Samsul Hameed Saleem Mohamed
நேற்றைய தினத்தில் "நான் கண்ட பெருநாட்கள்" என்று தலைப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு இன்று அந்த பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தினத்தில் ஒரு பெரும் பரிசு கிடைத்தது!ஆம்..! முகநூல் மெசேன்ஜர் வாய்ஸ் கால் மூலமாக ஒரு அன்புக்குரல் என்னை அழைத்து சலாம் கூறி பிறகு பெருநாள் வாழ்த்தும் கூறுகிறது! அதைக்கேட்ட மாத்திரத்தில் ஒரு இன்ப பேரதிர்ச்சியும் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பும் என்னை பற்றிப்பிடித்துக்கொண்டது காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் அப்படிப்பட்டவர் என்பதால்!
அவர் யாரென்று கேட்கிறீர்களா..? அவர்தான் எங்கள் நீடூர்-நெய்வாசலை சேர்ந்த வழக்கறிஞரும், நல்ல கருத்துமிக்க எழுத்தாளரும், கொண்ட தானத்தாலும், தனத்தாலும், குடும்ப பாரம்பரியத்தாலும் பெற்ற அகவையாலும் உயர்ந்து நிற்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய '@Mohamed Ali அவர்கள்!
உன்னுடைய பதிவுகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது! இதுபோன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுது! உன் எழுத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பாராட்டி! தன்னுடைய 'Nidur Seasons Blog' எனும் வலைதளத்தில் என்னுடைய அந்த "நான் கண்ட பெருநாட்கள்" எனும் பதிவை பதிவேற்றம் செய்து (இதற்கு முன்பும் என்னுடைய சில பதிவுகளை அங்கே பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) அதன் லிங்கை எனக்கு அனுப்பியதோடு! ஊருக்கு எப்போது வருகிறாய் வரும்போது என் வீட்டிற்கு வந்து என்னை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்கிற அன்புக்கட்டளையும் விடுத்தார் அவர்!
பரிசு என்பது பணமாகவோ பொருளாகவோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை! இதுபோன்று உள்ளன்பு
கொண்ட உயர்ந்த நெஞ்சங்களின் மனமார்ந்த பாராட்டுதல்களாகவும் அந்த பரிசு இருக்கலாம்!
படிக்கும் காலத்தில் இந்தியா டுடே தமிழ் பதிப்பிற்கு வாசகர் விமர்சனம் எழுதிவிட்டு அது வருமா என கண் பூத்து காத்திருந்த நாட்களை இன்றும் மறக்கவில்லை! அந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ ஒரு குப்பை தொட்டிக்கு போக! எதிர்பாராது கிடைத்த இந்த முகநூல் வழி என் எழுத்து இதுபோன்ற பல நல்ல உணர்வுபூர்வ உறவுகளையும் இன்னும் சொல்லப்போனால் நல்ல ரசிகர்களையும், ரசிகைகளையும் எனக்கு நிறையவே தந்திருக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்...! என் இறைவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்..! 💖
பலபேரும் சொல்வதுண்டு இங்கே எழுதி எதை கிழிக்க முடியும் என்று! என்னைப் பொறுத்தமட்டில் இங்கே எதையும் எழுதி கிழிக்க முடியாது ஆனால் அழகான எழுத்துக்களால் நிறையவே தைக்கலாம்!
முக'நூலை'க் கொண்டு நம் கருத்து மிக்க எழுத்துக்களை விரல் ஊசியில் செலுத்தி நிறைய மனிதர்களின் நெஞ்சகத்தை மிக எளிதில் தைப்பது இங்கே சுலபம்! ஆனால் அந்த விரல் வழி வீழும் கருத்துக்களும் எண்ணமும் மட்டுமே இங்கே பிரதானமாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் தைக்கும் நிலை மாறி கிழியும் நிலை ஏற்பட்டுவிடும்!
அதோடு மதிப்பிற்குரிய முஹம்மது அலி அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தேன் அது என் எழுத்துக்களின் நிறையை இப்போது பாராட்டினீர்கள்! அதுபோலவே ஏதாவது அதில் குறை கண்டாலும் அதையும் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் என்று! காரணம் மோதிரக் கைகளினால் விழும் கொட்டு நம் குறைகளை அதிகம் சரிபார்த்து மிக கவனமாக செயல்பட வைக்கும்!
அத்துடன் எனது சிறுவயது பெருநாள் சம்மந்தப்பட்ட ஒரு சிறிய பதிவை இங்கே பதிய முதற்காரணமான எனது தங்கை Thahira Banu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! 💖
No comments:
Post a Comment