1979--ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆம். அப்படித்தான் நினைவிருக்கிறது.
அந்தக் கால கட்டங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபின் மணிவிளக்கு மாதவிதழில் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். மச்சான் நாகூர் ஜபருல்லாஹ்வும் என்னுடன் துணையாசிரியராகப் பணி புரிந்து வந்தான்.
மணிவிளக்கு அலுவலகம், மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் இருந்தது. அதற்கு எதிர்ப் புறம் ஏழு கட்டிடம் தாண்டி முஸ்லிம் லீகின் தலைமையகம் இருந்தது.மாநில முஸ்லிம் லீகின் தலைமை நிலையப் பணியையும் நாங்கள் கவனித்துக் கொண்டு வந்தோம். மணிவிளக்கில் சம்பளம். தலைமை நிலையத்தில் சமூக சேவை.
லீக் ஆபீஸ் மூன்றாவது மாடியில் நாங்கள் தங்கும் அறை.
அங்கப்பன் நாயக்கன் தெரு, சந்திக்கும் கிருஷ்ணன் கோயில் முனையில் கதிஜா ஹோட்டல். மலையாள மூஸாக் காக்காக் கடை.
இந்தக் கடைக்கும் லீக்கின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நீண்ட உறவு உண்டு.
கேரள அமைச்சராகப் பல காலம் இருந்த C.H.முஹமது கோயா தலைமையகம் வந்தால், நடந்தே இந்தக் கடைக்கு வருவார். புறை பிஸ்கட், டீ வாங்கி எங்களுக்கும் தருவார் தானும் அமர்ந்து சுகித்துப் பருகுவார்.
தான் வைத்திருக்கும் பீடியையும் எங்களுக்கும் தந்து தானும் புகைப்பார்.
அவுகாதர் குட்டி நஹா, இன்னும் கேரள சட்ட மன்ற உறுப்பினர்களும்
கதிஜா ஹோட்டல் வாடிக்கையாளர்கள்தாம்.
எல்லாவற்றுக்கும் மேலாகக் காயிதெ மில்லத்தும், பாபக்கித் தங்ஙளும்
கதிஜா ஹோட்டல் ரசிகர்கள்தாம்.
எனக்கும் ஜபருல்லாஹ்வுக்கும் ஒரு நாளில், இருவேளை புறை பிஸ்கட்டும் டீயும் விலைக்கு வழங்கி ஜீவிதம் நடத்த உதவிய கற்பகத் தரு.
ஒருநாள், மணிவிளக்கு மாதயிதழ் அலுவலகத்தில் அந்த மாத இதழுக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். ஜபருல்லாஹ் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து தின இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தான்.
எங்களைச் சுற்றி நாங்கள் ஊதித் தள்ளிக் கொண்டிருந்த சிகரெட் புகை வளையங்கள்.
வாவா நகரத்தில் இருந்து என் தந்தையாரும் தாயாரும் தற்செயலாகச் சென்னை வந்திருந்தனர். அவர்கள் எப்போது வந்தாலும் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள ரீகல் லாட்ஜ்ஜில்தான் தங்குவார்கள். எவர் வீட்டிலும் தங்குவதைத் தவிர்த்து விடுவார்கள்.
என் தந்தையார், மணிவிளக்கு அலுவலகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " உடனே ரீகல் லாட்ஜுக்கு வா"என்று எனக்கு அழைப்புத் தந்தார்கள்.
நான் எழுதிக் கொண்டிருந்த கட்டுரையை வேகமாக முடித்து பலராமனிடம்
கப்போஸிற்குக் கொடுத்து விட்டு எழும்பூர் கிளம்பினேன். ஜபருல்லாஹ்வும் கூட வந்தான். இன்று மதியம் நன்றாக மீன் சாப்பாடு சாப்பிடலாம் எனும் நம்பிக்கை எங்களுக்கு.
எங்கள் தந்தையாரை ரீகலில் சந்தித்தோம். " நம்ம பெரம்பூர் ஜமாலியா ஸ்கூலில் தமிழ் பண்டிதர் பணிக்கான ஆர்டர் வந்திருக்கிறதாம். ஜட்ஜ் நன்னா உன்னை உடனே வந்து ஜாயிண்ட் பண்ணச் சொல்லித் தலைமையாசிரியர் இக்பாலை என்னிடம் அனுப்பி இருந்தார்கள். நீ விரும்பினால் அந்த வேலையில் போய் சேர்ந்து கொள்." என என் தந்தையார் என்னிடம் சொன்னார்கள்.
என்ன தந்தையார் சொன்ன விதத்தில் ஒரு வற்புறுத்தலுமில்லை. ஒரு தவிர்த்தலுமில்லை. " இது ஒரு தகவல்" என்ற அளவிலே அது இருந்தது.
எனக்கும் அதில் ஆர்வமில்லை. ஒரே சிலபஸைத் திரும்பத் திரும்ப நடத்திச்
சோர்ந்து போக எனக்குப் பிடிக்கவில்லை. எங்கள் பேச்சு அரசியல் பக்கம் திரும்பி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
மாலையில் மரைக்காயர் லெப்பைத் தெரு, லீக் ஆபீஸிற்கு வந்து விட்டோம்.
கவிஞர் தா. காசிம் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
ஜமாலியா தமிழாசிரியர் பணி பற்றித் தா.காசிமும் ஜபருல்லாஹும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக அந்தப் பணியில் நான் சேர கவிஞர் என்னை வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்.
" ஏலே! மருமவனே நிரந்தர வருமானத்துக்கு வேலையில போய்ச் சேர்ந்து விடு. இயக்கப் பணியும் , எழுத்துப் பணியும் நமக்குக் கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழிகாட்ட வில்லை. நிரந்தர வருமானம். நமக்கு ரொம்ப அவசியம். இப்படி எல்லாம் கூறி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார்.
ஜமாலியா உயர்நிலைப் பள்ளி எங்களுடைய நிர்வாகப் பள்ளிதான். அதன் நிறுவனர், எங்கள் தந்தையாரைப் பெற்ற தாயின் சகோதரர்தான். அப்போது அவர் இல்லை. அவர் தம்பி , நாங்கள் " ஜட்ஜ் நன்னா " எனச் சொல்லும் முஹம்மது ஹுஸைன் சாஹிப் அப்போது பள்ளித் தாளாளராக இருந்தார்கள். அவர் ஜட்ஜாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். என் தாதியின்
( பாட்டி ) தம்பி.
மறுநாள் தலைவர் ஸமது சாஹிபிடம் இது பற்றி விவாதிக்கச் சென்றேன்.
" இயக்கப் பணியையும், எழுத்துப் பணியையும் நாம் தொடர்ந்து கொண்டேதான் இருப்போம். அது நம்ம விதிப்பயன். ஆனால் பிழைப்பு பணியை இறைவன் ஒரு சில நேரங்களில்தான் அருள்வான்.அதனை உடனே இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம்பி விட்டு விடாதீர்கள் உடனடியாகப் போய் சேர்ந்து கொள்ளுங்கள். மணிவிளக்குப் பணியை மாலையிலும் விடுமுறை நாள்களில் இயக்கப் பணியையும் பார்த்துக் கொள்ளலாம். கொஞ்ச காலத்துக்கேனும் அப்படி இருங்கள் " என ஸமது சாஹிப் என்னை ஊக்கப்படுத்தினார்.
அன்று இரவு ஜபருல்லாஹ் நாகூர் சென்று விட்டான். அவன் திருமணமாவன். நான் அப்போது கட்டப் பிரமச்சாரி. திருமண வயதை எல்லாம் தாண்டி இருந்தேன். திருமண நாட்டமின்றித் தனித்திருந்தேன்.
நானும் கவிஞர் தா.காசிமும் எழும்பூர் ரீகல் லாட்ஜில் என் தந்தையாரைச்
சந்திக்கச் சென்றோம்.
அங்கே இருவர் ஏற்கனவே வந்திருந்தனர். ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். தலைமை ஆசிரியர் இக்பால். மற்றவரை இப்போதுதான் இரண்டாது முறையாகப் பார்க்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைப் புதுக் கல்லூரில் "சூபியிஸ" மாநாடு ஒன்று நடந்தது. அதற்குத் தலைமை ஆசிரியர் இக்பாலுடன்
அவர் வந்திருந்தார். அவர் புலவர் அ. ஷேக் அலாவுதீன். நாகூர்க்காரர். ஜபருல்லாஹுக்குப் பழைய நண்பர். ஜபருல்லாஹ் அப்போது அவரை எனக்கு
அறிமுகம் செய்திருந்தான். ரீகல் லாட்ஜில் ரொம்ப வாடிய முகத்துடன் அவரும் இருந்தார்.
நாங்கள் சந்தித்திருந்த அந்த நாளில் இரவு ஏழு மணிக்கு கொல்லம் மெயிலில் என் தந்தையும் தாயாரும் தென்காசிக்குப் போகப் போகிறார்கள்.
அதில் என் தந்தை தீவிரமாக இருந்தார்கள்.
என் தந்தையார் இக்பாலிடமும் புலவர் அலாவுதீனிடம், அறை வராண்டாவில் நின்று கொண்டிருந்த என்னைச் சுட்டிக் காட்டி
" அதோ நிற்கிறானே அவன்தான் ஹிலால் முஸ்தபா. நீங்கள் அவனிடமே போய்ப் பேசிக் கொள்ளுங்கள். இப்போது நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு அதில் துளியும் வருத்தம் இருக்காது." எனச் சொல்லி விட்டுத் தென்காசிக்குப் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள் .
இங்கே ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். இந்த நிகழ்வுகள் நடக்கும் காலத்தில் ஜமாலியா உயர்நிலைப் பள்ளி ஆட்சி மன்றக் குழுத் தலைவராக என்ன தந்தைதான் இருந்தார்கள்.
தலைமை ஆசிரியர் இக்பாலும் புலவர் அலாவுதீனும் என்னிடம் பேச வந்தார்கள்.
என்ன தந்தையாருக்கும் எனக்கும் தெரியாத ஒரு செய்தியைப் புலவர் அலாவுதீன் இக்பாலைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே என்னிடம் தெரியப்படுத்தினார்.
புலவர் அலாவுதீன் ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜமாலியா உயர்நிலைப் பள்ளியில் செகண்ட் கிரேடு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இது தெரியும்
இடைப்பட்ட காலத்தில் புலவர் தேர்வெழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தப் புலவர் போஸ்ட்டிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். இவருக்குத்தான் அந்தப் பணி என்று நிர்வாகம் உறுதி கூறியிருக்கிறது. இதுதான் எங்களுக்குத் தெரியாதது.
இந்தப் பணியிடம் வந்த உடன் அது அவருக்குக் கொடுக்கக் கூடாது என
சிலர் சதி வேலை செய்திருக்கிறார்கள். அதனால்தான் என்னைக் கொண்டு போய் இடையில் புகுத்தி இருக்கிறார்கள்.
ஜமாலியா உயர்நிலைப் பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி.பணி நியமனம் நிருவாகத்தின் உரிமை. நான் தாளாளர் பேரன். ஆட்சி மன்றக் குழுத் தலைவரின் மகன்.
எவ்வளவு பெரிய " செக்கை " புலவர் அலாவுதீனுக்கு உருவாக்கி விட்டார்கள். நல்ல சாணக்கியர்கள்.
புலவர் அலாவுதீன் அவர் நிலையை என்னிடம் விளக்கினார்.
" புலவரே! இநத நிலை எதுவும் எனக்கோ என் தந்தைக்கோ தெரியாது.
நான் நாளைக்குப் பணியில் வந்து சேர முடிவு செய்திருந்தேன்.
இப்போது நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். நான் நிச்சயம் வரமாட்டேன்.
அந்த இடத்திற்கு உரிய முழு உரிமை உங்களுக்குத்தான் உண்டு.
எட்டு ஆண்டுகளாக இப்பள்ளிக்கு உழைத்த உங்களைத் தவிர்த்து வேறு எவருக்குக் கொடுத்தாலும் அது கொடூரமான குற்றம்தான். ஒருக்கால் நான் வேலையில் சேர்ந்த பின்னர் இது எனக்குத் தெரிந்தாலும் அந்த நிமிடமே வேலையை நான் வேலை ராஜினாமாச் செய்து விடுவேன்." என புலவர் அலாவுதீனிடம் நான் கூறினேன்.
இரு தினங்கள் கடந்தன. புலவர் அலாவுதீன் மணிவிளக்கு அலுவலகத்தில்
என் அறையில் வந்து மீண்டும் என்னைச் சந்தித்தார்.
" ஒரு மகிழ்ச்சியான செய்தி. கல்வித்துறை நமது பள்ளிக்கு இரு தமிழாசிரியர் பணியிடங்களை ஒதுக்கி ஆணை வழங்கி இருக்கிறது. நான் நேற்று சேர்ந்து விட்டேன். நீங்கள் நாளைக்கு வந்து சேருங்கள். உங்கள் ஜட்ஜ் நன்னா உங்களைக் கையோடு நாளை அழைத்து வரச் சொன்னார்கள்" புலவர் அலாவுதீன் என்னிடம் இப்படிச் சொன்னார்.
எனக்கு விருப்பம் இல்லை. மறுத்து விட்டேன். அலாவுதீன் விடவில்லை.
தினம் தினம் என்னைச் சந்தித்து வற்புறுத்தினார். ஒரு வாரத்துக்கு மேலும்
இது நீடித்தது. முடிவில் அலாவுதீனே வென்றார்.
ஏறக் குறைய ஒன்னரையாண்டு காலத்துக்குமேல் ஜமாலியாவில் தமிழாசிரியர் பணியில் தொடர்ந்தேன். நான் வேலையில் சேர்ந்த உடன் பள்ளியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவர் பதவியை என் தந்தை ராஜினாமாச் செய்து விட்டார்கள்
நான் பணிய புரிந்த கதையைச் சொன்னால், இது மட்டுமே ஒரு குறுநாவல்
ஆகிவிடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதனை எழுதுகிறேன்.
இந்த ஆண்டுகளில் நானும் ஜபருல்லாஹ்வும் வித விதமாகச் சாப்பிட்டோம். கதிஜா ஹோட்டல் புறை பிஸ்கட் எங்கள் கண்ணில் படவே இல்லை.
புலவர் அலாவுதீனின் ஆழமான நட்பு மலர்ந்திருந்தது. அவர் நல்ல கவிஞர்.மரபு வழுவாத கவிஞர்.தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ்க் காதலர். பண்பழகன் என்ற புனைபெயரில் ஏராளம் கவி புனைந்தவர்.
இதற்கிடையில் இன்னொரு வேதனை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக என் வகுப்பறைத் தோழன் மாப்பிள்ளை கலைமணி கடுமையான மன வேதனையில் உழன்று கொண்டிருந்தான்.அவனுக்குத் திருமணம் முடிந்து மூத்த மகனும் பிறந்து விட்டான். வேலை கிடைக்காத வேதனை. வெந்து கிடந்தான்.
நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஜமாலியா தாளாளர் ஜட்ஜ் நன்னாவிடம்
சென்றேன். ஒரு கோரிக்கை வைத்தேன்.
மாப்பிள்ளை கலைமணி குடும்பப் பின்னணி ரொம்ப சோக மயமான துயரம் கொண்டது. அதை எடுத்துச் சொன்னேன். எனக்கும் ஆசிரியர் பணி ஒத்து வராதது. அப்பணிக்கு நான் தகுதியற்றவன். இதனால் நான் ராஜினாமா செய்கிறேன் அந்த இடத்தைக் கலைமணிக்குத் தரக் கேட்டுக் கொண்டேன்.
ஜட்ஜ் நன்னா அமைதி காத்தார்கள். என் தந்தையாருக்குத் தொடர்பு கொண்டு இந்த எனது முடிவைத் தெரியப்படுத்தினார்கள்.
என் தந்தை சில சொற்களில் ஜட்ஜ் நன்னாவுக்குப் பதில் சொன்னார்கள்.
" மாமு! அது, அவனவன் விருப்பம். அவன் எடுக்கும் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு. எனக்கு இதில் வருத்தமும் இல்லை. கவலையும் இல்லை.நான் வற்புறுத்தப் போவது மில்லை. " எனக் கூறிவிட்டார்கள்.
என்னிடம் எதுவுமே பேசவில்லை.
ஜட்ஜ் நன்னாவை மீண்டும் போய்ப் பார்த்துக் கேட்டுக் கொண்டேன்.
" சரி பேரப்பிள்ளை! நீ கேட்ட மாதிரி உன் ராஜினாவுக்கு நான் சம்மதிக் கிறேன். ஆனால் நீ மூன்று மாத நோட்டீஸ் கொடுத்து விட்டு அப்புறம் ராஜினாமாச் செய்" என்றார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.
சரியாக மூன்றாவது மாதம் தலைமை ஆசிரியர் இக்பாலைச் சந்தித்து ராஜினாமாக் கடிதம் தந்தேன். ஜட்ஜ் நன்னா தந்திருந்த அவகாசத்தில் தளராத என் முடிவுக்கு நிர்வாகம் சம்மதம் தந்து விட்டது.
பின்னர் என் ராஜினாமாப் பணியிடத்துக்கு இண்டர்வியூ நடந்தது.
கலைமணியும் நானும் வந்திருந்தோம். ஆனால் கலைமணிக்கு வேலை வழங்கப்படவில்லை. வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டது.
மறுநாள் ஜட்ஜ் நன்னாவிடம் நான் சென்றேன்." நன்னா! நீங்கள் ஒப்புக் கொண்டு தானே நான் ராஜினாமாச் செய்தேன். நீங்கள் வாக்குத் தப்பி விட்டீர்களே? உங்களுக்கு இது தகுமா? " என நேரில் கேட்டேன்.
பேரப்பிள்ளை! C.E.O.ஆபீஸ் நிர்பந்தத்தால் அநத மனிதருக்குத் தரவேண்டியதாகி விட்டது. கலைமணிக்கு வழங்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்கள்.
அடுத்த மூன்று மாதத்தில் கலைமணிக்கு வேலை கிடைத்துவிட்டது.
இன்று ஓய்வாகி விட்டான். ஆனாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த நட்பு இன்றும் பேணப்படுகிறது.
No comments:
Post a Comment