Friday, June 30, 2017

பிக் பாஸ்

.
1984 என்கிற நாவல் ஜார்ஜ் ஆர்வெல் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் எழுதியது. ஒரு தேசம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒரு கொடூர சர்வாதிகாரியின் கீழ் வாழ்கிறது. அவருக்கு Big Brother, ‘பெரியண்ணன்’ என்று பெயர். தேசத்தில் எல்லா இடங்களிலும் பெரியண்ணனின் மெகா சைஸ் கட் அவுட்டுகள் வைக்கப் பட்டு அவர் மக்களை கூர்ந்து நோக்கிக் கொண்டு இருப்பது போன்ற படங்கள் இருக்கும். அவற்றின் கீழே ‘Big Brother is watching you!’ என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருக்கும். ‘பெரியண்ணன் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்!’. எங்கு நோக்கினும் இந்த வாசகங்கள் இருக்கும். சொன்னபடியே ‘பெரியண்ணனின்’ ஆட்கள் மக்களை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு சிறிய புரட்சிப் பொறி, ஏன் புரட்சி சிந்தனை கூட வந்தால் நீங்கள் காலி. மொழிகளையே திருத்தி புரட்சி மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே கூட மொழியில் இல்லாதபடி பார்த்துக் கொண்டார் பெரியண்ணன்.

இந்த நாவல் 1949ல் வெளியான போது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உலகெங்கிலும் இந்த நாவல் பெரும் பாதிப்புகளை உருவாக்கியது. தமிழிலும் சுஜாதா எழுதிய ‘சொர்க்கத்தீவு’ நாவல் 1984ன் பாதிப்பில் எழுதப்பட்டதுதான். ‘பெரியண்ணன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்,’ எனும் வாசகம் பரவலாக ஹிட் ஆனது. கம்யூனிஸ்ட் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் உளவாளிகளைக் குறிக்க இந்த வாசகம் பயன்பட்டது. சமீபத்தில் பொதுமக்களை வேவு பார்க்க அமெரிக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகள் கூட இந்த வாசகத்தை வைத்து கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இந்த நாவலின் பாதிப்பில் உருவானதுதான் Big Brother எனும் அமெரிக்க டிவி நிகழ்ச்சி. ஒரு பெரிய வீட்டில் எல்லா இடங்களிலும் காமிராவை வைத்து அங்கே வசிப்பவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் ரியாலிடி ஷோவுக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். இங்கிலாந்திலும் இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது. பத்து வருடங்களுக்கு முன்பு ஷில்பா ஷெட்டி இங்கிலாந்தின் Big Brother நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருடன் ‘தங்கிய’ ஜேட் கூடி (Jade Goody) எனும் வெள்ளைப் பெண்மணி அவரை, அவரின் இந்தியப் பின்னணியை வைத்து, ‘ஷில்பா பாப்படம்’ (அப்பளம்) என்று கிண்டல் செய்ய அது அந்த தேசமெங்கும் இனவாதம் (racism) பற்றிய பெரும் விவாதங்களை கிளப்பியது. ஜேட் கூடி பின்னர் மன்னிப்பு கேட்டார். ஆங்கிலப் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஷில்பா வெற்றி பெற்றவராக அறிவிக்கப் பட்டார்.
அதே நிகழ்ச்சி இந்தியாவில் துவங்கப் பட்ட போது இந்தப் பெரியண்ணன் கான்செப்ட் யாருக்கும் புரியாது என்பதால் Big Brother என்பது மாறி Big Boss என்று ஆனது. (ஜேட் கூடி இந்திய நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார்.)
பிக் பாஸ் மாதிரி மொக்கை நிகழ்சிகள் தேவைதானா என்றும் நிறைய பதிவுகள் பார்த்தேன். இது ஒரு பொழுது போக்கு என்கிற அளவில் மட்டுமே இதனை நாம் அணுக வேண்டும் என்பது என் கருத்து. உங்களுக்கு விருப்பமிருந்தால், நேரமிருந்தால் பாருங்கள். இல்லையேல் பார்க்க வேண்டாம். (நான் பார்க்கவில்லை.) அதனை பொழுதுபோக்கு நிகழ்வு என்ற அளவில் விமர்சனம் செய்யலாம். அதை மீறி பிக் பாஸ் தமிழனை தரம் தாழ்த்தி விடும், தேசம் நாசமாகிப் போய்விடும் என்கிற கவலைகள் தேவையற்றவை.
சொல்லப் போனால் பிக் பாஸ் மாதிரி அதீத, அர்த்தமற்ற பொழுது போக்கு நிகழ்சிகள் தேசம் முன்னேறுவதையே காட்டுகின்றன. லட்சக்கணக்கான பேர் பெரிய கவலைகள், பிரச்சனைகள் இன்றி பிக் பாஸ் மாதிரி மூளையை கசக்க வேண்டியிராத நிகழ்ச்சியை ஆவலுடன் காணத் தயாராக இருக்கிறார்கள் என்பது மற்ற நிறைய வாழ்வுத் தேவைகள் அவர்களுக்கு உறுதி அளிக்கப் பட்டதையே காட்டுவதாக நான் பார்க்கிறேன். உயிர்ப் பாதுகாப்பு இல்லாத ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற தேசங்களில் அல்லது பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மாதிரி விஷயங்களுக்கு மக்களுக்கு நேரமோ, ஆவலோ இராது. நம் ஊரிலேயே கூட ஐம்பதுகளில் குடும்ப சுமைகள், வறுமை போன்ற கருத்தியலில்தான் படங்கள் வந்தன. எழுபதுகள், எண்பதுகளில் கம்யூனிசம், பொதுவுடைமை என்று போனோம். சந்திரசேகர் முதல் ரஜினி வரை சிகப்புக் கொடி பிடித்தனர். இன்றைக்கு நம் ஹீரோக்களுக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை. கம்யூனிசம் பற்றிய படம் இன்றைக்கு பெரிதாக நம்மை ஈர்க்காது. ‘அன்பே சிவம்’ தரத்தில் எடுத்தால் கூட இன்று தோல்விதான். காரணம் நம் சமூகம், அதன் தாக்கங்கள், அது தினசரி சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் மாறி விட்டன. எனவே என்னைப் பொருத்த வரை, பிக் பாஸ் மாதிரி ஒரு நிகழ்ச்சி வருவது பெரிய நாசத்தை எல்லாம் விளைவித்து விடாது.
கடைசியாக, இதில் கமல் நடிப்பது கொஞ்சம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவ்வளவு பெரிய நடிகர் இந்த மாதிரி சீப்பாக செய்யலாமா என்று பதிவுகள் பார்க்கிறேன். இதுவும் நடிப்புதான் என்று கமல் சொல்லி விட்டார். சினிமா என்றால் பெருமை, டிவி என்றால் கேவலம் என்பதெல்லாம் முடிந்து போய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அமிதாப் டிவியில் வந்ததுமே அந்த மாய பிம்பங்கள் உடைந்து போய் விட்டன. அப்புறம் ஷாருக், சல்மான், ஆமிர், அக்சய் எல்லாரும் டிவி நிகழ்ச்சியில் வந்து விட்டனர். தமிழில் சூரியா, தெலுங்கில் நாகார்ஜுனா என்று இங்கேயும் ஆரம்பித்தாகி விட்டது. வெள்ளித்திரை, சின்னத்திரை, கணினித் திரை போன்ற வித்தியாசங்கள் மறைந்து வெறும் திரை என்று ஆகிக் கொண்டு இருக்கிறது. அதனை Convergence of Medium என்று சொல்வார்கள். அது வெகு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தவிர, தமிழ் பொழுது போக்கு வெளியில் நிறைய விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் கமல் இந்த விஷயத்திலும் தான் முன்னோடி என்று காட்டி இருக்கிறார், அவ்வளவுதான். நாளை அவர் தன் அடுத்த படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிடவும் கூட செய்யக் கூடும்.
அதில் ஒரு பெரிய நடிகர் இடம் பெறுவதில் உங்களுக்கு பிரச்னை இருந்தால், அது உங்களிடம் இருக்கும் பிரச்சனைதான். ‘அமிதாப் டிவியில் நடிப்பதா?’ என்று முன்னர் அதிர்ந்தார்கள். கோன் பனேகாவில் சம்பாதித்ததை எல்லாம் கடனை அடைக்க கட்டி விட்டு இன்றைக்கு ஜம்மென்று இருக்கிறார். அப்படி அதிர்ந்தவர்கள் யாரும் ஒரு ரூபாயை எடுத்து அவர் கடனை அடைக்க கொடுத்திருக்கப் போவதில்லை. கமலுக்கு என்ன பணப் பிரச்னை என்று எனக்குத் தெரியாது. பணப்பிரச்சனையோ இல்லையோ, பணத்தேவை கண்டிப்பாக இருந்திருக்கும். அவருக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பை அவர் காசாக்கிக் கொள்கிறார். அவரை விட்டு விட்டு உங்களுக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பு எவ்வளவு என்று பாருங்கள். அதனை எப்படி அதிகரிப்பது, எப்படி காசாக்குவது என்று யோசியுங்கள்.

Sridhar Subramaniam

No comments: