Sunday, June 18, 2017

தந்தை .../ J Banu Haroon

 J Banu Haroon
=======
என் தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் பெருநாளைக் கொண்டாடாத வெறுமையான மனநிலையில், செய்வதறியாது இருந்தோம் ...
எப்போதும் போல் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்திறங்குவதாக பக்கர் மாமாவின் கடிதம் வந்து சேர்ந்த இரவு இரயிலில் வந்திறங்கினவரை அழைத்துவர அண்ணன் கிளம்பிப்போனார் ...
எப்போதும் மாமா எங்கள் வீட்டிற்கு அம்மாவைப் பார்க்க வரும்போதெல்லாம் காலையில் கடிதம் வரும் ...அன்றிரவு இரயிலில் மாமாவே வந்திறங்குவார்கள் ..சிதம்பரத்தில் அப்போதெல்லாம் மாலையில் மீன் விற்பனை அமோகமாக இருக்கும் ...மாமா மீன் விரும்பி .''.நல்ல மீன் வாங்கி ஆக்கி வை'' ...என்கிற வரிகளும் கடிதத்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் ...மாமாவுடன் வரும் நண்பர்களும் மீன் விரும்பிகள்தாம் ...பலவிதங்களில் அம்மா ஆட்களை வைத்துக்கொண்டு மீன்களை சமைத்து வைப்பார்
..ஆனாலும் மாமாவுக்குப் பிடித்தது .. ..மீன் ஆணத்தில் போடப்படும் பெரிய மீன்களின் முழு தலைக்கறிதான் .. மாமாவுக்கென்று ஸ்பெஷலாக கட்டிலில் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் மெத்தைப்பாய் போடப்பட்டிருக்கும் .''.என் பெரியண்ணன் அந்தப்பாயில்தான் படுக்கும் ..''என்று அம்மா பத்திரப்படுத்தி வைத்திருப்பார் ...'' என் அத்தாவுக்குப்பிறகு பெரியண்ணன்தான் எனக்கு அத்தா ஸ்தானம் ''...என்று கண்ணீர் விடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன் ...அம்மாவின் அந்த அன்பும் , அந்நியோன்யமும் ,அவர்களுக்காகவும் ,அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பல விட்டுக்கொடுத்தல்களுடன் அம்மாவின் மரணம் வரைக்கும் தொடர்ந்தது ...
''அங்கணி ,இங்கே வா ...--- மாமா என்னை இப்படித்தான் அழைப்பார்கள் .
மாமா எங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு செல்லப்பெயரிட்டுத்தான் அழைப்பார்கள்.. அவைகளெல்லாம் சிறுபிராயத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் மழலை மொழியில் அழைத்துக்கொண்ட பெயர்களாகத்தானிருக்கும்...
உதாரணமாக ,
என் கணவரை ---ஆணூநம்பி ..( ஹாரூன் தம்பி )
அவர் சகோதரரை --- காக்கு ...(விலாயத் )
என் சகோதரரை ---- அஞ்சா... (ரிஜ்வான் )
என் சகோதரியை ---- போஜா (பௌஜியா )...இப்படி ..
திரும்பவும் ,''அங்கணி ..என்ன பண்ற ...இங்க வா ...''
நான் போய் நின்றேன்..'' நல்லா படிக்கிறியா ..''
''ம் ...
'' என்ன... ம் ...? கவனம் சிதறாம நல்லா படிக்கணும் ...உனக்கு மெட்றாஸ் எஸ் ஐ ஈ டி --லே சீட்டு உண்டு ..என்ன வேணா படிக்கலாம் ...
''ம் ...
''பெருநாளைக்கு என்னவெல்லாம் பிளான் பண்ணியிருக்கே ..''அருகில் அழைத்து என் தலையை வருடியபடி கேட்கிறார் ....
கண்கள் பணிக்க பட்டென்று சொன்னேன் ''எங்களுக்குத்தான் இந்த வருஷம் பெருநாள் கிடையாதே ....
''யார் சொன்னது ...ஏன் பெருநாள் கிடையாது ...
''எங்க அத்தா இறந்து போனதால் எங்களுக்கு பெருநாள் கிடையாதாம் .. குடும்பத்தில யாருமே இந்த வருஷம் பெருநாள் கொண்டாட மாட்டாங்களாம் ...
மாமா என்னை விழிகள் விரிய இரக்கத்துடன் பார்த்தார்கள் .
''எங்கே கூப்பிடு உன் அம்மாவை ...''
நான் அழைத்துவர அம்மா பவ்யமாக வந்து நின்றார் ...''என்ன அண்ணே ...
''புள்ள .....( அம்மாவை அப்படித்தான் அழைப்பார் )..
''இஸ்லாத்தில் துக்கம் அனுஷ்டிக்கறதெல்லாம் மூணு நாளைக்குத்தான் ...அப்புறம் எப்பவும் போலத்தான் இருக்கணும் ...யார் சொன்னது பெருநாள் இல்லைன்னு ..பிறப்பும் ,இறப்பும் எல்லோருக்கும் உண்டு ...கவலையை மறந்து சந்தோஷமா பெருநாள் கொண்டாடணும் எப்பவும் போல ...
பாட்டி ,அண்ணன் ,அக்கா ,மாமிகள் எல்லோருக்கும் இதேபோலத்தான் அட்வைஸ் பண்ணினார்கள் ...கண்ணீருடன் எல்லோருமே தலையசைத்து மாமா சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள் ...
அந்த வருடம் மட்டும் மாமாவிடமிருந்தும், இன்னொரு செட் புது துணிகள் கிடைத்தன எனக்கு மட்டும் ...
அடுத்த வருடம் அவரும் இல்லை ...
அதன்பின் அக்காவின் கணவரிடமிருந்தும் அதே வார்த்தைகளுடன் தந்தை ஸ்தானத்தில் பல வருடங்கள் அந்த பராமரிப்பு தொடர்ந்தது ...அவர்களும் இல்லை ...
ஆனாலும் அந்தப் பதினான்கு வயதில் தந்தையை இழந்தபின் பெருநாட்களில் இன்றுவரை புதுத்துணிகளுக்கு நான் ஆசைப்பட்டதேயில்லை ...நான் விரும்பாவிட்டாலும் இறைவன் உதவியால் எல்லாமே நிறைவாக கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது ....அல்ஹம்துலில்லாஹ் ...
இன்னொரு தந்தையாக தாய்மை உணர்வும் நிறைந்த மகனைப் பார்க்கிறேன் .அவரைத்தந்த இறைவனுக்கும் ஸஜ்தா செய்கிறேன் ......அவருக்கே என் தந்தையர் தின வாழ்த்துக்கள் .
J Banu Haroon
J Banu Haroon

No comments: