Tuesday, June 20, 2017

புனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அண்ணனோடு எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். என்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர். அவரது ”பால்வீதி” என்ற புதுக்கவிதை நூல் எங்களையெல்லாம் புரட்டிப் போட்ட நூலாகும். நாங்கள் அப்போது முதுகலை மாணவர்கள். நான், இயக்குனர் அகத்தியன் போன்றவர்கள். புதுக்கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த காலமது. பால்வீதி ஒரு புதிய உலகத்தை எங்களுக்குக் காட்டியது. அடடா, இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்த காலம் அது.

அவருடைய ”ஆலாபனை” தொகுப்புக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தாலும் அது உண்மையில் ”பால்வீதி” தொகுப்புக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.  ”பால்வீதி”தான் அவருடைய மாஸ்டர் பீஸ். ஆனால் எல்லா தேசிய விருதுகளின் பின்னாலும் அரசியல் உள்ளது நமக்குத் தெரிந்ததுதான். பரவாயில்லை. கவிக்கோவுக்கு விருது கொடுக்கப்பட வேண்டும். கொடுத்தாகிவிட்டது. அது எந்தத் தொகுதியாக இருந்தால் என்ன?



எங்கள் பழக்கம்

அதுவரை நான் அவரை நேரில் பார்த்ததில்லை. அவர் வேலை பார்க்கும் வாணியம்பாடி கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஆம்பூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக நானும் வேலை பார்க்கச் செல்வேன் என்று எனக்கு எப்படித் தெரியும்? இறைவனின் ஏற்பாட்டை மனிதன் எப்போது உடனே புரிந்துகொண்டிருக்கிறான்?

ஆசிரியர் சங்க போராட்டத்தின் விளைவாக அப்துல் ரகுமான் உட்பட பல பேராசிரியர்கள் சிறை சென்றார்கள். நான் மூன்றாண்டுகள் நிறைவடையாத பேரா’சிறிய’ராக இருந்ததால் எனக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனவே பல இரவுகளை கவிக்கோ அண்ணனோடு கழிக்கும் பாக்கியத்தை நான் இழந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் ”இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்” நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து என்னை கௌரவித்தார்.

அழகிய முரண்

ஒரு கவிஞராக நான் அவரை அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு ஒரு யுக்தி, ஒரு தொழில்நுட்பத்தை தொடர்ந்து அவர் தன் எழுத்தில், அது கவிதையானாலும் சரி, கட்டுரையானாலும் சரி, பயன்படுத்துகிறார் என்று புரிந்துகொண்டேன். அது ஆங்கிலத்தில் paradox என்று சொல்லப்படும் முரண்படு மெய்ம்மை. பலவித பூக்களை இணைக்கும் அடிச்சரடு போல அது அவர் எழுத்தில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். அவரது தனித்துவமும் அழகும் அதுதான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது தாயிஃப் நரக மக்கள் கற்களை  எறிந்து காயப்படுத்தியதைப் பற்றி அவர் இப்படி எழுதினார்:

கல்லின்மீது பூக்களை எறிகிறார்கள்

பூவின் மீது கற்களை எறிகிறார்கள்!

இன்னொரு கவிதை:

புத்தகங்களே, சமர்த்தாக இருங்கள்

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!

இந்த அழகு தமிழில் வேறெந்த புதுக்கவிஞரிடத்திலும் நான் காணாதது.

பிரிவினை வாத ஜமா’அத்துகள் பற்றி

ஒருமுறை பேசும்போது பிரிவினை வாத ஜமா’அத்துகள் பற்றி கவிக்கோ இப்படிச் சொன்னார்: “ இது ஹராம்கிறான், அது ஹராம்கிறான், இப்புடியே போனா சந்தோஷமா இருக்கிறதுகூட ஹராம்னு சொல்லிடுவான்போல” என்றார்!

தவ்ஹீது ஜமா’அத் போன்ற ஜமா’அத்துகளின் மீதான் மிகச்சிறந்த விமர்சனமாக நான் அதைக்கருதுகிறேன்.

மறைவு

கவிக்கோ மறைந்துவிட்டதாக சென்ற இரண்டாம் தேதி என் அலைப்பேசிக்கொரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியது யார் என்று தெரியவில்லை.  எண் மட்டுமிருந்தது. நான் எனக்குத் தெரிந்த கவிஞர் ஜலாலிடம் அலைபேசியில் கேட்டபோது, ஆமாம் அண்ணே, நான் கவிக்கோ வீட்டில்தான் இப்போது இருக்கிறேன் என்று சொன்னார். அவரிடமே முகவரி கேட்டுக்கொண்டேன். அப்போது அரும்பாக்கத்தில் இருந்த நான் என் நண்பர் காசிம் அவர்களின் காரில் நானும் அவரும் பனையூர் சென்றோம். இடையில் யுனிவர்சல் ஷாஜஹான் அவர்களிடமும் அலைபேசி கேட்டுக்கொண்டேன்.

தெரு முனையில் ஒரு ஃப்லெக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். கவிக்கோ வீட்டுக்குப் போகும் வழி காட்டுவதற்காக. சில கார்கள் நின்றிருந்தன. நான் உள்ளே சென்றபோது வழியில் இயக்குனர் சீமான், தயாரிப்பாளர் லிங்குசாமி போன்றோர் அமர்ந்திருந்தனர். உள்ளே போய் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த கவிதையின் உடலை சில கணங்கள் பார்த்தேன். இறைவன் அவரைப் பொருந்திக்கொண்டு மறுமையில் அவரை கௌரவிக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன்.

திரும்பியபோது என்னை யாரோ இவர்தான் நாகூர் ரூமி என்று நக்கீரன் கோபாலிடம் அறிமுகப்படுத்தினார்கள். அது அப்போது தேவையே இல்லை. எனினும் எல்லாவற்றையும் ‘அடக்கி’ வாசிக்க வேண்டிய சூழ்நிலை அது. கவிக்கோவின் கால் பக்கமாக பர்வீன் சுல்தான் நின்றுகொண்டிருந்தார். கலங்கிய கண்களுடன். அவரருகில் சென்று சில கணங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மூச்சுத்திணறல் வந்தது ரேடியேஷன் தெரபி கொடுக்கப்பட்டது பற்றியெல்லாம் அவர் என்னிடம் சொன்னார். நண்பர் / அண்ணன் சன் டிவி வீரபாண்டியன் வந்திருந்தார். அவரை வெளியில்  அழைத்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

கவிக்கோ 80 வயது வரை வாழ்ந்துவிட்டார். உலகளாவிய புகழடைந்துவிட்டார். தமிழறிந்த உலகில் நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்பத்திவிட்டார். புதுக்கவிதைக்கு சிறந்த பங்களிப்பு செய்துவிட்டார். பிடித்தமான உணவு வகைகள் அத்தனையையும் உண்டு பார்த்துவிட்டார்.

இனி அவர் உடலோடு இருக்கமாட்டார். அவ்வளவுதான். ”மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்று அவரே சொல்லியிருக்கிறார். ஒரு  நிரந்தர உலகுக்கு அவர் சென்றிருக்கிறார். இனி அவரது கவிமாலைகள் வானவர்கள் மத்தியில் நடக்கும். நாம் பொறாமைப் படலாம். வருத்தப்படத் தேவையில்லை. அவரது பறவையின் பாதை என்ற கவிதைத் தொகுப்பு பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.

ஒரு சூஃபியின் கவிதைகள்

ஒரு கவிஞானியோடு அவர் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற பெருமை நமக்கு உண்டு. புதுக்கவிதைக்கு மற்றவர்களால் கொடுக்கமுடியாத புதிய பரிமாணத்தை, ஒரு சூஃபித்துவ அந்தஸ்தைக் கொடுத்தவர் கவிக்கோ. எத்தனையோ விஷயங்களைப் பற்றி கவிக்கோ கவிதைகள் படைத்திருக்கிறார். ஆனால் இறைவனைப்பற்றிப் பேசும்போதுமட்டும் புதிதாய்ப் பிறந்த குழந்தை தாய்ப்பால் பருகுவதுபோன்ற இலகுவான தன்மையும் எளிமையும் எப்படி அவருக்கு வாய்க்கிறது என்ற புதிருக்கு ஒரேயொரு பதில்தான் உள்ளது. பசிக்கும்போதெல்லாம் இறைவனிடத்தில் பால்குடிக்கும் ஞானக்குழந்தையாக அவர் இருக்கிறார். அதனால்தான் மலைகளைக்கூட அவரால் மயிலிறகாக்க முடிகிறது. அதற்கு ஒரு சான்றுதான் பறவையின் பாதை என்ற கவிதைத்தொகுப்பு.

அவருடைய எத்தனயோ தொகுப்புகளில் அதைத் தேர்ந்தெடுக்க எனக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஆன்மிகத்தில் எனக்கிருக்கும் தேடல். நாகூர் ரூமி என்று பெயர் வைத்துக்கொண்டதுகூட அதனால்தான். இரண்டு, என் வலைத்தளத்தின் பெயர் ”பறவையின் தடங்கள்”!

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் சூஃபிக்கவிதைகள் என்று கவிக்கோ முன்னுரையில் கூறுகிறார். ஆனால் உண்மை என்னவெனில், இந்த தொகுப்பில் மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு தொகுப்பிலும் சூஃபித்துவத்தின் சாரம் கொட்டிக்கிடக்கிறது. எல்லோரும் மேலே போவதைப் பற்றிப்பேசினால், இவர் கீழே வருவதைப் பற்றிப் பேசுவார். எல்லோரும் ஒளியைப் புகழ்ந்தால், இவர் இருளைப் புகழ்வார்.

கதவு தட்டும் ஓசை கேட்டால் / யார் என்று கேட்காதே

ஒருவேளை அது / நீயாக இருக்கலாம்

என்று ஒரு சூஃபியால் மட்டுமே சொல்ல முடியும். ஆனால் இந்தக் கவிதை ’பித்த’னில் வருகிறது. தசவ்வுஃப் எனப்படும் சூஃபித்துவத்தில் இருப்பவர்கள், ஆன்மிகப்பாதையில் பயணிப்பவர்கள், அதில் ஆசைகொண்டவர்கள் அனைவருக்குமே பறவையின் பாதை நிச்சயம் வழிகாட்டும்.

இந்த கட்டுரை மூலமாக ஒருசில குறிப்புகளை மட்டுமே என்னால் கொடுக்க முடியும். நிலவைச் சுட்டும் விரல்போல.

இறைவனை நோக்கிய காதலானது ஒரு அசுரப்பசியாகிறது. சூரியனையும், நட்சத்திரங்களையும் மேயும் பசுவாகிறார் கவிஞர். கடைசியில், ”பசி அதிகரிக்க / மேய்ப்பனையே மேய்ந்துவிட்டேன்” என்கிறார் (மேய்ச்சல்). இது காயசண்டிகையின் பசி. ஆனால் உணவுக்கான பசியல்ல. உணவளிப்பவனையே கேட்கும் பசி! இது அருள்பசி, ஆன்மாவின் பசி. உண்மைக்கான பசி, மனிதகுல நன்மைக்கான பசி! இது வயிறு நிறைக்கும் பசியல்ல. வாழ்க்கையை நிறைக்கும் பசி. இம்மைப்பசியல்ல. மறுமைப்பசி.

நான் பாவத்தில் ஒளிந்தேன் / நீ மன்னிப்பாக வந்தாய்

என்கிறது ”ஒளிதல்” என்ற கவிதை. ”என் கருணை என் கோபத்தை மிகைக்கிறது” என்ற புனித நபிமொழியை (ஹதீஸ் குத்ஸி) நினைவுபடுத்துகின்றன இவ்வரிகள்.

முகத்திரையற்ற / உன் வதனத்தை

தரிசிக்கும் பரவசத்தைவிடவா

உன் சொர்க்கம் / இனிமையானது

என்று கேட்கிறது ஒரு கவிதை (முகத்திரையற்ற வதனம்). சூஃபிகள், இறைநேசர்களெல்லாம் ஏங்குவது இறைவனின் முகதரிசனத்துக்காகத்தான். அதைப்பற்றி இவ்வரிகள் பேசுகின்றன. சூஃபி பாஷையில் ’லிகா’ என்பதைப் பற்றி இக்கவிதை அழகாகச் சொல்கிறது. அந்த தரிசனம் கிடைக்காத சோகத்தைவிட நரகம் துயரமானதல்ல என்றும் கூறுகிறது. இறைதரிசனம் என்ற விஷயத்தோடு சொர்க்கம், நரகம் ஆகியவற்றை ஒப்பிட்டிருப்பது இரண்டு தனிப்பட்ட சூஃபிப்பரிமாணங்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் முயற்சியாகும். அம்முயற்சியில் இவ்வரிகள் வெற்றிபெறுகின்றன என்றே சொல்லவேண்டும்.

உடைந்த படிமங்களில் / இறைவன் நடந்து போகிறான்

’இல்லை’யில் வசிப்பதற்காக

என்கிறது ஒரு கவிதை (மீட்டப்படுவதற்கு முன்). இஸ்லாத்தின் மூலமந்திரமான ”லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் அர்த்தத்தை வைத்து இவ்வரிகள் பின்னப்பட்டிருக்கிறன. குறிப்பாக “இல்லையில் வசிப்பதற்காக” என்ற வரிகளில். ஏனெனில் ”லா இலாஹ” என்பதற்கு ’இறைவன் இல்லை’ என்றுதானே பொருள்! ’இறைவன் இல்லை என்ற படியிலிருந்து இறைவனைத் தவிர என்ற படியை நோக்கி’ என்ற அல்லாமா இக்பாலின் வரிகளை நினைவுபடுத்துகின்றது கவிக்கோவின் அற்புத படிமம்.

உனக்குப் பெயரும் இல்லை / முகவரியும் இல்லை

ஆனால் / உனக்கு எழுதும் கடிதம்

தவறாமல் / உன்னிடம் சேர்ந்துவிடும்

எழுதுவதுகூடத் / தேவையில்லை

எண்ணங்களையே / படிக்கக்கூடியவன் / நீ

என்கிறது இன்னொரு கவிதை (கடவுளுக்கு ஒரு கடிதம்). இறைவனை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி எழுதுவது சாத்தியம். பறவையின் பாதையில் உள்ள சூஃபிக்கவிதைகள அனுபவிக்கமட்டுமே முடியும். விளக்க முடியாது. அதேசமயம் புரியவில்லை என்று விலக்கவும் முடியாது.

தேடல், பொய்யான சுயமான அகந்தையை இழத்தல், வீட்டை விட்டு ஓடாமல் ஆசையற்று செயல்படும் உண்மையான துறவறம், இறைவனின் திருப்தியில் திருப்திகொள்வது, அவனைக் காதலியாக பாவிப்பது, தன்னை அவனில் இழப்பது, முராகபா, முஹாசபா, முகாஷஃபா, ஃபனா, லிகா போன்ற சூஃபித்துவ பயிற்சிகளையும் முயற்சிகளையும் பற்றியெல்லாம் ஓரளவு அறிந்தவர்களுக்கு இக்கவிதைகள் நிச்சயம் ஒரு பொக்கிஷத்தைத் திறந்துகாட்டும்.
நன்றி :பறவையின் தடங்கள்

No comments: