Muthu Krishnan
நேற்றைய நாள் எனக்கு மிகவும் முக்கிய நாள், என் பிறந்த நாள் என்பதால் அல்ல மாறாக இதே நாளில் நான் ஒரு முடிவெடுத்தேன்.
1993ல் தமிழைக் கற்கத் தொடங்கி வாசிப்பின் வழியே இந்த சமூகத்தை அறியத்தொடங்கினேன். என்னை சுற்றிலும் நிலவிய வறுமை. தீண்டாமை, வன்முறைகள் என்னை கடுமையாகப் பாதித்தது. இதே காலத்தில் நான் வாசித்த நூல்கள் மற்றும் நான் சந்தித்த ஆளுமைகள் எனக்கு இந்தியாவையும் அதன் சிக்கல்களையும் புரிய வைத்தார்கள். என் ஒவ்வொரு பயணத்திலும் இந்த தேசத்தின் அழுகுரல் எனக்கு கேட்டுக் கொண்டேயிருந்தது. பல்வேறு பணிகள் -தொழில்கள் செய்துகொண்டே கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வாசிப்பதும் உரையாடுவதும் என்னை, என் புரிதலை செழுமைப்படுத்திக் கொண்டேயிருந்தது.
1993ல் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தேன், சில காலம் பணியாற்றினேன். கட்சியின் முழுநேர ஊழியராக மாற வேண்டும் என்று பெரும் ஆவல் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு அமைப்பிற்குள் அடைபட முடியாமல் தவித்தேன்.
நான் செய்து வந்த தொழில்கள், வேலைகள் என அனைத்தையும் நிறுத்துவது. இனி பொருள் ஈட்டுவதில்லை எஞ்சிய வாழ்வை முழு நேரமாக இந்த சமூகத்தின் மாற்றத்திற்கு ஒப்புக் கொடுப்பது என முடிவு செய்தேன்.
இந்த பெரும் முடிவை 1998ல் இதே (17.03.1998) நாளில் தான் எடுத்தேன். மின்னற் பொழுதில் 20 ஆண்டுகள் ஓடிவிட்டது. நள்ளிரவு முதல் அப்படி எதை நான் சாதித்துவிட்டேன் என்று என் மனம் கனத்து கிடக்கிறது. தீண்டாமை ஒழியவில்லை, சாதிவெறி அச்சுறுத்துகிறது, வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது, விவசாயிகளின் நிலை இன்னும் பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, நாடு கார்பரேட்டுகளுக்கு அனுதினமும் விற்கப்படுகிறது.
இருப்பினும் இவைகளுக்கு எதிராக மக்களைத் தயார் செய்திருக்கிறேன், என் கைவசம் உள்ள மாற்றம் என்னும் விதையை தினசரி விதைத்து வருகிறேன். எழுத்தாக, பேச்சாக, உரையாடலாக இந்த விதையை என் மரணம் வரை விதைப்பேன். மாற்றம் என்னும் நம்பிக்கையை விதைப்பேன், இந்த விதையின் தளிர்களை அவ்வப்போது காணுகிறேன், அந்த தளிர்கள் என்னுள் ஈரத்தை பாய்ச்சுகிறது. நான் மட்டும் போதாது இன்னும் ஒர் ஆயிரம் பேர் இந்த சமூகத்தின் பால் இயங்க தேவைப்படுகிறார்கள். போபாலின் அழுகுரல் என் உறக்க்கத்தை கலைத்தது, பாபர் மசூதியின் இடிபாடுகளில் சிக்கி என் சதை கிழிந்தது, இடிந்தகரை மக்களின் குரல் சதா கேட்டுக் கொண்டேயிருக்கிறது, மும்பை விவசாயிகள் நேற்று கூட என்னைத் தங்களின் பாதங்கள் காட்டி அழைத்தார்கள், இந்த நாட்டில் இருக்கும் எளியவர்கள், அதிகாரம் அற்றவர்கள் அழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், என் காதில் அது சதா கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
நான் எடுத்த முடிவு மிகச் சரியானது என்று நான் இன்று மீண்டும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன். குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்... எத்தனை அவமானங்கள், அவமரியாதைகள், கேவலங்கள், அலட்சியங்கள் வந்தாலும் இந்த சமூகத்தின் சுயமரியாதைக்காக உழைத்துக் கிடப்பேன், நீங்கள் அனைவரும் என்னை சுற்றி இருக்கும் போது எனக்கு என்ன கவலை, வாருங்கள் தோழர்களே, நண்பர்களே ஏதேனும் ஒன்றை நாம் நம் எஞ்சிய ஆயுட்காலத்தில் செய்திடலாம்....
வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள் பல.... நீங்கள் கொடுத்துள்ள உற்சாகத்தில் தொடுவானம் நோக்கி இன்னும் கொஞ்சம் ஓடுவேன்....
Muthu Krishnan
No comments:
Post a Comment