Tuesday, June 27, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1

பள்ளியில் படிக்கும் காலத்தில் வாத்தியார் எங்களை (முஸ்லிம் மாணவர்களை) பார்த்து கூறுவார்..உங்களுக்கு என்ன எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட வேண்டியது..ஜாலியா இருக்க வேண்டியது..! இதெல்லாம்
என்ன கணக்கு என்று நக்கலாகவும்,குத்தலாகவும் பேசுவார்..
ஆனால் அன்று அவர் கேள்விக்கு பதில் கூற திராணி இல்லை என்று சொல்வதை விட அதற்குரிய அறிவை பெற்றிருக்கவில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும்....

எவ்வளவு அபத்தமாக சொல்லியிருக்கிறார்.அப்படி ஜாலியாக தெரிய கூடிய விஷயமா என்ன..!? என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது தான் தெரிகிறது..இதில் எவ்வளவு விஷயங்கள் உட்புதைத்து கிடக்கிறது ..படிக்கும் போது உங்களுக்கே புரியும்..
நீண்ட காலமாகவே முஸ்லிம்களின் மீது இந்த குற்றச்சாட்டுகளை பலரும் சுமத்தி வருகிறார்கள்..
அடிக்கடி இதைப் பற்றி யோசிப்பதுண்டு..சமீப
காலத்து பதிவுகளின் தாக்கத்தில் கூட இது பிரதிபலித்தது..
இதற்கு பதில் சொல்ல பல புத்தங்களிலும்,பல அறிஞர்களிடமும் அறியப் பெற்ற விஷயங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துக் கொள்கிறேன்...
இவ்வுலகத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை பொதுவான அதிகமாகவே இருக்கிறது...
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ரீதியில் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான பெண்களுக்கு துணை அமையாமல் போய்விடுகிறது....இது புள்ளி விபர கணக்கு...
இந்து மதத்திலும் சரி,கிருஸ்தவ மதத்திலும் சரி ஒரு திருமணம் தான் செய்ய வேண்டும் என்று சொல்லப் படவில்லை..
1954 ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் தான் ஆண்கள் பல திருமணம் செய்வது தடுக்கப் பட்டுள்ளது..இந்து வேதங்களில் எந்த குறிப்பும் இல்லை..
இன்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான் இந்து ஆண் ஒன்றுக்கு மேல் மணமுடிக்க தடை விதித்துள்ளது..
அதே போன்று கிருஸ்தவர்களின் தேவாலயங்கள் தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆண்கள் பல திருமணங்கள் செய்வதை தடை செய்தது..பைபிளில் எந்த குறிப்பும் இல்லை..
மேலும் நமது நாட்டில் முஸ்லிம்களை குறை சொல்பவர்கள் திருமணம் செய்யாமலேயே ஒன்றுக்கு
மேற்பட்ட பெண்களை நிரந்தரமாகவோ,தற்காலிகமாகவோ வைத்துக் கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது...
இதெல்லாம் யாருக்கும் குற்றமாக தெரியவில்லை..
அப்படி ரகசியமாக வைத்துக் கொள்ளாதே ..அவளையும் திருமணம் செய்து சொத்திலிருந்து எல்லா தேவைகளையும் முதல் மனைவிக்குச் செய்ததைப் போல் அவளுக்கும் செய் என்றுச் சொன்னால் பெண்களை அடிமைப் படுத்துவதாக ஆகுமா அல்லது அவர்களை வாழ வைப்பது போலாகுமா...?
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு பெண்ணை வைத்திருந்தால் அவளுக்கு அந்த நபரிடமிருந்து என்ன கிடைக்கும்..எந்த உரிமையும் கிடைக்காது..பிள்ளை பெற்றால் கூட அப்பா பெயர் தெரியாமல் ரகசியமாகத் தான் வளர்க்க வேண்டும்..இப்படி ஒரு வாழ்க்கைக்கு பெண்கள் ஆசைபடுவார்களா..?
இது கள்ளத்தனம் செய்பவர்களுக்கு இறைவன் வைத்த ஆப்பு என்று தான் சொல்ல வேண்டும்..அதேநேரம் பெண்களுக்கு தானே பாதுகாப்பு...
தேசிய மகளிர் கமிஷன் நடத்திய ஆய்வில் இன்னொரு பெண்ணை பேருக்கு வைத்து கொள்ளக் கூடாது அவர்களையும் இஸ்லாமியர்கள் போல் இரண்டாவதாக திருமணம் செய்து அவர்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளது..
ஆப்பிரிக்காவை பொறுத்த வரை கிருஸ்தவர்கள் முதலில் நான்கு, ஐந்து பிள்ளை பெற்ற பிறகு அந்த பிள்ளைகளை எல்லாம் காரில் தூக்கி வைத்து ஊர்வலமாக சென்று திருமணம் செய்யும் முறை தினந்தோறும் பார்க்கக் கிடைக்கிறது...இங்கு திருமணம் என்பது சும்மா தான்..இது இந்த நாட்டின் கலாச்சாரம்..
இப்படி பிள்ளை பெற்ற பிறகு அவளை பிடிக்கவில்லை என்றால் கல்யாணம் செய்யாமலேயே டைவர்ஸும் செய்து விடுகிறார்கள்..
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..நம்ம வரலாற்றுக்கு வருவோம்..
அன்றைய அரபுலகம் அறியாமையில் மூழ்கி கிடந்தது..
விபசாரம்,குடி எல்லாம் மலிந்து கிடந்த நேரம் அது.திருமணம் செய்யாமலேயே பெண்கள் பலரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையும் இருந்தது...
ஒருவர் திருமணம் செய்யாமலேயே எத்தனை பெண்களை வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் .
அந்த நேரத்தில் தான் நபிக்கு இறைபுறத்திலிருந்து வந்த இறைவசனத்தில் நான்கு திருமணம் செய்யலாம் என்ற வரைமுறையை இறைவன் ஏற்படுத்தி வைத்தான்.
இப்படிப் பட்ட ஒரு கட்டுப்பாடு எப்படி தவறாகும்..ஒரு வரையறையை சட்டத்தை உரிமையை பெண்களுக்காக வடிவமைத்த பெருமை இஸ்லாத்திற்கே உரிமையானது..
மேலும் அவன் படைத்த மனிதனை பற்றி இறைவனுக்கு தெரியாதா என்ன..?
அதனாலேயே கீழ்கண்ட வசனமும் வந்தது..
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;.
ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான் (4:28)
இப்படி பலஹீனமாக படைக்கப் பட்டுள்ள மனிதன் தப்புகளை செய்து விடுவான்..என்று நினைத்து தான் ரகசியமாகச் இன்னொரு பெண்ணை வைத்துக் கொள்ளாதே..அது உனக்கு ஹராம் ஆகி விடும்..முறைப்படி திருமணம் செய்து ஹலாலாக வைத்துக் கொள் என இறைவன் கூறுகிறான்..
இப்படி சொன்ன இறைவன் மனிதன் திருமணம் செய்வதில் மற்ற மனைவியவருக்கும் சரிபாதி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு அதை நடைமுறை படுத்த இயலாவிட்டால் ஒரு திருமணத்தோடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது..
என்பதையும் சொல்கிறான்..
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.( 4:3 )
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான் (4:129)
இதிலிருந்து பலதாரமணம் கட்டாய கடமையல்ல என்பதும் தெளிவாகிறது..
ஆக பலதாரமணத்திற்கு
அனுமதி இருந்தாலும்
அதில் பல கட்டுபாடுகளும்,
விதிமுறைகளும் இருப்பதால் பெரும்பாலனவர்கள் ஒரு தாரத்தோடு வாழ்வதை தான் விரும்புகிறார்கள்..என்பதை புரிந்துக் கொண்டாலே போதுமானது....
#நபிகள் நாயகம் வாழ்வில் பலதாரமணங்கள் நிகழ்ந்ததும் அது எதனால் என்பதையும் இறை நாடினால் அடுத்த பதிவில் சொல்லலாம்.
.
Saif Saif

No comments: