Tuesday, June 13, 2017

இது 2017


எல்லைக் கோடுகளால்
உடைந்து உடைந்து
உலகம்
சாக்கடையில் விழுந்த
தின்பண்டமாகக் கிடக்கிறது

அன்றெலாம்
மாவீரனென்று அழைக்கப்பட்டவனை
இன்றெலாம்
நான் மனதாரப் புகழ்கிறேன்

அவன்
சிறுசிறு எல்லைக் கோடுகளைச்
சிலந்திக் கூடுகளாய்ச் சிதைத்தான்
இருண்ட வாசல்களை உடைத்தெறிந்தான்
உலகம் ஒற்றைக் கூடுதான் என்று
வீரமுழக்கம் செய்தான்

இந்நாள்
வல்லரசுத் தலைகளோ
சீழ்பிடித்தவை

உலகப் போர் உலகப் போர் என்று
ஒவ்வொரு போரிலும்
பூமியெனும் ஒற்றைப் பந்தைக்
கிழித்துக் கிழித்துக்
கழுத்தில் தொங்கவிட்டுக்
கூத்தாடுகின்றன

சுயநலம் பெருகிப் பெருகி
சொந்தமண் சொந்தமக்கள்
சொந்த இனம் சொந்த நிறம் என்று
நெஞ்சம் சுருங்கச் சுருங்க
நரகப் பாடல்கள் பாடுகின்றன

எந்த மண்ணைக் கொண்டுவந்து
இந்த மண்ணில் இட்டான்
மனிதன்?

இந்த மண் வாய்விழும்போதும்
விழுங்கப் போவது
மண்ணா மனிதனா?

இந்தப் பிரபஞ்சத்தில்
பால்வீதியே ஒரு புழுதிச் சுழல்
அந்தப் புழுதிச் சுழலில்
உற்று உற்றுப் பார்த்தாலும்
இந்த பூமி
தெரியப் போவதே இல்லை

அத்தனைத் துக்கடாத் தூசு
இந்தப் பூமி

அந்தத் தூசுக்குள்
இத்தனைப் பெரும் நாசங்களா?

இந்த உலகம்
எல்லா இனங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா மதங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா நிறங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா உயிர்களுக்குமானது

இந்த உலகம்
ஒரு புழுவுக்கும்
சிறு பழுதுமில்லாதது

- அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/

No comments: