Tuesday, March 13, 2018

அதிரையின் முத்திரை II

Sabeer Ahmed

அருளாளன் அன்புடையோன்
'அல்லாஹ்'வின் ஆசியுடன்
அதிரையெனும் அழகூரின்
அருமைதனை அறியவைப்பேன்

அதிகாலை அழைப்பொலிகள்
அகஇருளை அதிரவைக்கும்
அறிவுடையோர் அணியணியாய்
'அவன்'இல்லம் அடைந்திடுவர்



இதயமெலாம் இதமாக
இயல்பாக இறைவணங்கி
இறைவேதம் இன்னிசைக்க
இளங்காலை இலங்கிடுமே

இத்தினமும் இனியென்றும்
இன்பமுற இருந்திடவே
ஈடில்லா இணைகளற்ற
ஈருலகின் இறையருளால்

ஊரோரம் ஊர்ந்தோடும்
ஊர்தியொலி உயிருசுப்பும்
ஊதலொலி ஊரெழுப்ப
உள்ளமெல்லாம் உவகையுறும்

ஊர்போன உறவினரும்
உடன்சென்ற உற்றாரும்
ஊணுருக உழைத்தலுத்து
ஊர்திரும்பும் உற்சாகம்

எடைகனத்தோர் எட்டுவைத்து
எதிரெதெரே ஏகிடுவர்
எட்டுமணி எட்டிவிட்டால்
ஏடெடுத்தோர்  எழுதச்செல்வர்

எத்தனையோ ஏழையெல்லாம்
எனதூரில் ஏற்றம்பெற்றார்
எண்ணப்படி எப்படிப்பும்
ஏற்றெழுதி எழுச்சிபெற்றார்

ஐவேளை ஐயமற
ஐயாமார் தொழுதிடுவர்
ஒற்றுமையாய் ஓரணியாய்
'ஒருவனிடம்' ஒன்றிடுவர்

ஓடைத்தண்ணீர் ஓட்டத்தைப்போல்
ஒழுக்கத்தையும் ஓம்பிடினும்
ஒவ்வொன்றாய் ஓய்ந்துவர
ஒவ்வாமை ஓங்கிடுதே

அத்தனையும் அங்குமிங்கும்
அலைகழித்து அழிந்துவர
அதிரையென்னும் பெயருண்டு
அஃதொன்றே மாற்றமில்லை

கண்குளிர கண்டுவந்த
கதிர்விளையும் கழனியெலாம்
கட்டடமாய்க் காட்சிதரும்
காசுடையோர் கைங்கர்யம்

கிணறூறும் கொள்ளையில்லை
கனிசுமக்கும் கிளைகளில்லை
கொத்துக்கொத்தாய் காய்காய்க்கும்
கொய்யாயில்லை குருவியில்லை

சாளரத்தின் சாரலிலே
சொக்கிநின்ற சந்தோஷம்
சடுதியிலே சிதைந்ததுவே
சோகமனம் சோர்ந்திடுதே

சாலையெலாம் சகதிமிக
செருப்பில்சிக்கி சேற்றுத்துளி
சிதறிஅது சிறுபுள்ளியாய்ச்
சட்டையிலே சாயமிடும்

தோப்புகளில் தொங்கிவந்த
தென்னங்குலை தடிமனற்று
தொற்றுநோயால் துவண்டுவிட
தேங்காய்கள் தினமுதிரும்

வழித்தடம்போல் வாய்க்கால்கள்
வளர்ந்துவிட்ட விஷக்கொடிகள்
வெப்பத்திலே வெடிப்புகண்டு
வற்றிவிட்ட வெறும்குளங்கள்

வெளிநாட்டில் வேலைதேடி
வாலிபத்தை வீணடித்து
வங்கிகளில் வட்டிகட்டி
வறுமையிலே வீழ்கின்றவர்

அதிரையுண்டு அழகுயில்லை
ஆட்களுண்டு அன்புயில்லை
இதயமுண்டு இரக்கமில்லை
ஈட்டியதை ஈவதில்லை

உறவுவுண்டு உணர்வுயில்லை
ஊருணியில் ஊற்றுயில்லை
எல்லாமுண்டு எதுவுமில்லை
ஏக்கமுண்டு ஏற்றமில்லை

எத்திசையில் சென்றாலும்
என்னுலகம் அதிரையன்றோ
என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
adirainirubar.blogspot.in

No comments: