03. பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்
1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்
பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.
2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது
இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்:
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...”
தொடர்ந்து கூறினார்கள்,
'ஒரு பெண் தன்னுடைய கணவனது வீட்டில் பொறுப்புதாரியாக இருக்கிறாள். அவளுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக அவள் விசாரிக்கப்படுவாள்.' (அல்புகாரி, முஸ்லிம்)
எனவே, மறுமையில் வீட்டு விவகாரம், வீட்டின் நிர்வாகம், அதன் பரிபாலனம் பற்றி ஆணை விட பெண் விசாரிக்கப்படுவாள் என்பது மிக முக்கியமானது.
3. மார்க்கம், குடும்பம், சமூகம் பாதிக்கப்படக் கூடாது
இஸ்லாத்தை குடும்பம் சார்ந்த மார்க்கம் என்பார்கள். இஸ்லாம் குதூகலமான, சந்தோஷமான, மனநிம்மதிமிக்க குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட ஒரு மார்க்கம். அதனை அடுத்ததாக இஸ்லாத்தை சமூகம் சார்ந்த மார்க்கம் என்றும் வர்ணிப்பார்கள். உண்மையில் இவ்விரண்டும் இணைந்த ஒரு பரிபூரணமான மார்க்கம்தான் இஸ்லாம். இந்த இரண்டையும் முறையாகக் கையாள்வது ஒரு பெண்ணின் பொறுப்பாகும்.
04. பெண்ணிலைவாதிகளின் வாதங்கள்
இன்று பெண்ணிலைவாதிகள் அல்லது நவீனத்துவவாதிகள் என்று அழைக்கப்படுகின்ற பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் பெண்கள் தொழில் புரிவது தொடர்பில் சில வாதங்களை முன்வைக்கின்றனர்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். தங்களின் இயல்பை மறந்து தாங்களும் ஆண்களைப் போல் அனைத்து விவகாரங்களிலும் ஈடுபட வேண்டும், அது தமது உரிமை என வாதிடுகின்றனர். அவ்வுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக அமைப்புகளையும் உருவாக்குகிறார்கள்.
1. பெண் தொழில் செய்வதற்காக கட்டாயம் வெளியே செல்ல வேண்டும்
பெண்கள் சமூகத்தில் சம அந்தஸ்து உள்ளவர்கள் சரி பாதி. அவள் வீட்டில் முடங்கிக் கிடப்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். சமூகத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்கும் பெண்கள் தொழில் செய்யாமல், உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கின்றபோது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பெண்கள் முடங்கியிருக்கும்போது இந்நிலை உருவாகும் என்பது இவர்களின் வாதம்.
2. பெண் தொழில் செய்வதை குடும்பம் வேண்டி நிற்கிறது
குடும்ப நலனானது பெண் தொழில் செய்வதை வேண்டி நிற்கின்றது. பெண்கள் தொழில் செய்யாதபோது குடும்ப நலன் பாதிக்கப்படுகிறது. குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதனால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன. குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி நிலை, போஷாக்கு மட்டுமன்றி குடும்பத்தின் இன்னும் பல விடயங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே குடும்ப நலனானது பெண் தொழில் செய்வதை வலியுறுத்துகின்றது.
3. பெண்ணின் நலன் அவள் தொழில் செய்வதை வேண்டி நிற்கிறது
பெண் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றபோது அவளுடைய ஆளுமை விருத்தி முழுமை பெறுவதில்லை. அவள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றால்தான் அனுபவம் பெறுவாள் திறன்கள் வளரும். இவற்றிற்கூடாக ஆளுமை பெற்றவளாக அவள் மாறுவாள். எனவே, பெண்கள் தொழில் புரிவதன் மூலம் அவர்களது நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்களின் ஆளுமை விருத்தியடைகின்றன.
4. தொழில் பெண்ணின் ஆயுதம்
தொழில் பெண்ணுக்கு ஓர் ஆயுதத்தைப் போன்றது அவளது கையிலிருக்கும் பாதுகாப்புக் கவசம். ஒரு பெண் வளர்ந்து வருகின்றபோது தந்தையை இழக்கலாம் திருமண பந்தத்தில் இணைந்ததன் பின்னர் திடீரென்று கணவன் விவாகரத்துப் பெறலாம் அல்லது கணவனை இழக்கலாம். இப்படியான நிலையில் அவளுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு அரணாக, ஆயுதமாக அவளது தொழில், உழைப்பு விளங்குகின்றது. எனவே, பெண் தொழில் செய்வது அவசியமாகும். அது அவளது உரிமையும் கூட. அதனை யாரும் மீறக் கூடாது.
ஒரு பெண் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்குரிய நியாயங்களை பெண்ணிலைவாதிகள் மேற்குறித்தவாறு முதன்மைப்படுத்துகின்றனர். இந்த வாதங்களில் ஒரு சில நியாயங்கள் இருக்கின்றபோதும் பெண்கள் தொழில் புரிவது தொடர்பாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை யதார்த்த பூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும்.
05. பெண்ணிலைவாதிகளின் வாதங்களுக்கான பதில்கள்
1. பெண் தொழில் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள்
இன்றைய உலக அமைப்பின்படி பெண் தொழில் புரிவதற்கு பலபோது நிர்ப்பந்திக்கப்படுகின்றாள் என்பதுதான் கசப்பான உண்மையாகும். கிழக்கு உலகில் குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் கட்டாயமாக தொழில் புரிய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அண்மைக்காலம் வரை இல்லாமலிருந்த போதிலும் மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில் பெண்கள் தொழில் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தொழில் புரியாதபோது அவர்களால் தொடர்ந்தும் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
சமத்துவம், சம வாய்ப்பு, சம அந்தஸ்து, ஆண்-பெண் வேறு பாடில்லாமல் இருசாராரும் சம வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற கருத்து அங்கு பல தசாப்தங்களாக வலியுறுத்தப்பட்டதன் விளைவாக ஆண்-பெண் என்ற பாகுபாடு மறக்கப்பட்டு அல்லது மறக்கடிக்கப்பட்டு மற்றொரு பால் அதாவது ஆணுமில்லாத பெண்ணுமில்லாத ஓர் இனம் மேற்குலகில் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தளவுக்கு எனில், தோற்றத்தில்கூட ஆண், பெண் என்று தெரியாத நிலை! இத்தகைய சம வாய்ப்பை அல்லது சம அந்தஸ்தை எதிர்பார்த்த பெண்கள் ஆண்களுக்கு சமமாக இன்று விரும்பியோ விரும்பாமலோ தொழிலுக்குப் போயாக வேண்டும். அவர்கள் உழைத்தேயாக வேண்டிய கட்டாய நிலை தோன்றியுள்ளது. மிகவும் இயல்பாக மேற்கில் இந்நிலை இன்று உருவாகியிருக்கிறது.
2. குடும்ப, சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது
பெண்கள் நாட்டின் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றிற்குப் பங்களிக்கச் சென்றதன் மோசமான விளைவுகளை இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக, பெண்கள் தொழில் புரிவதில் சமூக நலன் இருப்பதாக சொல்லப்படுகின்றது. உண்மை என்னவென்றால், பெண்கள் தங்களது வீட்டிலே தங்களுடைய பணியை செவ்வனே நிறைவேற்றுவதில்தான் ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகுவது தங்கியிருக்கிறது. ஆண்கள் ஆண்களுக்குரிய பணிகளை நிறைவேற்றுவது போல பெண்கள் பெண்களுக்குரிய பணிகளை குறிப்பாக, தங்களது ராஜ்ஜியமான வீட்டுப் பணிகளை செவ்வனே நிறைவேற்றுகின்ற போதுதான் எல்லோரும் எதிர்பார்க்கும் நிறைவான வாழ்க்கை, சந்தோஷமான, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, அமைதியான சமூக வாழ்க்கை உருவாகும் என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, பெண்கள் தொழிலுக்குச் செல்வதால் இத்தகைய ஆரோக்கியமான குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
உலகில் தொழிற்பிரிப்பின் ஊடாக பொது உற்பத்திகளை அதிகரிக்கலாம் என்பது நியதி. எந்த அளவுக்கு தொழிற்பிரிப்பு நடக்கின்றதோ அந்த அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்பது பொருளியல் ரீதியான உண்மை. அந்த அடிப்படையில்தான் ஒரு வேலையை ஒருவர் மாத்திரம் செய்யாமல் அந்த வேலை பலருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அல்லாஹுத் தஆலா மனிதனைப் படைக்கும்போதே தெய்வீக ரீதியான ஒரு தொழிற்பிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறான். அவன் ஆணைப் படைத்து அவனது தன்மை, சுபாவம் என்பவற்றுக்கு ஏற்ப சில பொறுப்புக்களையும் பெண்ணைப் படைத்து அவளது சுபாவம், இயல்பு என்பவற்றுக்கு ஏற்ப சில பொறுப்புகளையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வினுடைய தொழிற்பிரிப்புக்கு ஏற்ப அவை நடைபெற்றால் வாழ்க்கை வளமடையும் நிறைவு பெறும் சந்தோஷமும் சுகமும் தேடி வரும்.
3. ஆண்-பெண் சிறப்புத் தேர்ச்சி பாதிப்பு
அல்லாஹுத் தஆலா ஆண்களுக்கு சில சிறப்புத் தேர்ச்சிகளைக் கொடுத்திருப்பது போலவே பெண்களுக்கும் சில சிறப்புத் தேர்ச்சிகளைக் கொடுத்திருக்கிறான். அதாவது ஆண்களுக்கு என்று சில திறன்கள், திறமைகள், ஆற்றல்கள், ஆளுமைகளையும் பெண்களுக்கு என்று சில ஆற்றல்கள், ஆளுமைகளையும் வௌ;வேறாக மாத்திரமன்றி அவர்களுக்கென்றே பிரத்தியேகமான ஆளுமைகளையும் கொடுத்திருக்கின்றான்.
தாய்மை, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் என்ற இந்த அம்சங்கள்தான் பெண்ணுக்குரிய, இறைவன் கொடுத்துள்ள இயல்பான சிறப்புத் திறமைகள்.
உதாரணமாக, ஒருவருக்கு விஞ்ஞான ரீதியாகவும், பௌதிக ரீதியாகவும் 60 கிலோ எடையுள்ள ஒரு பொருளையே தூக்க முடியும் என்றிருக்கும்போது, அவர் 100 கிலோ எடையுள்ள ஒரு பொருளைத் தூக்க முயல்கிறார் என்றால் அவரால் அதனைத் தூக்க முடியும், தூக்க முடியாது என்பதல்ல பிரச்சினை. அவ்வாறு அவர் தூக்கினால் அதன் பின்விளைவுகளை அவர் சுமக்க வேண்டியிருக்கும்.
அவ்வாறே ஓர் ஆணின் வேலையை ஒரு பெண் செய்யலாம். பெண்கள் வாகனம் ஓட்டலாம் விமானமும் ஓட்டலாம் முயற்சித்தால் அவர்களால் இயலாது என்றில்லை. இது ஒரு சாதனையாகக்கூட கருதப்பட்டது. ஆனால் இன்று இவற்றின் பின்விளைவுகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விதிகள் இருப்பது போலவே விதிவிலக்கு இருப்பதும் ஒரு விதி. ஆனால், பெரும்பாலானோரை மையமாகக் கொண்டே தீர்ப்புக்கள் அமையும். இதேபோல் ஒருசில ஆண்கள் சமையலறையில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். இதனை வைத்து அவருக்கு சமையலறையில் வேலை செய்ய இயலுமென்றால் ஏன் இவருக்கு அவ்வாறு செயற்பட முடியாது என்று ஏனைய ஆண்களிடம் கேட்க முடியாது.
ஆண்மைக் குணமுடைய சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்களைப் போன்று செயற்படுவார்கள். அதேபோல் சில ஆண்களிடம் பெண்மைக் குணம் ஏற்படுவதை அவதானிக்கிறோம். இதனை விதியாக மாற்றி பெண்களாலும் ஆண்களுக்குச் சமமாக தொழில் செய்ய முடியும் எனக் கருதுவது தவறு.
4. பெண்ணின் நலம் பாதிக்கப்படல்
'அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அவர்கள் அமைதி காண வேண்டும் என்பதற்காக அவர்களிலிருந்தே அவர்களது துணைவியையும் படைத்தான்.” (அல்அஃராப்: 189)
ஆண் அமைதி காணும் இடம்தான் பெண். பெண்ணுடைய அடிப்படையானதும் மிக முக்கியமானதுமான கடமை என்னவென்றால், ஓர் ஆணுக்கு அமைதியைக் கொடுப்பதே. இதனையே அல்குர்ஆன், 'தஸ்குனு இலைஹா'என்று சொல்கிறது. திருமணம் மற்றும் குடும்பக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் அமைதியை, நிம்மதியைப் பெறுவதாகும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
தொழிலுக்குச் சென்று களைப்படைந்து தனக்கு ஆறுதலைத் தருவது யாரென்ற ஏக்கத்தோடு வீடு திரும்பும் பெண்ணினால் எப்படி ஆணுக்கு அமைதியைக் கொடுக்க முடியும்! என்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
தனக்கே அமைதி இல்லாதபோது அவள் எப்படி கணவனுக்கு ஆறுதலைக் கொடுப்பாள்! தாய், தந்தையருக்கும் வீட்டிலிருக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி அமைதி கொடுப்பாள்!!
மட்டுமன்றி, ஷஎல்லோரும் என்னையல்லவா கவனிக்க வேண்டும்! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு வருகிறேன்...!’ என்றுதான் அவள் சிந்திப்பாள்.
'ஒன்றை இழந்தவனால் அதனை பிறருக்கு கொடுக்க முடியாது'என்பது அரபுப் பழமொழி. தன்னிடம் இல்லாததை மற்றவனுக்குக் கொடுக்க முடியாது. தொழில் செய்யும் ஒரு பெண் களைப்படைந்து அமைதியை இழந்து மனஅழுத்தத்தில் இருக்கும் வேளை அவள் எப்படி கணவனுக்கு அமைதியை வழங்க முடியும்!
5. தொழில் ஓர் ஆயுதமா?
மேற்குலகைப் பொறுத்தவரை தொழில் பெண்ணுடைய ஆயுதம்தான். ஆனால், தூய இஸ்லாமிய அடிப்படைகள் பேணப்படுகின்ற ஒரு சமூகத்தில் தொழிலானது பெண்ணுடைய ஆயுதமல்ல. அத்தகைய சூழலில் வாழ்கின்ற பெண்ணுக்கு தொழில் செய்ய வேண்டிய, சம்பாதிக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் ஏற்படப் போவதில்லை.
பெண்ணைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் சமூகத்தைச் சார்ந்தது. குறிப்பாக, சமூகத்திலுள்ள ஆண்களைச் சார்ந்தது. இன்னும் தெளிவாகச் சொன்னால் பெண் என்பவள் இஸ்லாமிய சமூகத்தில் அதிதி(Guest) உடைய நிலையில் வைத்து நோக்கப்படுகின்றாள். பெண்ணைக் கவனிக்க சட்ட ரீதியாக கடப்பாடுள்ளவர்கள் ஆண்கள்.
பெண்ணைக் கவனிக்க சட்ட ரீதியான கடப்பாடுடையவர்கள் வரிசையில் முதலாமவர் தந்தை. குழந்தையாக இருக்கும்போது ஒரு பெண்ணை கவனிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தந்தையையே சாரும். இது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்.
திருமணத்திற்குப் பிறகு பெண்ணை கணவன் கவனிக்க வேண்டும். அது அவருடைய கடமை. இது பற்றி அவர் பெருமையடிக்க முடியாது ஷஎனக்கு உன்னைக் கவனிக்க முடியாது’ என்று கூற முடியாது. ஏனெனில் பெண்ணின் முழு வேலையுமே வீட்டை நிர்வகிப்பதுதான். அவளைக் கவனிப்பது கணவனின் கடமை.
அடுத்தது தாய் என்ற ரீதியில் அவளது பிள்ளைகள் கவனிக்க வேண்டும். பிறகு சகோதரர்கள், உறவினர்கள் அவளைக் கவனிக்க வேண்டும்.
ஒரு பெண்ணை நிர்க்கதியாக சமூகத்தில் விட முடியாது. அவள் எப்போதும் கடைசி வரைக்கும் அதிதி (Guest) ஆகத்தான் இருப்பாள். இது இஸ்லாம் உத்தரவாதப்படுத்தும் பெண்ணுக்குள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்று.
எனவே, தொழில் புரிவது பெண்களின் ஆயுதம் என்ற வாதம் மேற்குலகிற்குப் பொருத்தமானது. அவர்கள் பேசும் சமத்துவம், சம அந்தஸ்த்து மற்றும் பால் பற்றிய கண்ணோட்டத்தின் விளைவாக இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அங்கு கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு கிடையாது வாழ்க்கைத் துணை (Life Partner) என்ற பெயரில் தாம் விரும்பியவர்களுடன் விரும்பிய நேரத்தில் ஒன்றாக இருந்துவிட்டு செல்லும் பழக்கமே பரவியிருக்கிறது. அங்கு ஆண்கள் பெண்களின் பொறுப்பாளர்கள் அல்ல.
தந்தை மகளைப் பராமரிக்க வேண்டும் கணவன் மனைவியைக் கவனிக்க வேண்டும் சகோதரர்கள் சகோதரிகளைப் பார்க்க வேண்டும் என்ற கடமை இல்லை. எனவே மேற்கில் பெண் வாழ வேண்டும் என்றிருந்தால் கட்டாயம் தொழில் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தாக வேண்டும்.
ஆனால், இஸ்லாம் ஒரு பெண்ணைப் பராமரிக்க அவளது தந்தை, கணவன், மகன், சகோதரன் போன்றோரை சட்ட ரீதியாக கடமைப் படுத்தியிருப்பதனால் பெண் அதிதியுடைய நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றாள்.
(தொடரும்..இன்ஷா அல்லாஹ் )
நன்றி http://www.sheikhagar.org
No comments:
Post a Comment