எல்லாம் வல்ல இறைவன் நம் குருதி வழியே உயிரும் உணர்வும் கொடுத்து உருவாக்கிய உறவில் தந்தை மிகவும் மகத்துவம் மிக்கவர்! தந்தை கொடுத்ததால் தாய் பெறுகிறார் அதன் வழியே இருவரும் பெற்றோர் ஆகின்றனர்.
அதுமட்டும் இன்றி தான் பெற்ற பிள்ளையை எல்லாம் பெற வைப்பதிலும் தந்தையின் பங்களிப்பே மிகைத்து நிற்கும் பல சமயங்களில், அந்த மிகைத்ததலின் விளைவே நாமெல்லாம்!
பொடு போக்கான தாய் தந்தைக்கு பிறந்து தனது மூன்றாம் வகுப்பைக்கூட முழுமை பெற்று முடிக்காமல் பத்து வயது நிரம்பும் முன்பே திருச்சி சென்னையின் திரையரங்குகளின் உள்ளே தன் தோளில் சுமந்து பதார்த்தங்களை விற்கத் துவங்கி அதன் பிறகு உணவகங்களில் சர்வர் பணிக்கு சென்று வஞ்சமில்லாமல் உழைத்து காலம் கொடுத்த பதவி உயர்வுகளின் அடிப்படையில் என் தாய்க்கு கணவராகி! அதன் வழியே என்னைப் பெற்று தந்தையாகி! இந்த உலகில் நான் இயன்றவரை எல்லாம் பெற வைத்து அழகு பார்த்து தாயுமாகி அல்ல யாவுமாகி நின்றவர் என் தந்தையெனும் என் கதை நாயகர்.
ஆம்..! என் கதையின் நாயகர் எனக்கான கதைக்கு ஏதும் செய்யாது போயிருப்பின் என் கதை தொடக்கம் என்னவாகி இருக்கும் என்பது என் கற்பனைக்கு எட்டவில்லை. மூன்று பிள்ளைகளை பெற்றவர் முதல் பிள்ளையான எனக்கே அதிகம் உழைத்தவர் என்பேன் நான் அவரைப் பற்றி!
வானம் வெகுதூரம் என்று நான் சொன்னபோது, அப்படி யார் சொன்னது என கேட்டு மகனே நீ என் தோளில் கால் வைத்து ஏறடா..! ஏறி எட்டிப்பிடியடா..! அது தொட்டுவிடும் தூரம்தான் என சொல்லி வானத்தின் வாசல் வரை என்னை தன் தோளில் சுமந்தவர்!
ஒருவேளை அவர் என்னைப் பற்றி சிந்திக்காமல் தன்னைப் பற்றி மட்டுமே அவர் சிந்தித்திருப்பாராயின் நான் பெற்ற இவ்வழிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை! அன்று குழந்தை தொழிலாளியாக உழைக்கத் தொடங்கியவர் இன்று தன் பேரக்குழந்தைகளை பெற்ற பின்பும் அவர்களுக்காக இன்னும் உழைக்க உவகை கொள்கிறார்..! வீட்டின் நலன் கருதி தன்னால் இயன்றவரை உழைக்கவும் செய்கிறார்..! அல்ஹம்துலில்லாஹ்..!
ஏழில் தொடங்கிய உழைப்பை எழுபதை தொடப்போகும் வேளையிலும் விட்டுவிட மனமில்லை! இன்றளவும் அவரின் மிதிவண்டிப் பயணம் என் இறைவனிடம் அவர் எவ்வளவு அருள்பெற்றார் என்பதை எண்ணி வியக்க வைக்கிறது..!
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்றது தமிழ்..! ஆனால் தந்தையே மந்திரம்தான் என்பேன் நான்! காலமெல்லாம் தான் நெருப்பாற்றில் நீந்தியபோதும் அதன் ஒரு சுவடும் தன் பிள்ளை காணாது போக தன்னையே தொலைப்பவர்கள் தந்தைமார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை!
இதில் வேண்டுமாயின் சில விதிவிலக்கு பெற்ற தந்தைகள் இருக்கலாம்! ஆனால் அதுவே விதியல்ல!
என் மதிப்பு மிகு தந்தையே..! உங்களால் நான் பெற்றதை நான் பெற்று தந்தையாகி உணர்ந்து மகிழ்கிறேன்..! நீவிர் வாழிய இன்னும் பல்லாண்டு ஏக இறைவன் அருள் பெற்று!
#தந்தையர்_தினம் 💚💚💚
Samsul Hameed Saleem Mohamed
No comments:
Post a Comment