Saturday, June 10, 2017

அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை

Shahjahan R


அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை
(தில்லிகை – 10-6-2017 சனிக்கிழமை)
இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமியர் பலரிடையே – எங்கள் பகுதியில் ஒரு வழக்கம் உண்டு. இறந்தவரை நல்லடக்கம் செய்த பிறகு, மூன்றாம் நாள் மற்றும் 10-20-40ஆம் நாள், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று பாத்திஹா ஓதிவிட்டு நறுமணத் தைலங்களையும் சந்தனத்தையும் பூக்களையும் தூவிவிட்டு வருவதுண்டு. இப்போதெல்லாம் இந்த வழக்குகள் அருகி வருகின்றன என்பது வேறு விஷயம். அப்படிச் செல்லும்போது, கபரஸ்தானில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை ஒட்டியிருக்கும் இதர கல்லறைகளுக்கும் பூக்களைத் தூவுவார்கள். அதுபோல அப்துல் ரகுமான் பற்றிப் பேசுவதற்கு முன் அவருடைய சமகாலக் கவிஞர்கள் சிலரின் கல்லறையிலும் சில சொற் பூக்களைத் தூவ விரும்புகிறேன். ஏனென்றால், அவர்களும் அப்துல் ரகுமானுடன் பயணித்தவர்கள், அப்துல் ரகுமான் போலவே தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

அண்மையில் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட கவிஞர்கள், படைப்பாளிகள் எண்ணிக்கை அதிகம். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் புனைவிலக்கிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன், க.சீ. சிவகுமார், மா. அரங்கநாதன், மூத்த தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன், அறிவியல் தமிழில் சாதித்த மணவை முஸ்தபா, கவிஞர்கள் ஞானக்கூத்தன், இன்குலாப், அப்துல் ரகுமான், நா. காமராசன். இவர்களில் இன்குலாப், அப்துல் ரகுமான், நா. காமராசன் மூவரும் கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள். மூவரும் இந்தி எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். மூவரும் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள். மூவரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். மூவரும் கவிஞர்கள், அதிலும் புதுக்கவிதையின் முன்னோடிகள், மூவரும் நண்பர்கள். ”அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை.” என்றவர் மீரா.
இன்குலாப் ஆரம்பகாலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி திமுக ஆதரவாளராக இருந்து, பின்னர் முழுக்கவும் பொதுவுடைமையின் பக்கம் போனார். ஏராளமான பத்திரிகளைகளில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அடக்கு முறைகளுக்கு எதிராகவும், குரலற்றவர்களுக்காகவும், மார்க்சியத்துக்கு ஆதரவாகவும் புரட்சிக் குரல் எழுப்பினார். இவருடைய கவிதைகள் நேரடியாக அரசியலைப் பேசுபவை.
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில் கிடக்கா- உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
என்ற பாடல் ஒலிக்காத போராட்ட மேடைகளே இருந்ததில்லை என்கிற அளவுக்குப் பிரபலமான பாடலை எழுதியவர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது. கே.ஏ. குணசேகரன் குரலில் பாடல் இன்னும் வலுப்பெற்றது. (இவரும் 2016 ஜனவரியில் மறைந்து விட்டார்.) கவிதைகள் மட்டுமல்ல, நாடகங்களும் சிறுகதைகளும்கூட எழுதியிருக்கிறார் இன்குலாப். சென்னையில் ராயப்பேட்டையில் வசித்த காலத்தில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாடிய நினைவுகள் எழுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி இன்குலாப் மறைந்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் இன்குலாபுடன் சக மாணவராக இருந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றவர் நா. காமராசன்.
காற்றுக்கும் ஆசை வந்து
உன் ஆடை தொட்டு விளையாடும்
வாழ்க்கைக் கவலைகளில்
நான் வாங்கி விட்ட பெருமுச்சு
கடற்கரைக்கு போய் இருந்தால்
கப்பல்களும் கவிழ்ந்திருக்கும்
என்று வாழ்க்கையையும் காதலையும்,
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்
என்று எழுபதுகளிலேயே திருநங்கைகளையும் கவிதைகளில் வடித்தவர் நா. காமராசன். மரபுக் கவிதைகளிலிருந்து புதுக் கவிதைக்கு மாறிய அவருடைய யாத்திரைக்காரன் என்ற கவிதையில் சந்தம் விளையாடும் சில வரிகள் —
ஏடெடுத்து கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்துப் படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
இப்படி எழுதியவர்தான் கறுப்பு மலர்கள் என்ற நூலின் வாயிலாக எம்ஜிஆரின் கண்ணில்பட்டு, அவருடைய ஆதரவுடன் திரைப்படங்களின் பக்கம் போனார். 600க்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை எழுதியிருக்கிறார். ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரித்த எல்லாத் திரைப்படங்களுக்கும் ஆஸ்தான பாடலாசிரியர் போல இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கவிஞர் என்ற பெயர் மறைந்து திரைப்படப் பாடலாசிரியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு விட்டார். மே மாதம் 24ஆம் தேதி மறைந்தார் நா. காமராசன். “இன்று எழுதிக்கொண்டிருக்கிற இளம் கவிஞர்கள் பலரும் அரை வேக்காடுகள். இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை நெடுங்கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத அரிச்சுவடிக் கவிஞர்கள். இவர்கள் எழுதுகிற கவிதைகளால் அச்சகம் நடத்துகிறவர்களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை நேசித்து வாசிக்கத் துடிப்பவனுக்கோ லாபமல்ல. அப்துல்ரகுமான், இன்குலாப் இரண்டுபேரையும்தான் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்வேன்.” என்று தயங்காமல் உடைத்துப் பேசியவர் நா. காமராசன். (இனிய உதயம் நேர்காணல். நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் பத்திரிகையில் அப்துல் ரகுமான் சில காலம் ஆலோசகராக இருந்தார்.)
“இந்த மாத தில்லிகை கூட்டத்தில் அப்துல் ரகுமான் குறித்துப் பேசலாம் என்று தில்லிகை நண்பர்கள் கேட்டார்கள், நீங்கள் பேசுங்கள்” என்று தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் பென்னேஸ்வரன் சொன்னபோது, கடந்தகால நினைவுகள் வந்து மோதிச்சென்றன. அப்போதெல்லாம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆஸ்தான வரவேற்பாளனாக நான் இருந்தேன். தமிழகத்திலிருந்து இலக்கிய உலகைச் சேர்ந்த யார் வந்தாலும் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்வது, வரவேற்புரை வழங்குவது, தொகுத்துப் பேசுவது போன்றவை என் பொறுப்புகள். அது இன்று இருப்பதுபோல இணையம் இல்லாத காலம், நூலகத்திலிருந்து நூல்களைக் கொண்டே தயாரிக்க வேண்டும், நூலகத்தில்கூட நூலகக் கல்வி பெற்ற நூலகரோ, கணிப்பொறியில் நூல்களின் பட்டியலோ ஏதும் இல்லாத காலம் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அப்படித்தான் ஒரு நாள், அப்துல் ரகுமானுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டதை ஒட்டி வழக்கம்போல தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கவிஞர் இராய செல்லப்பா தலைமை வகித்ததாக நினைவு. அந்த நிகழ்ச்சிக்கு அவசர அவசரமாக எழுதிய வரவேற்புக்கவிதை துண்டுச் சீட்டுகளாக என் அலமாரியில் ஏதோவொரு கோப்பில் இருந்த நினைவு வந்தது. 1999இல் எழுதிய அந்த அறிமுகக் கவிதையிலிருந்து சில வரிகள் —
ஆலாபனை செய்தவரை ஆராதிக்க வந்தது ஏன்? - என்
அப்பாவின் பெயர்தான் இவருக்கு என்பதாலா? – இல்லை.
என்போன்ற இளைஞர்கள் எண்ணற்ற பேருக்கு
புதிதாகக் கவிதைகளைப் புனைந்தவர் என்பதனால்.
(ஆலாபனை – அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு, சாகித்ய அகாதமி விருது பெற்றது. என் அப்பா பெயரும் அப்துல் ரகுமான்தான்.)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனையும்
இனிய தமிழகம்தான் இயல்பாகப் போற்றியதோ? இல்லை
துவக்கத்தில் இருந்த நிலை தொடர்கிறது
கவிதை இழிதாகத் தெரிகிறது. அதனால்தான்
விருதா எழுத்துக்கும்கூட விருதுகள் தரப்படும்
விரல்விட்டு எண்ணும் அளவும் கவிதை
விருதுகளைப் பெற்றதில்லை.
(சாகித்ய அகாதமியில் விருது பெற்ற கவிஞர்கள் / கவிதை நூல்கள் மிகக் குறைவு. 1968இல் வெள்ளைப் பறவை என்ற கவிதைத் தொகுப்புக்காக அ. சீனிவாச ராகவனுக்கு விருது வழங்கப்பட்டது. அதன் பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கவிதைக்கு விருது பெற்றவர் அப்துல் ரகுமான்.)
ஏனோ தெரியவில்லை
கவிதை என்றாலே தமிழனுக்கு ஓர் அச்சம்
தலைநகரத்தானுக்குத் தகும் இந்த அச்சம்
தமிழனுக்கு எதற்கிந்த அச்சம்? – ஒருவேளை
கதை என்னும் கதைகள் சாதிப்பதைவிட
கவிதை என்னும் கைவாள் கலகம் மூட்டுமெனும்
கவலைதானோ? எது எப்படியோ...
அண்மைக்காலத்தில் அகாதமியில் ஓர்
அகமாற்றம் தெரிகிறது, மகிழ்ச்சி.
வானம்பாடியின் வழியில் வந்தவர்க்கு
வாய்ப்புக் கிடைக்கிறது, மகிழ்ச்சி.
எது கவிதை எவன் கவிஞன் என்னுமொரு சண்டை
எப்போதும் இருக்கும், இருக்கட்டும்.
மரபு கவிதையா புதுசு கவிதையா
வசனம் கவிதையா உரை கவிதையா என
உரசிப் பார்க்கிறவர்களுக்கு ஒரு விஷயம் —
உள்ளத்தைத் தொடுவது கவிதை
உணர்வைக் கிளர்த்திடல் கவிதை
கள்ளத்தைச் சாடல் கவிதை
களிப்புற வைப்பது கவிதை
ஊருக்கு உழைப்பது கவிதை
ஊரறியச் சொல்வது கவிதை
இப்படியே சொல்லிப்போனால்
இந்த மாலையும் முடிந்து போகும்
மனிதன் தான் மனிதனென்று
மனதில் கொள்ளச் செய்யும்
எதுவும் கவிதையாகும்
என்பதை நினைவில் வைப்போம்.
அப்படித்தான் அப்துல் ரகுமான்
ஆலாபனையைச் சொன்னார்.
விருது என்பதை விமர்சிப்பவர்கள்கூட அது
விதை என்பதை மறுக்க மாட்டார்கள்.
கவிஞரே... கருணையின் தொண்டரே
உயர்விருது பெற்றுவிட்டு ஓய்ந்து விடாதீர்
இன்னும்பல கவிதைகளை எமக்குத் தாரும் - வாழ்வின்
இன்பத்தை ருசிப்பதற்கு வழியைக் காட்டும்.
இந்த அறிமுக வரவேற்பைத் தொடர்ந்து ஆலாபனை என்ற நூலில் இடம்பெற்ற கவிதைகளைப் பற்றி சிறு அறிமுகம் செய்திருக்கிறேன்.
இவர் கவிதை
ஆராதனை செய்யும் ஆண்டவனைக்கூட அடக்கி வைக்கும்
(ராங் நம்பர் என்னும் கவிதை கடவுளைக் கேள்வி கேட்கிறது, கடைசியில் கடவுள் நழுவி விடுகிறார்.)
இவர் கவிதை
வானத்தோடு போட்டியிட்டு வாகை சூடும்
(போட்டி என்னும் கவிதையில் மனிதன் புதுப்புது லட்சியங்களை எடுத்து வைக்க, வானம் தோற்கிறது.)
இவர் கவிதை
வயிற்றில் விழுந்துகிடப்பவன் இதயத்திற்கு ஏற வேண்டும்
வாழ்க்கையை ருசிக்க வேண்டுமென வாதம் செய்கிறது.
(ராஜாங்கம் என்னும் கவிதை)
வாழ்க்கை என்பது கடைசிப் பக்கம் கிழிந்துபோன
துப்பறியும் நாவல் என்று தத்துவம் பேசுகிறது.
(அதுதான் என்ற கவிதை)
பாதைகள் பலவற்றைக் கண்டாலும் இதயத்திற்குப் போகும்
பாதைதான் ஊர்போய்ச் சேர்க்கும் என்று பாதை காட்டுகிறது.
(பாதை என்னும் கவிதை)
இவர் கவிதையின்
வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்
புன்னகையும் ஒருவன் உள்ள விளக்கேற்றலாம்.
(கொடுக்கல் என்ற கவிதை. இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.)
மேலே சொன்ன கவிதைகள் எல்லாம் சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆலாபனை நூலிலிருந்து எடுத்தவை. வாய்ப்புக் கிடைத்தால் ஆலாபனையை வாசித்துப் பாருங்கள்.
‘கவிக்கோ’ என்று பெயர் பெற்ற அப்துல் ரகுமான் 1937 நவம்பர் 2 ஆம் நாள் மதுரையில் பிறந்தவர். தந்தை சையத் அகமத் – தாய் ஜைனப் பேகம். தந்தையும் பாட்டனாரும் உருதுக்கவிஞர்கள் என்று அவருடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். பள்ளிப்பருவத்திலேயே கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு மேற்கல்வியில் விருப்பம் இருக்கவில்லை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழைப் பாடமாகப் படிக்கலாம் என்று அறிந்ததால்தான் கல்லூரிக்குச் சென்றதாக அவரே சொல்லியிருக்கிறார். கல்லூரியிலும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார்.
புதுக் கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 1961ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து 1991ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். தமிழக அரசின் உருதுமொழிக் குழு உறுப்பினராகவும், செம்மொழிக்காக மத்திய அரசு அமைத்த தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
வானம்பாடி இயக்கத்துடன் இணைந்திருந்தவர் அப்துல் ரகுமான். பால்வீதி என்ற கவிதைத் தொகுப்பின்மூலம் புதுக்கவிதையில் அறிமுகம் ஆனவர், புதுக்கவிதையை அறிமுகம் செய்தவர். புதுக்கவிதையிலும் தனக்கென ஒரு தனி நடையை அமைத்துக் கொண்டவர். ஒருவேளை, புதுக்கவிதை குறித்து ஆய்வு செய்ததன் மூலம் அப்போதுதான் தலைதூக்கிக் கொண்டிருந்த புதுக்கவிதைகள் குறித்தும், பல்வேறு கவிஞர்களின் நடைகள் குறித்தும் ஆய்ந்து அறிந்து கொள்ள முடிந்தது காரணமாக இருக்கலாம். அவருடைய கவிதைகளில் உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் அதிகம் இருக்கும்.
ஹைக்கூ என்பது ஜப்பானிய கவிதை வடிவம். ஹைக்கூவைப் பற்றி தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார். சுதேசமித்திரன் இதழில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் 16-10-1916இல் ஹைக்கூ குறித்த கட்டுரையை எழுதினார். அதில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்திருந்தார். இதுவே தமிழுக்கு ஹைக்கூ குறித்தான முதல் அறிமுகத்தைத் தந்தது.
பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே
- பூஸோன் யோ ஸாஹோ
தீப்பட்டெரிந்தது வீழுமலரின் அமைதி என்னே
- ஹோ கூஷி
மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து என சீர்களைக் கொண்டு 17 சீர்களில் எழுதப்படும். ஹைக்கூவில் பின்பற்ற வேண்டிய மரபுகளாக அவர் முன்வைப்பவை இவை—
ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும். ஹைக்கூவின் மொழி ஊளைச் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும்.
என் வீடு எரிந்து போனதால்
நன்றாகப் பார்க்க முடிகிறது
உதிக்கும் நிலாவை.
என்று மசாஹிடே-யின் கவிதையையும்,
இந்த அழகிய கிண்ணத்தில்
பூக்களை அடுக்கி வைப்போம்
அரிசிதான் இல்லையே
என்று பாஷோ-வின் வரிகளையும் தமிழில் தந்த அப்துல் ரகுமான் பின்னர் 1974இல் பால்வீதி என்ற நூலில் ஹைக்கூ கவிதைகளை எழுதினார். தமிழில் முதல் முதலாக ஹைக்கூ கவிதைகளைப் படைத்தவர் அப்துல் ரகுமான்.
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்
தமிழில் ஹைக்கூ எழுதுகிறபோது, ஜப்பானிய ஹைக்கூவின் மரபுகளை கறாராகப் பின்பற்றத் தேவையில்லை என்பது அப்துல் ரகுமானின் கருத்து. “ஒரு மொழியின் கவிதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வியப்பல்ல. ஆனால் ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகின் பல மொழிகளிலும் புகழ் பெறுவதென்பது வியப்பானது” என்று ஹைக்கூ குறித்து கூறுகிறார் அப்துல் ரகுமான்:
இதேபோல, லிமரிக் என்ற கவிதை வகையின் தமிழ் வடிவமாக வந்தது குறும்பா. இதில் ஐந்து வரிகள் இருக்க வேண்டும். முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய மூன்று வரிகளில் ஒத்த ஓசையுடன் இயைபுத்தொடை இருக்க வேண்டும். அதேபோல மூன்றாவது, நான்காவது வரிகளும் இயைபுடன் முடிய வேண்டும். இயைபுத் தொடை என்றால் வேறொன்றுமில்லை, அடுத்தடுத்து வரும் வரிகளின் கடைசிச் சொற்கள் இயைந்து வருவது.
வள்ளுவரும் மாணவராய் ஆனார்.
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு...
அந்தோ ஃபெயிலாச்சு…
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்
இது ஒரு காலத்தில் மிகப் பிரபலமான குறும்பா. நமது கல்வி முறையின் என்னும் மிக ஆழமான பிரச்சினையை மிக எளிமையான வரிகளில் வெளிப்படுத்துகிறது. (மேலே சொன்ன குறும்பா எழுதியவர் அப்துல் ரகுமானா வலம்புரி ஜானா என்று ஐயம்.) லிமரிக் வடிவத்தை தமிழில் பிரபலப்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
ஹைக்கூ வடிவக் கவிதையை நகைச்சுவையாக, கேலியாக எழுதினால் அது சென்ரியூ என்னும் கவிதை வகையாகும். தமிழில் ஹைக்கூ, சென்ரியூ வடிவங்களைப் பரவலாக்கியதில் ஈரோடு தமிழன்பனுக்கு பெரும்பங்கு உண்டு. மீ. ராசேந்திரன் என்னும் கவிஞர் மீராவும் லிமரிக் வடிவில் எழுதியிருக்கிறார்.
யார் சொல்லிக் கொடுத்தவன்
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு
இது ஈரோடு தமிழன்பனின் சென்ரியு
அடுத்த தில்லிகை நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிடைத்தால் மீரா, ஈரோடு தமிழன்பன், தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ஆகியோரைப் பற்றியும் உரையாடலாம். அண்மையில் மறைந்த ச.வே. சுப்பிரமணியன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்தபோது, அவரின் வழிகாட்டலில்தான் அப்துல் ரகுமான் ‘புதுக்கவிதையில் குறியீடு’ என்ற தலைப்பில் தன் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.
பால்வீதியில் துவங்கி, பாலை நிலா வரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் அப்துல் ரகுமான் எழுதாத தலைப்புகளே இல்லை. “வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று கேட்டவருடைய கல்வி குறித்த கவிதையில் ஒன்றை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.
பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்…
குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,
உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.
இதை அப்புறம் நிதானமாகப் படித்துப் பார்க்கும்போது நமது கல்விமுறை குறித்த சிந்தனை விரியும்.
பால்வீதி தொகுப்பில் ஒரு கவிதை தேர்தல் அரசியலை கேலி செய்கிறது —
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.
முன்னர் நான் குறிப்பிட்ட கொடுக்கல் என்ற கவிதை இது —
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத் தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல் இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாயப்படுத்தும்.
இந்தக் கவிதையில் சுஃபி கவிதை மரபு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 1999இல் திருவள்ளுவர் கலையரங்கில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவைத் தொடர்ந்து அவர் பேசும்போது கூறியது குறிப்பிலும் நினைவிலும் இருக்கிறது. “காதல் கவிதை எழுதுகிறீர்களே என்று கேட்கிறார்கள். நான் இளமையில் காதல் கவிதைகள் எழுதியதில்லை. இப்போது எழுதுபவையும் எல்லாம் காதல் கவிதைகள் என்று சொல்ல முடியாது. நீ என்பது பெண் மட்டுமல்ல. உலகத்தில் உள்ளது எல்லாவற்றையும் நீ-யாகக் குறிப்பிடுகிறேன். ஆழமாகப் பார்த்தால் அது இறைவனை நோக்கிய பயணம். சுஃபி தத்துவம். இறைவனையே காதலியாகப் பார்க்குமாறு கூறுவது போல – காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடியது போல – சர்வத்தையும் தழுவிக்கொள்கிற, மனிதாபிமானத்துக்கும் மேற்பட்ட நீ அது.”
கவியரங்கக் கவிதைகளில் அவருடைய சொல்லாற்றலைக் காண முடியும். செம்மொழியான தமிழ்மொழியே என்ற கவிதையிலிருந்து சில வரிகள் மட்டும் பார்ப்போம் —
பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு என்றால்
குதூகலமாய் ஆடுகிறோம்.
கங்கைகொண்டவன்தான் இன்று
காவிரியையும் இழந்துவிட்டு
கையைப் பிசைந்து நிற்கிறான்.
முப்படையால் நான்கு திசைகளையும் வென்றவன்
சாதி சமயம் கட்சி என்ற
முப்படையால் தோற்று முகவரியை இழந்துவிட்டான்.
தாய்ப்பாலுக்கு அப்பால்
உன் தனப்பாலை குடித்ததொரு
ஒரு வாய்ப்பால் வளர்ந்த மகன்
வஞ்சகப் போதையின்
நோய்ப்பால் அருந்தி நூதனமாய் சாகின்றான்
உன்னை மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்
அதனால் உன்னை
முதலாக போட்டு வியாபாரம் தொடங்கிவிட்டான்.
தனக்குக் கிடைத்த விருதுகளில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழன்னை விருது, சாகித்ய அகாதமி விருது, திமுக வழங்கிய கலைஞர் விருது ஆகியவற்றையே சிறந்தவை எனக் கருதினார் அப்துல் ரகுமான்.
திமுக தலைவர் திரு கருணாநிதியும் அப்துல் ரகுமானும் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்கள். 2009-11 காலத்தில் அப்துல் ரகுமான் வஃக்பு வாரியத் தலைவராக இருந்தார். 1970கள் துவங்கி திரு கருணாநிதி பங்கேற்ற பல கவியரங்குகளில் அப்துல் ரகுமான் கவிதை வாசித்திருக்கிறார். மற்றபடி, அரசியல் பதவிகள் ஏதும் வகித்ததில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் துதி பாடியதுமில்லை.
திரு கருணாநிதி குறித்து அவர் எழுதிய கவிதை —
என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.
முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா…
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.
ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் –
அது மே/பா மு.கருணாநிதி என்றது.
இரட்டை இலை விரித்து
நாட்டையே உண்டவர்களை
எச்சில் இலையாக்கி
குப்பைத் தொட்டியில்
எறிந்தாய் நீ.
நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.
சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது…
தமிழா விழித்துக் கொள்…
வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படலாம்….
கவிதை என்ற அளவில் இது என்னைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு திருப்தி தரவில்லை என்றாலும், திரு கருணாநிதி மீது அவருக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதைக் காட்டவே இந்தக் கவிதையை சுட்டினேன். திரு கருணாநிதி அப்துல் ரகுமானைப் பற்றி எழுதியது இது —
வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால்
அப்துல் ரகுமானைத் தருகவென்பேன்.
அப்துல் ரகுமான் என் ஆஸ்தானக் கவிஞர் என்று கூறியவர் திரு கருணாநிதி. அப்துல் ரகுமான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் கவிஞர் மறுத்து விட்டார்.
அரசியலுக்குப் போகவில்லையே தவிர, அவருக்கு அரசியல் இல்லாமல் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசியலின்பால் ஆர்வம் இருந்தாலும், பொதுவுடைமைக் கருத்திலும் ஈடுபாடு இருந்தது. இரண்டையும் அவர் முரணாகப் பார்க்கவில்லை, இணையாகப் பார்த்தார், அதனால்தான் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். வானம்பாடியிலும்கூட இணைந்திருந்தாரே தவிர, மூழ்கியிருக்கவில்லை. எல்லாரும் புரட்சிக் கவிதைகளையே எழுதிக் கொண்டிருக்க முடியாது என்றவர் அவர். பாரதிக்கு தாசனாக இருந்தாலும் பாரதிதாசன் கடவுள் மறுப்பாளராக இருந்தார். பாரதிதாசனையும் பயின்று ஈர்க்கப்பட்ட வானம்பாடிக் கவிஞர்கள் பலரும் கடவுளை, பக்தியை, பக்தியின் பெயரிலான மூடத்தனங்களை கேள்வி கேட்பவர்களாக இருந்தனர். அப்துல் ரகுமானும் எழுதியிருக்கிறார். பாபர் மசூதி விவகாரம் குறித்து அப்துல் ரகுமான் எழுதியது இது —
இதோ... உனக்கு வீடு கட்டுவதற்காகவே
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்.
இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?
இந்தியனே,
முதலில் நீ இருக்க ஒரு இடம் தேடு.
ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை
அவன் தேடிக் கொள்வான்.
...
மதாபிமானம் இருக்கட்டும்
கூடவே கொஞ்சம்
மனிதாபிமானமும் இருக்கட்டும் நண்பனே.
அவருடைய சமகாலத்தவர்களும், அவருக்குப் பின்னால் வந்தவர்களும் திரைத்துறையில் நுழைந்து புகழும் பணமும் பெற்றபோதும் அப்துல் ரகுமான் திரைப்படப்பாடல் பக்கம் போகவில்லை. அங்கே சுதந்திரம் கிடைக்காது என்று கருதினார். ஏதோ ஒரே ஒரு திரைப்படத்தில் முழு சுதந்திரம் தருவதாகச் சொல்லி வற்புறுத்தவே, அந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியதாகவும், ஆனால் அந்தப்படமே வெளிவரவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. அதற்குப் பிறகும் அவர் திரைப்படத்தின் பக்கம் போகவில்லை. ‘சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்களை எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது’ என்று கூறிவிட்டவர் அவர். (பெ. கருணாகரன் கட்டுரை) திரைப்படச் சுருள்களை தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம் என்று கூறிய கவிஞர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
எந்த மதமும் விமர்சனங்களை ஏற்பதில்லை, பொறுப்பதில்லை. மதத்தின் பெயரால் பின்பற்றப்படும் சில பிற்போக்குத்தனங்களைக் கைவிடுவது குறித்தோ, மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்வது குறித்தோ பேச முடியாது. இந்த மதம் என்றில்லை, எல்லா மதங்களும் அப்படித்தான். அப்படியே யாராவது சில நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கினால் அவர்கள் அந்த மதத்திலேயே தனிக் குழுவாக உருவாகிறார்கள். அவர்களுக்கென வேறு சில பிற்போக்குத்தனங்களை வலியுறுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு மதமும் தனக்குள் சில அல்லது பல குழுக்களாகப் பிரிந்துபோனாலும், ஒவ்வொரு குழுவும் தனக்கான பிற்போக்குத்தனங்களை பிடிவாதமாய் வைத்துக்கொள்கிறதே தவிர, மொத்தமாய் விட்டொதுக்க எந்த மதமும் தயாரில்லை. இதற்கிடையில், அந்தக் குழுக்களுக்குள்ளும் எத்தனை மோதல்கள், விவாதங்கள்...! இஸ்லாத்திலும் இதற்குக் குறையில்லை. இந்தச் சூழலில், இஸ்லாத்துக்குள் இருந்துகொண்டே மென்மையாகத்தான் குறைகளைச் சுட்ட வேண்டியிருக்கிறது. அதை தன்னால் இயன்ற வழியில் செவ்வனே செய்தவர் அப்துல் ரகுமான்.
தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை
தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
‘சஜ்தாவின்’ சுவடுகள்...
என்று நபிகள் நாயகம் பற்றி எழுதிய அதே அப்துல் ரகுமானின் பேனாதான்,
சகோதரா!
எப்படி இருந்த நீ எப்படி ஆகிவிட்டாய்!
பிறைச் சின்னத்தைத் தேர்தெடுத்தவனே!
பிறையாகவே உறைந்து போனாயே!
ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம் மதம் மாற்றியது
இருண்டு கிடந்த ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க் கிடக்கிறாய்
மனித மலர்களைச் சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப் பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்
ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே ‘டக்-ஆஃப்-வார்’
விளையாடிக் கொண்டிருக்கிறாய் ...
என்று பகுதிநேர முஸ்லிம் என்ற கவிதையில் திசைதவறிச் செல்பவர்களை, தமக்குள் மோதிக் கொள்கிறவர்களை கண்டிக்கிறார். இந்தக் கவிதை சம உரிமை இதழில் வெளியானது. இன்னும் நீளமான இக்கவிதையை முழுமையாய் வாசிக்க நினைப்பவர்கள் இணையத்தில் வாசிக்கலாம். இஸ்லாமிய நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கவிதை இது. (இணைப்பு கீழே கமென்ட்டில் இருக்கிறது.)
சாகித்ய அகாதமி விருது பெற வந்தபோது அல்லது வேறு ஏதோவொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தபோது, நாங்கள் இருவரும் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், தான் ஆசிரியராக இருக்கும் இதழுக்கு தில்லியிலிருந்து எழுதுமாறு கேட்டார். அது சம உரிமை இதழா அல்லது சமநிலை சமுதாயம் என்ற இதழா என்று நினைவில்லை. ஆனால், நான் ஊடகத் துறையிலிருந்து விலகி நிற்பது என்று முடிவு செய்திருந்த காலம் அது. நாகரிகமாக, உறுதியாக மறுத்து விட்டேன். இப்போது யோசித்தால் அது தவறான முடிவு என்று தோன்றுகிறது. இஸ்லாத்தின் பெயரால் பழைய மற்றும் புதிதாகப் பிறந்துள்ள சில நடைமுறைகளைப் பற்றிய விவாதம் உள்ளுக்குள்ளிருந்து எழுந்து வருவது அவசியம். வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் இன்னும் கூட்டுக்குள் சுருங்கச் செய்யவே உதவுகின்றன.
பாருக்குள்ளே நல்ல நாடு என்ற கவிதை, ஜெர்மானியப் பாதிரியார் மார்ட்டின் நீய்மோல்லர் என்பவர், நாஜிகளுக்கு எதிராக எழாமல் கோழைகளைப் போல இருந்த அறிவுஜீவிகளை விமர்சித்து எழுதிய
First they came for the Socialists, and I did not speak out—
Because I was not a Socialist.
Then they came for the Trade Unionists, and I did not speak out—
Because I was not a Trade Unionist.
Then they came for the Jews, and I did not speak out—
Because I was not a Jew.
Then they came for me—and there was no one left to speak for me.
என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது.
அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
“என்ன குற்றம் செய்தீர்கள்” ?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.
“என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.
“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.
“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”
“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்”
“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் போட்டுவிட்டார்கள்”
“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.
“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்து விட்டார்கள்”
“சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன’ பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்”
“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்” என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல்
நாடு அமைதியாக இருந்தது..
சுட்டுவிரல் என்ற தொகுப்பில் தொலைந்து போனவர்கள் என்ற கவிதை தத்துவம் பேசுகிறது —
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை.
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை.
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை.
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை.
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை.
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல.
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல.
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய.
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்.
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு.
தேசிய நீரோட்டம் என்ற கவிதை, இன்று ஒற்றை மதம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி என்று திணிக்கப்படும் கருத்தாக்கங்களை கேள்வி கேட்கிறது.
அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்
ஏன் விலகி நிற்கிறீர்கள்?
குதியுங்கள்.
நவீன பாவங்களை கழுவுவதற்காகவே
புறப்பட்டு வந்த புண்ணிய தீர்த்தம் இது.
அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில் சங்கமமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?
இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில் துவைத்துக்கொள்கிறவர்களை -
தங்கள் வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை -
நீங்கள் பார்க்கவில்லையா?
நீங்கள் மட்டும் ஏன் விலகி நிற்கிறீர்கள்?
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.
உங்கள் கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.
உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்
உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்
உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்
உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்
இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை
நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது
நீங்களும் மூழ்கிவிடுங்கள்.
இன்றைய அரசியல் சூழலை அன்றே எழுதி வைத்தவர் அப்துல் ரகுமான் எனலாம். அல்லது, அன்று எழுதியது இன்றும் பொருந்துகிறது எனலாம்.
கடைசியாக, படிமங்களும், உருவகங்களும் பொதிந்த சில கவிதைகளுடன் முடிக்கிறேன்.
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே என்பதை
அறிவீர்களா?
கூண்டுப் பறவை
கூண்டின் கூரையையே
வானம் என்று
வாதாடும்
எது பூவானதோ அதுவே முள்ளானது
பூவைப் போலவே
முள்ளுக்கும் இருத்தல் நியாயம்
உண்டு.
உங்களைக் குத்துவதற்காக
முளைத்ததல்ல முள்.
நீங்கள்தான் குத்திக்கொள்கிறீர்கள்.
வெளியே புறப்படுதல் அல்ல
வெளியிலிருந்து புறப்படுதல்தான்
பயணம்.
மேலே என்பது மேலே இருக்கிறது
என்பதுதான்
உங்கள் பெரிய மூடநம்பிக்கை
பசியை நீங்கள் விலங்கு என்கிறீர்கள்
நானோ
பசியைச் சிறகு என்கிறேன்.
அந்தச் சிறகு இல்லையென்றால்
நீங்கள் இந்த உயரங்களை
அடைந்திருக்க மாட்டீர்கள்
எழுபதுகளில் துவங்கி எண்பதுகளில் கோலோச்சி, தொண்ணூறுகள் வரை பேசப்பட்டவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள். புதுக்கவிதை வீச்சுப் பெற்றது. இப்போது பலராலும் கேலி செய்யப்படுகிற அல்லது விமர்சனம் செய்யப்படுகிற பூபாளம், புரட்சி, செந்தீ போன்ற சொற்கள் அன்றைக்கு உத்வேகம் ஊட்டுகிறவையாகவே இருந்தன. வானம்பாடி இதழ் புதுக்கவிதைகளைப் பரப்பியது. இன்னொரு பக்கம் கவிஞர் மீராவின் அன்னம் புதுக்கவிதைகளை வெளியிட்டது. அன்னம் என்ற பெயரை வைத்தவர் அப்துல் ரகுமான்தான். (அன்னம் பதிப்பகத்துக்கான ஆரம்ப முதலீட்டை மீராவும் அப்துல் ரகுமானும்தான் போட்டார்கள் என்ற செய்திகள் நேற்று இணையத்தில் கிடைத்தன.) அதே சமயத்தில், மக்களிடையே எந்த விஷயம் வரவேற்புப் பெறுகிறதோ அதை தமது லாப நோக்கத்துக்காக வெளியிடுவதில் தயங்காத ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் பிரபலர்களின் கவிதைகளை வெளியிட்டன. அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள், அவளுக்கு நிலா என்று பேர் போன்ற தொடர்கள் வணிகப் பத்திரிகைகளால் பிரபலமடைந்தன. அப்போதெல்லாம் முட்டைவாசிகளோ பால்வீதியோ கையில் எடுத்துச் செல்வது மதிப்புக்குரியதாகக் கருதப்பட்டது. தான் ஒரு கவிதை ரசிகன் என்று காட்டிக் கொள்வதற்காகவே கையில் எடுத்துச் சென்றதும் உண்டு. அப்துல் ரகுமானை நானெல்லாம் அப்படித்தான் படித்தேன்.
இப்போதும் புதுக்கவிதை புதிய புதிய விஷயங்களை, புதிய புதிய பார்வையில் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கும். ஏனென்றால், “கவிஞன் என்பவன் சின்னக் குறைகளைக்கூட கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். கவிஞன் தன் அனுபவத்தைக் கொடுத்து விட்டுப் போக வேண்டும்” என்றவர் கவிதையைக் கைவாளாகக் கையாண்ட அப்துல் ரகுமான்.
கவிஞர் அப்துல் ரகுமான் மறைந்து விட்டார். அவர் கவிதைகள் இன்னும் பல காலம் நிலைத்திருக்கும்.

Shahjahan R

No comments: