Sunday, March 18, 2018

காணாமல் போன முஸ்லிம் கிராமம்...

காணாமல் போன 
முஸ்லிம் கிராமம்... 
**********************
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் கணபதிபுரம் அருகிலிருந்து தெற்கு பகுதியில் இரண்டு கி. மீ. உள்வாங்கி காணப்படும் கிராமம் #கன்னக்குறிச்சி..
தற்போது இந்து நாடார்களும், சுண்ணாம்பு தொழில் செய்யும் பரவர் சமுதாய மக்களும் பெருமளவு வாழும் கன்னக்குறிச்சி ஊரில் ஒரு காலத்தில் முஸ்லிம்கள மட்டுமே வசித்த தெரு இருந்தது வரலாற்று உண்மை..
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கன்னக்குறிச்சி ஊரில் வாழ்ந்த முஸ்லிம்கள செல்வந்தர்களாகவும், தென்னை விவசாயம் மற்றும் கயிறு தொழில் செய்து முதலாளி எனும் அடைமொழியுடன் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.. கன்னக்குறிச்சி ஊரைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தில் பள்ளிவாசல் கட்டி ஐவேளை தொழுகை நடத்தி வந்ததும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த குளச்சல் ஜமாஅத்திலிருந்து கத்தீபுகள் சென்று வந்ததும் தெரிய வருகிறது..
மர்ஹூம் அனிபா லெப்பை, மர்ஹூம் நூறு முகமது ஆகியோர் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மற்றும் பெருநாள் தொழுகையை இமாமாக சென்று நடத்தியுள்ளார்
காலப்போக்கில் அந்த ஊரில் வசித்த முஸ்லிம்கள வாரிசுகளின் கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்து படிப்படியாக சொத்துக்களை விற்பனை செய்துவிட்டு இடம் பெயர ஆரம்பித்து பல்வேறு பகுதிகளில் குடியேறியது நடந்தது.. குளச்சலில் கூட சில வருடங்களுக்கு முன்னர் கன்னக்குறிச்சிகாரர் குடும்பம் என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வகித்தது நினைவுக்கு வருகிறது..
சொத்துக்கள் விற்று ஒவ்வொரு குடும்பமாக வெளியேற தொழுவதற்கு ஆளில்லாமல் பள்ளிவாசல் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து கட்டிடம் இடிந்தது.. பள்ளிவாசல் கட்டிய நபர் இடத்தை வகஃப் செய்யாத காரணமாக அவரது வாரிசுகள் தங்களது மீதமுள்ள நிலத்துடன் இந்த நிலத்தையும் சேர்த்து விற்பனை செய்தது தெரிய வருகிறது...
ஆனால் அங்குள்ள மையவாடியில் ஒரு மகான் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வளாகம் காம்பவுண்ட் சுவரோடு உள்ளதும் அவ்வப்போது சிலர் சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

- Colachel Azheem 
==========

மலுக்குக்கண்ணு பிள்ளை எனது உப்பாவின் வாப்பாவின் பெயர்.அவரது மனைவி நாயர் சமூகத்தில் இருந்து முஸ்லிமாக மதம்மாறியவர்.அவரின் இன்னொரு மனைவி சிரியன் கிறித்தவ பெண்.எனது மூதாதைகள் அரபுவம்சாவழியினர்.இன்று குளச்சல் தக்கலை போன்ற ஊர்களில் உள்ளோர்கள் கன்னக்குறிச்சியின் வம்சாவழியினரே.
 கன்னக்குறிச்சி எனது உம்மாவின் ஊர்.எனது உப்பா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஹவில்தார்.ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஊரின் தலைவர்.பெரும் கோடீஸ்வரர்.
இன்ஷா அல்லா விரைவில் ஒரு நூலாகவே வெளியிடும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன.

Mujeeb Rahman
----------------------------------------
Colachel Azheem நிச்சயமாக பேராசிரியர்..
அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது.. ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
------------------------------------------------------

 இன்றைய குமரி மாவட்டத்தில் முதலில் இஸ்லாம் பரவிய ஊர் பெயர் பட்டியலில் கன்னக்குறிச்சியும் இடம்பெற்றுள்ளது. தெற்கில் இஸ்லாம் பரவிய வரலாற்று நூலில் இவ்வூர் பெயர் இடம்பெற்றுள்ளது. முதலில் இஸ்லாம் பரவிய ஊரில் இன்று ஒரு இஸ்லாமிய குடும்பம்கூட இல்லை என்பது வேதனை
-Mohamed Askar
--------------------------------------
 டச்சு படையெடுப்பில் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளான முன்னர் முடலை நாடு என்று அழைக்கப்பட்ட மிடாலத்தின் படநிலம் (டச்சு யுத்தம் நடந்த இடம் ) முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர் . அதேபோன்று இதன் பக்கத்து ஏரியாவான முருக்கம்பாடி பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக முன்னோர்கள் கூற கேட்டிருக்கிறேன். போர்ச்சுகீசிய தாக்குதலால் உவரியில் முஸ்லிம்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்தது போல் குமரி மாவட்டத்திலும் நடந்திருக்க கூடும்

கன்னங்குறிச்சியிலிருந்து சிலர் சூரங்குடிக்கும் இடம் பெயர்ந்தனர்.
குமரி மாவட்டத்தில் பல சிறு முஸ்லிம் முஹல்லாக்கள் இது போன்று காணாமல் போயுள்ளன. வட்டவிளை(செல்லங்கோணம்), மண்டைக்காடு,படூர்,பள்ளியாடி

அஞ்சு கிராமம் அருகிலுள்ள கன்னங்குளம், சின்னமுட்டம்

 கிறிஸ்தவ மிஷனரிகள் வந்தபிறகு நாகர்கோவில் பெண்க்ள் கிறிஸ்தவ கல்லூரி பகுதி, பள்ளிவிளை காணாமல் போனது
-Ansar Midalam



இதனையும் கிளிக் செய்து படிக்கவும் அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Colachel Azheem

No comments: