Akbar Abbas Travels
நினைவலைகள் – 2
காவேரி ஆறு இன்றைய நிலை பாரு!!!
சிறுவயதிலிருந்தே காவேரி ஆற்றுக்கும் எனக்கும் நெருங்கிய பந்தமுண்டு. இன்று என்னை காவிரியை பற்றி எழுத என்னை தூண்டிய அண்ணன் நீடூர் அஷ்ரப் அலி அவர்களுக்கு என் முதற்க்கண் நன்றி. முகநூலில் அவர் இன்று போட்ட வாய்க்கால் படம் தான் என்னை காவிரியை பற்றி எழுத தூண்டியது.
நான் சிறுவயதில் காவிரி செட்டித்தெருவில் குடியிருந்ததால், தினமும் காவிரில் குளிக்கக்கூடிய அரும்பெரும் வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது.அதுஎன்னவோ தெரியல காவிரியை பார்த்துவிட்டால், அது கரை புரண்டு ஓடும் அழகை பார்த்தால், மனதில் ஒரு சந்தோசம் வருமே! அதை சொல்ல வார்த்தைகளே கிடையாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களில் காவிரியும் உண்டு என்றால் அது மிகையில்லை. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் (வீட்டுக்கு தெரிந்தும்,தெரியாமலும்) ஆற்றுக்கு சென்று மணிகணக்கில் குளிப்பது தனிசுகம்.
சிறுவயதில் எங்களுக்கு இருந்த ஒரே தேகப்பயிற்சி நீச்சல் மட்டும்தான். எந்தவித கட்டணமும் வாங்கி கொள்ளாமல் எங்களுக்கு இலவசமாக நீச்சல் கற்று தந்தது என் காவிரி ஆறு. ஆனால் இன்று சின்ன கட்டைகட்டி அதில் மோட்டார் தண்ணிர் விட்டு அதற்க்கு பெயர் நீச்சல் குளம். அதற்க்கு கட்டணம் ரூ.1500 (என்ன கொடுமை சார் இது). வாழ்வில் எத்துனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பசுமையை மனதில் ஓடி கொண்டிருக்கிறது எனது காவிரி நினைவுகள்.
எங்கள் அம்மா என்னை அழைத்துக்கொண்டு காவிரி ஆற்றுக்கு சென்று ஷேம் ஷேம் பப்பி ஷேமாக (சின்ன வயசுல பாஸ் ) குளிக்க வைக்க, அதை என் பள்ளி நண்பர், நண்பிகள் பார்த்து தொலைக்க, நான் வெட்கத்தில் தலை குனிந்து நெளிய அது ஒரு தனி கதை. அதேபோல் வீட்டிற்கு தெரியாமல் குளிக்க செல்லும் போது, வீட்டில் கண்டுபிடிக்காமல் இருக்க, ஆடைகளை அவிழ்த்து வைத்து குளித்து விட்டு வருவேன். என் அம்மா ஆற்றில் குளித்தாயா? எனக்கேட்டால், உடனே நான் இல்லையே வேணும்னா ஆடையை தொட்டு பாருங்கள் நனையாமல் இருப்பதை என்று நான் சொன்னவுடன், அம்மா உடனே என் கண்ணை பார்த்து, உன் கண்ணு எப்படி சிவந்து கிடக்கு,(கடைசில அந்த மண்டையில இருந்த கொண்டைய மறைக்கலியே பாஸ்) குளிக்கலன்னு பொய்யா சொல்ற என்று சொல்லி என் அம்மாவிடம் அடி வாங்கிய நிகழ்வுகள் அழகானவை.
விடுமுறை நாட்களில் என் உயிர் நண்பர்கள் மணிகண்டன், ராஜிலு, ஆகியோருடன் ஆற்றுக்கு சென்று விளையாடி மகிழ்வோம். தரையில் கிரிக்கெட், தண்ணீரில் நீச்சல் இதுதான் எங்கள் விளையாட்டு. தண்ணீரில் பல வகையான விளையாட்டு விளையாடுவோம். ஒன்று, எங்களுக்குள் பந்தயம் வைத்து யார் அதிகநேரம் தண்ணீரில் முழ்கி இருக்கார்களோ அவரே வெற்றி பெற்றவர். எனக்கு தெரிந்து உலகத்திலேயே மிகச்சிறந்த மூச்சு பயிற்சி அதுதான். இரண்டு, நண்பர்கள் அனைவரும் தண்ணீரில் குதித்து, அதிக உயரத்திற்கு யார் தண்ணீரை எழுப்புகிறார்களோ? அவர் வெற்றி பெற்றவர். மூன்று, ஒரு குறிப்பிட்ட தூரத்தை எதிர் நீச்சல் போட்டு யார் முதலில் சென்று தொடுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவர். நான்கு, இக்கரையில் முழ்கி உள்நீச்சலில் யார் அக்கரையை முதலில் தொடுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கபடுவார். இப்படி பல தர பட்ட விளையாட்டுக்கள் ஆற்று நீரில் விளையாடுவோம். இப்படி எல்லாம் தண்ணீரிலேயே கிடந்தபோது எந்த நோயும் வரவில்லை, ஆனால் இப்போதுள்ள பிள்ளைகளுக்கு வெளியே மழை பெய்தாலே, ஜுரம் வருவதை கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. விடலை பருவத்தில் மனது சரியில்லையென்றால், ஆற்றுக்கு சென்று கல்லை எடுத்து தண்ணியில் போட போட, மனது லேசாகும். (இது ஒரு ஜென் தத்துவ முறை. சொல்லிவைப்போமே. அரசியல்வாதிகள் எதை சொன்னாலும் நம்பும் நாம் இதை நம்ப மாட்டோமா?!!!)
ஒரு முறை கோடை விடுமுறையில் திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி அருகிலுள்ள அத்திக்கடை என்னும் ஊருக்கு என் சின்னம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். என் சின்னம்மா வீட்டிற்கு எதிர்புறம் மிக நீண்ட ஆறு அழகாக ஓடிகொண்டிருக்கும். ஒருநாள் காலை என் சின்னத்தா குளிக்க என்னையும், என் தம்பி தங்கைகளையும் அழைத்து கொண்டு ஆற்றிற்கு சென்றார். நான் ஐந்து அல்லது ஆறாவது படித்துகொண்டிருந்தேன்.அப்போது தான் நீச்சல் பழகிகொண்டிருந்தேன். என் தம்பியை என் சின்னத்தா குளிக்க வைத்து கொண்டிருந்தார். அப்போது கரையில் நீச்சல் பழகி கொண்டிருந்த நான், ஆற்றில் அடித்து செல்லப்பட்டேன். நீரில் மூழ்கியபடி, கையை மட்டும் வெளியே நீட்டியபடி, சென்றுகொண்டிருந்தேன். திடீரென திரும்பி பார்த்த என் சின்னதா, உடனே மின்னல் வேகத்தில் தண்ணீரில் குதித்து, என் தலை முடியை பிடித்து மேல இழுத்து, அடுத்த கரையில் என்னை கரை சேர்த்தார். இல்லையென்றால் அன்றே ஜல சமாதி! அடைந்திருப்பேன். இது என் வாழ்வில் நடந்த திகில் அனுபவங்கள்.
காவிரி நீரை நம்பியே இருந்த அக்ரஹாரங்கள் நம்மூரில் அதிகம். அதேபோல் குளிர் காலங்களில் ஐயப்ப பக்தர்கள் நான்கு மணிக்கெல்லாம் குளிக்கவருவார்கள் (நான் சொல்வது அப்போதைய பக்தர்கள்) பக்தியோடு தெய்வீக மணம் ஆற்றில் கலந்தோடும். குளிர் காலத்தில் நடுங்கும் குளிரில் குளிக்க தயங்கி தயங்கி நின்று கொண்டிருக்க, எங்கிருந்தோ ஒருவன் பாய்ந்து என்னையும் ஆற்றில் தள்ளி, அவனும் ஆற்றில் குதிப்பான். அப்போது ஏற்படுமே ஒரு சிலிர்ப்பு!!! ஆயிரம் கடலுக்கு சென்று குளித்தாலும் அந்த சந்தோஷம் கிடைக்காது.
இப்படி என்னுடைய வாழ்வில் ஒன்றோடு ஒன்றாய் கலந்திட்ட அந்த காவிரி ஆற்றை இன்று காணும்பொழுது, என் மனது பதைபதைக்கிறது. என் ஆறு என்னோடு இப்படி பேசுகிறது. ஏ! நண்பா எத்துனை நாள் என்னுடன் சந்தோசமாக இருந்துள்ளாய்! எத்துனை நாள் என்னுடன் விளையாடினாய்,குதித்தாய்,ஓடினாய், ஆடினாய். ஆனால் இன்றோ நான் வறண்டு போய்விட்டேன். குப்பை கூலமாய் காட்சி அளிக்கிறேன். அன்று பெண் சதையை வேட்டையாடியவர்கள், இன்று மண் சதையை வெட்டி பிழைக்கிறார்கள். அன்று என்னில் குளித்து கரையேறியவர்கள் இன்று விலையாகி போனது என் தலைழுத்து என்று தன்னில் நீர்கூட விடமுடியாமல் சோகமாய் காட்சியளிப்பது வேதனை.
நண்பர்களே இதை நான் பதிவிடும் நோக்கம் என் கதையை சொல்வதற்கு அல்ல. இதே போல் காவிரி ஆறு எத்தனையோ பேரின் வரலாறை சொல்லும். ஆனால் இன்று நம் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது. இனிமேலும் நாம் காவிரியை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லையானால், நன்றி மறந்த கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடுவோம். மீண்டும் சிந்திப்போம். நன்றி.
Akbar Abbas Travels
No comments:
Post a Comment