கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.
இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது.
இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.
Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?
No comments:
Post a Comment