2015 ஆம் ஆண்டு (சென்னை) புத்தகக் கண்காட்சி என்று நினைவு. ஒரு அரங்கில் RJ ஒருவர் "நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலவாமல் தமிழில் இரண்டு நிமிடங்களுக்கு உரையாட உங்களால் முடியுமா?" என்று அங்கு வருவோரையெல்லாம் மடக்கிக் கொண்டிருந்தார்.
நண்பரொருவர் என்னை அந்த அரங்கிற்கு அழைத்துக்கொண்டு போய், "இவரிடம் பேசுங்க...." என்று என்னை மாட்டிவிட்டார் :)
கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக மிகவும் யோசித்து யோசித்து.... ஆங்கிலம் சேர்ந்துவிடாதபடி பேசி..இரண்டு அல்ல நான்கு நிமிடங்களைக் கடந்தவுடன்....... அந்த தம்பி, "சார்.. உங்க மொபைல் நம்பர் கொடுங்க ... என்று 60-40% தமிழ் ஆங்கிலம் கலந்து கேட்க எல்லோரும் சிரித்தது அல்ல நாம் இப்போது பேசப் போகும் விசயம். .
எனது எண்ணை அவரிடம் சொன்ன மாத்திரத்தில், "சார் உங்க பெயர் ரஃபீக் தானே?" என்று அவர் உறுதி செய்துகொண்டதுதான் வியப்பிலாழ்த்திய விசயம்.
எனது பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?
போட்டியின்போது கூட நீங்கள் என் பெயரைக் கேட்கவில்லையே?! என்று தொடர்ந்து எனது ஆச்சர்யமிகு கேள்விகளைக் கடந்த அந்த தம்பி சிரித்துக்கொண்டே , "இது ஒரு மொபைல் ஆப் சார். இதில் தெரியாதவர்களின் எண்ணை உள்ளீடு செய்தாலோ அல்லது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலோ அவர்களின் பெயர் கிடைக்கும்" என்று சொன்னார். அட நல்லா இருக்கே! எனும்போதே அவர் எனது மொபைல் போனை வாங்கி அதிலும் அதை நிறுவிக்கொடுத்தார். (தற்போது நான் பயன்படுத்தவில்லை)
பிறகென்ன, கையில் கிடைக்கும் எல்லா எண்களையும், செய்தித்தாளில் பார்க்கும் எங்களையெல்லாம் உள்ளிட்டு சரிபார்த்தால் 99.99% சரியாகவேஇருந்தது. உள்ளூர், வெளியூர் தொடங்கி வெளிநாட்டு எண்கள் வரையிலும் கூட பெயர் தெரிந்துகொள்ளும்படியாக இருந்தது.
ஆம், அந்த மாயங்களெல்லாம் செய்வது 'ட்ரு காலர்' எனும் மொபைல் ஆப் தான். சரி, எப்படி இது வேலை செய்கிறது என்று ஆராய முற்படும்போதுதான் ஆபத்தும் அதிர்ச்சியும் தூக்கிவாரிப்போட்டது.
பொதுவாக ஆங்கிலேயர்கள் தமது மொபைல் எண்ணை அவ்வளவு எளிதில் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் என்றும் அலுவலகம் சார்ந்த தொடர்புகளுக்கு 'லேண்ட் லைன்' எண்களை மட்டுமே பகிர்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நம்ம கதைவேறு. நூறு ரூபாய்க்கு பனியன் வாங்கிவிட்டு பத்து இலட்சம் ரூபாய் கார் குலுக்கலில் விழும் என்று நம்முடைய மொபைல் எண், முகவரி, ஆதார் எண் இப்படி நமது தனிப்பட்ட தகவல்களைத் தருவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டோம் இல்லையா?
இதுவொன்று போதுமே.. உங்களுக்குத் தெரியாத எண்ணை உங்களுக்குத் தருகிறேன் என்று சொல்லி உங்களது மொபைல் போனில் இருக்கும் அனைத்து நண்பர்கள் / உறவினர்கள் மற்றும் ஏதும் இரகசிய😜 எண்களிருந்தால் அவைகளையும் சேர்த்து அவர்களின் பெயர், புகைப்படம் (ஒருவேளை இணைத்திருந்தால்) வேறேதும் அவர்களைப் பற்றிய குறிப்புகள் எழுதி வைத்திருந்தால் அவைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் இன்னும் அவைகளை உங்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ள எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அந்த 'மொபைல் ஆப்' ஐ நிறுவும்போதே உரிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிடுகிறோம்.
அவ்வாறு அந்த 'மொபைல் ஆப்' ஐ பயன்படுத்தும் அனைவருடைய அதாவது உரிமை சாசனம் எழுதிக்கொடுத்த அனைவரது 'காண்டாக்ட் லிஸ்ட்' அனைத்தும் உறிஞ்சி எடுக்கப்பட்டு அவர்களது சர்வர் இல் சேமிக்கப்படுகிறது. இன்றைய தேதியில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 250 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சர்வர் பயனாளியின் மொபைல் போன் தரவுகள் மட்டுமன்றி அவர்களது ஃ பேஸ்புக்/ கூகுள் கணக்குகளின் விபரங்களையும் எடுத்துக்கொள்கிறது. (இவையிரண்டின் ஏதாவது ஒரு கணக்கின் வழியாகத்தான் அந்தச் செயலியை உபயோகிக்க முடியும் என்பது விதி!)
"நான்தான் இதை என் மொபைலில் இன்ஸ்டால் செய்யவே இல்லையே பிறகு எப்படி என் மொபைல் எண் பிறருக்குத் தெரியும்?" என்று இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும். உண்மைதான் நீங்கள் நிறுவியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் என் நண்பரின் மருமகன் அல்லது உங்கள் மகள் என் மகளின் வகுப்புத் தோழி என்று இருந்தால், எனது நண்பர் ('ட்ரு காலர்' பயன்படுத்துபவர்) உங்கள் பெயருடன் மாப்பிள்ளை என்று சேர்த்து சேமித்திருந்தால், நான் உங்கள் எண்ணை 'ட்ரு காலர்' மூலமாகத் தேடும்போது என் நண்பர் உங்கள் பெயரைச் சேமித்திருப்பது போல திரையில் வரலாம். அல்லது எனது மகளின் தோழி அவளோடு படிக்கும் உங்கள் மகளைத் தொடர்புகொள்ள உங்கள் எண்ணை உங்கள் பெயருடன் 'அங்கிள்' என்று சேர்த்து சேமித்திருந்தால் நான் உங்கள் எண்ணை 'ட்ரு காலர்' மூலமாகத் தேடும்போது அவர்கள் உங்கள் பெயரைச் சேமித்திருப்பது போல திரையில் வரலாம். அல்லது 'ட்ரு காலர்' பயன்படுத்தும் எனது நண்பர்களில் யாரேனுமொருவர் உங்கள் நண்பராக இருந்து அவர் உங்கள் எண்ணை உங்கள் பெயருடன் சேமித்திருந்தால், நான் உங்கள் எண்ணை 'ட்ரு காலர்' மூலமாகத் தேடும்போது என் நண்பர் உங்கள் பெயரைச் சேமித்திருப்பது போல திரையில் வரலாம்.
நாம் இந்தச் செயலியினைப் பயன்படுத்தாவிட்டாலும் பயன்படுத்தும் பிறர் நமது விபரங்கள் வைத்திருக்கும்போது அவை பொதுவெளிக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் இன்று பெரும்பாலான வணிகம் சார்ந்த அழைப்புகள் வரும்போது நமக்குத் தெரிந்தவர்கள் போல நமது பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
இதிலிருந்து தப்பிக்க நாம் நிறுவியிருக்கும் செயலியை நீக்குவதற்கு முன்பாக, கணக்கினை 'டி ஆக்டிவேட்' செய்யவேண்டும். பிறகு அவர்களது வலைதளத்திற்குச் சென்று UNLIST என்பதைத் தெரிவு செய்து நமது மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு நீக்கக் கோரினால் 24 மணி நேரத்தில் நீக்கிவிடுவோம் என்று சொல்கிறார்கள்.
தகவல் பாதுகாப்பு என்பது முற்றிலும் இழந்து நிற்கும் காலத்தில் வாழ்கிறோம். நம் பாதுகாப்பு நம் கையில் இருக்கு !!
Rafeeq Sulaiman
15-06-2017
சென்னை.
No comments:
Post a Comment