அதனால் தான் அவர் உண்மைபடுத்தப்பட்டவர் என்பதை குறிக்கும் விதமாக அபுபக்கர் ஸித்தீக் என்று அழைக்கப் பட்டார்கள்...
நபிகள் தன் நட்புகளை பலரையும் விட அபுபக்கர் அவர்களை பெரிதும் விரும்பினார்கள்..நபியின் பலதரப்பட்ட பயணங்களில் உடனிருந்தவர்கள் அபுபக்கர் அவர்கள்..பகைவர்கள் சூழ்ந்துக் கொண்ட தெளர் குகையில் கூட உடனிருந்தவர் அபுபக்கர் அவர்கள் தான்..
நபியின் கடைசிகாலத்தில் முடியாமல் வீட்டிலிருந்த போது பள்ளியில் தொழுகை நடத்தியவரும் அவர்கள் தான்..
நபியின் மரணத்திற்கு பிறகு முதல் கலீபாவாக பதவி ஏற்று ஆட்சிச் செய்தவர்களும் அபுபக்கர்(ரலி) அவர்கள் தான்..
இப்படி பட்ட நண்பரை பற்றி,
"தன் நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர்
அபுபக்கர் ஆவார்..என் இறைவனே!உன்னை தவிர மற்றொருவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்கரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன்..என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது.பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் .அபூபக்கர் வீட்டு வாசலைத் தவிர..(ஸஹீஹுல் புகாரி)
அபூபக்கர் அவர்கள் மேல் அன்பும்,நேசமும்,பாசமும் இருந்தால் நபியவர்கள் இவ்விதம் கூறியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த நேரத்தில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) எனும் பெண்மணி நபியவர்கள் தமது நெருங்கிய தோழரின் உறவை மேலும் பலப்படுத்திக்கொள்ள ஆயிஷா(ரலி)
அவர்களை திருமணம் செய்துகொள்ளும்படி
நபி(ஸல்) அவர்களுக்கு ஆலோசனையும் கூறினார்கள்.
அந்த நேரத்தில் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடந்த காலம்.மேலும் பெண்குழந்தைகளை
உயிருடன் மண்ணில் புதைக்கும் காலம்..
"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து
விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்."
"எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"(16:58,59)
ஆயிஷா(ரலி) அவர்களை ஏற்கனவே ஜுபைர் இப்னு முத்இம் அவர்களுக்குப் பேசி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அபூபக்கர்
அவர்கள் இஸ்லாமைத் தழுவியிருந்ததின் காரணமாக ஜுபைரின் பெற்றோர்கள் அந்தத் திருமணப் பேச்சை முறித்துக்கொண்டார்கள்.
பிறகு நபியவர்களுக்கு அபுபக்கர்(ரலி) அவர்கள் ஆயிஷாவை 6 அல்லது 8 வயதில் திருமண நிச்சயம் மட்டும் செய்கிறார்கள்..
அவர்கள் பருவ வயதை அடைந்த பிறகு
மதீனா போன பிறகு
தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தார்கள்..
பொதுவாக நபி(ஸல்) அவர்கள் எது சொன்னாலும் செய்தாலும் ஒரு குறையாகவே சொல்லும் குறைஷிகள் இந்த திருமணத்தில் எந்த அவதூறையுமே நபிகள் மேல் சுமத்தவில்லை..
இதிலிருந்து அக்காலத்தில் இப்படி சிறு வயதுத் திருமணங்கள் நடப்பது சாதாரணம் என்றும், எவருமே இதை ஒரு தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது.
நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு
முதலாவதாக தன் மகள் ருகைய்யா அவர்களையும்,அவர் இறந்த பிறகு இன்னொரு மகள் உம்மு குல்சூமையும் திருமணம் செய்துக் கொடுத்ததும்,
அலி(ரலி)க்கு தன் மகள் பாத்திமாவை
மணமுடித்துக் கொடுத்ததும் அவர்களுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளத்தான்..
உமர் அவர்களும் தன் மகள் ஹஃப்ஸாவை நபிக்கு திருமணம் செய்துக் கொடுத்திருந்தார்கள்..
ஏனெனில் குரைஷிகள் மற்ற பந்தத்தை விட திருமண பந்தத்திற்கு பெரிதும் மதிப்பு கொடுத்தனர்..
அபூபக்கர்(ரலி),உஸ்மான்(ரலி),
உமர்(ரலி),அலி(ரலி)இந்த நான்கு் பேர்களுமே
நபியின் நெருங்கிய நபித்தோழர்கள்..உறவினர்கள்..
நால்வருமே பின்னாளில் கலீபாவாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
நபி(ஸல்) அவர்கள் ஓத தெரியாத உம்மி நபியாகத்
தான் இருந்தார்கள்..
இறைவன் அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல்(அலை) மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக இறை வசனங்களை கற்றுக் கொடுத்தான்..
ஜிப்ரீல் மும்முறை ஓதச் சொன்ன பிறகும் "நான் ஓத தெரிந்தவனில்லையே "
என்று தான் நபிகள் சொன்னார்கள்.பயந்தார்கள்..போர்த்துங்கள் என்று கதீஜா(ரலி) யிடம் சொன்னார்கள்..
நபிக்கும் எதுவும் தெரியாமல் எல்லாமே இறைவன் தான் ஜிப்ரீல் மூலமாக கற்றுக் கொடுத்தான்..
நபியின் 40 வயதிற்கு பிறகு நபித்துவதற்கு பிறகு 23 வருடங்களில் குர்ஆன் வசனங்களை இறைவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இறக்கி வைத்தான்..
இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு)இறக்கிவைத்தோம்.
(17:106)
என்று இறைவன் சொல்கிறான்..
எல்லா சட்டத்திட்டங்களையும் ஒரேடியாகச் சொல்லப்பட்டு விடவில்லை ...23 வருடங்களாக
படிப்படியாக வந்த சட்டதிட்டங்கள்..
அந்த காலத்தில் விபசாரம்,மது எல்லாமே பெருகிக் கிடந்தது..
இந்த மதுக்குடிப்பவர்களை இறைவன் "குடிக்காதே" என்று
ஒரேடியாக தடுத்து விட்டானா? என்றால் இல்லை..என்று தான் சொல்ல வேண்டும்..
"நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்" (4:43)
முதலில் இறங்கிய வசனம் தொழுகையில் போதையில் இருக்கக் கூடாது என்பது தான்..
அதன் பிறகு தான் அதன் பலனை விட தீமை அதிகம் என்பதை சொல்லி இறுதியாகத் தான் அதை முற்றிலும் தடை செய்தான்..
மேலும் தடை செய்வதற்கு முன்பு நீங்கள் செய்தது குறித்து குற்றமில்லை எனவும் இறைவன் திருமறையில் விளக்குகிறான்.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது(2:219)
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.(5:90)
"சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் உண்டு விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்(5:93)
மேற்கண்ட வசனம் மூலமாக அவர்கள் இறைவசனம் வருவதற்கு முன்பாக உண்டு விட்டது குறித்து அவர்கள் மீது குற்றமில்லை என்பது தெளிவாகிறது..
இது போக தந்தையின் மனைவிமார்களை திருமணம் செய்யும் வழக்கம் கூட அந்த காலகட்டத்தில் இருந்தது அதையும் இறைவன் தடுத்தான்..
மேலும்,உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்.முன்னால் நடந்தது நடந்து விட்டது..உண்மையில் இது ஒரு மானக்கேடான வெறுக்கத்தக்க செயலாகும்..கீழ்த்தரமான நடத்தையாகும்..(4:22)
இரு சகோதரிகளை ஒன்று போல் மணந்து கொள்ளும் பழக்கத்தையும் இறைவன் தடை செய்தான்..
இரு சகோதரிகளை
நீங்கள் ஒரு சேர மனைவியராக்குவதும்(தடை செய்யப்பட்டுள்ளன)..ஆனால் முன்னால் நடந்தது நடந்து விட்டது..திண்ணமாக
அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும்,
கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்..(4:23)
இவ் வசனங்கள் வாயிலாக நாம் அறிய பெறுவது என்னவெனில்,
இந்த சம்பவங்களை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,
சட்டம் வருவதற்கு முன்னால் செய்த செய்கைகளை இறைவன் மன்னித்து விடுவான் என்பதும் இறை சட்டம் வந்த பிறகு செய்வது தான் குற்றம்
என்பதையும் தெளிவாக படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்..
இப்போது மேற் சொன்ன திருமண விஷயத்திற்கு வருவோம்..
ஆரம்பத்தில் பெண் குழந்தைகளை கொல்லக் கூடாது என கண்டித்து இறைவசனம் இறக்கிய இறைவன் பெண்களை திருமணம் செய்ய அவர்களிடம் சம்மதம் கேட்க வேண்டும் என்றும் அவர்களிடம் ஒப்பந்தம் போட வேண்டும் என்றும் இறை வசனங்களை இறக்கினான்..
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது
(4:19)
அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்(4:21)
மேற்கண்ட இறைவசனங்கள் மூலம் மணப்பெண்ணின் சம்மதம் வேண்டும்..என்றும் உறுதியான உடன்படிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வதிலிருந்து குழந்தைகளிடம் எந்த ஒப்பந்தமும் போட முடியாது என்பதும்,திருமணம் பற்றி அவர்களுக்கு அறிய படுகின்ற வயதில்லை என்பதாலும் குழந்தை திருமணத்தை இறைவன் தடுத்து விட்டான் என்பதை தெள்ள தெளிவாக அறிந்து கொள்ளலாம்..
இந்த வசனங்கள் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)யை திருமணம் செய்ததும்,நபியோடு சேர்த்து வாழ்ந்த வாழ்க்கையில் எந்த குறைகளும் சொல்ல முடியாத,சொல்லாத - நபியை அதிகம் நேசித்தவர்களாக ஆயிஷா(ரலி) இருந்ததும் வரலாற்றில் உயர்ந்த இடத்தை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு பெற்று தந்தது என்றால் அது மிகையல்ல..
நபி(ஸல்) அமைந்த பல மனைவிமார்களில் ஆயிஷா(ரலி) அவர்கள் தான் மார்க்க அறிவை அதிகமாகப் பெற்றிருந்தார்கள்..
சிறந்த நினைவாற்றல்,
எழுத்தாற்றல் மிக்கவர்களாவும் இருந்தார்கள் அதனால் தான் அவர்களால் அதிகமான 2210 ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது..
நபிகளின் காலத்திற்கு பிறகு
48 வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்..
பெரும் நபித்தோழர்கள்
உட்பட தங்களுக்கு எழும் சந்தேகங்களை அவர்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார்கள்
மிக முக்கியமான விஷயம் அவர்களின் வாயிலாக எழுத்து மூலமாக ஹதீஸ்கள் மூன்று நபர்களை அடைந்துள்ளது. அதில் ஒருவர் அவர்களின் அக்காள் மகன் உர்வா நபிதோழர்களுக்குப்பின் வந்தவர்களில் முக்கியமான இஸ்லாமிய வல்லுனர் என இஸ்லாமிய வல்லுனர்களால் கூறப்படுகிறது. அவர்கள் இல்லாமல் இருந்தால் இல்முல் ஹதீஸில் பாதி அழிந்திருக்கும்.
உமர் அவர்கள் கூட தன் மகள் ஹஃப்ஸா ரலி அவர்களிடம் நீங்கள் ஆயிஷா விடம் போட்டி போடாதீர்கள்..உங்களை விட எல்லா விஷயங்களிலும் திறமைசாலி ஆயிஷா என்று கூறியிருக்கிறார்கள்..
நான் முந்தைய பதிவில் சொன்னது போல நபியின் வாழ்வியல் வழிமுறைகள் ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைபட்டு விடக் கூடாது உலகம் முழுமைக்கும் பரவ வேண்டும்,பரப்ப வேண்டும் என்ற இறை நாட்டம் கூட இத்திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்..
இதை என் சொந்த கருத்தாகச் சொல்லவில்லை..
பின்வரும் ஹதீஸ் அதை தெளிவுபடுத்துகிறது..
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:"நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், "இது (நீ எனக்கு மனைவியாவது)இறைவன் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
(புகாரீ 3895)
இதன் படி, எதிர்காலத்தில் இது நடக்கும் என்பதை தான் நபியவர்களுக்கு கனவில் காட்டபட்டது.. மேலும் இது கட்டளை இல்லை..
இது போன்று பல கனவுகளை, அவைகள் நடப்பதற்கு முன்னதாக கண்டுள்ளார்கள்.. அவற்றில் ஒன்றாகவே இதை நாம் பார்க்கிறோம்..
அதன் பிறகு இறைவசனங்கள் வந்த பிறகு நபி(ஸல்) அவர்களும் கன்னி பெண்களாயினும் விதவையாயினும் மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடித்தால் அத்திருமணம் செல்லாது.அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார்கள்(புகாரி.5136,
6971,6964,5137)
ஆனால் இன்றைய காலகட்டத்தில் என் வாப்பாக்கு உங்க பிள்ளையை மணமுடிக்க சம்மதிப்பீர்களா..?!
குழந்தை திருமணம் செய்யலாமா என்ற அபத்தமாக கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..
இனிமேலாவது இது போன்ற கேள்விகளை தவிர்ப்பார்கள் என நம்புவோம்..
நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் முடிக்கும் முன்னால் "பெண்களிடம் உறுதியான ஒப்பந்தம் செய்ய வேண்டும்" என்ற இறைவசனம் வரவில்லை..அப்படி இறைவன் சொன்ன பிறகு, தடுத்த பிறகு நபி அவர்கள் மறுபடி அதுபோல் திருமணம் எதுவும் செய்யவில்லை...செய்த திருமணங்கள் விதவை திருமணங்கள் தான்..
மேலும் முஸ்லீம்களும் செய்ய
கூடாது என்று தடுத்து மணப்பெண்ணின் சம்மதம் வேண்டும் என்றும் சொல்லி விட்டார்கள்..
இந்த விஷயங்களை நன்கு புரிந்து,தெரிந்து கொண்டாலே தேவையற்ற கேள்விகள் நம்மை விட்டும் தவிர்ந்து விடும்..
ஆக 1400 வருடங்களுக்கு முன்பே குழந்தை திருமணத்தை இறைவன் தடுத்து விட்டான்.என்பதை மிகத் தெளிவாக விளங்கி கொள்ளலாம்..
இந்தியாவை பொறுத்த
வரை ஆங்கில
அரசால் 1929ம் ஆண்டு,
“குழந்தைத் திருமண
தடுப்புச் சட்டம்”
கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது...
1978ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது..
ஆனாலும் இந்த நவீன காலத்திலும் இஸ்லாமிய சட்டம் சொன்னால் என்ன..இந்திய சட்டம் வந்தால் எங்களுக்கு என்ன என்று சின்ன வயசிலேயே இவளுக்கு இவன் என்று நிச்சயம் செய்து சொந்தம் விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக பேசி வைக்கும் வழக்கமும் இன்றும் நடைமுறையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
#இறை நாடினால் தொடரலாம்
No comments:
Post a Comment