்னை காதலிக்க தொடங்கி விட்டது.
வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் என்னோடு வாழ்ந்த பலரை நான் இழந்து விட்டேன்.என் உடலையும் கழற்றி விட தயாராகி விட்டேன்.
மரணத்தை நேசிப்பதாலேயே வாழ்க்கையும் இனிக்கிறது.
மரணங்களே வாழ்க்கையை நிறைவு செய்ய உதவுகின்றன.மரணமே வாழ்கை ரகசியத்தை திறந்து பார்க்க உதவும் திறவுகோல் ஆகும்.

Vavar F Habibullah

No comments: