மனிதனின் தேவை !- மன அமைதி ..
( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )
“அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)
நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.
மனிதர்கள் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி, சக்திக்கேற்ப தங்கள் சரீரத்தைப் பீடித்த நோய்க்கு சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் அனைவருமே சிகிச்சையளிக்க வேண்டிய முக்கியமான ஒரு உறுப்பைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.
அந்த உறுப்பு செயலற்றுவிட்டால், ஏனைய உறுப்புக்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் பயனில்லை. ‘மையித்து’ என்று இனம் காட்டப்பட்டு ஒதுக்கி தள்ளப்படுகிறது. அந்த உறுப்பு இயங்கிக் கொண்டிருந்தால் மற்ற உறுப்புகள் துண்டாடப்பட்டாலும், புழுத்துக் கொட்டினாலும் மனிதன் என்ற மரியாதையளிக்கப்படுகிறது.
அந்த உறுப்பில் நோயின் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அனைத்து உறுப்புகளிலும் நோய் தொற்றிக் கொள்கிறது. அந்த உறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் ஏனைய உறுப்புகள் எவ்வளவு நோய் தொற்றினாலும் சமாளித்துக் கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த உறுப்பை இனம் காட்டுகிறார்கள். “சரீரத்தில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீரடைந்தால் சரீரமனைத்தும் சீர் பெற்று விடும். அது சீரழிந்தால் சரீரமனைத்தும் சீரழிந்து விடும். தெரிந்து கொள்ளுங்கள். அது தான் ‘இருதயம்’ என்பதாகும்.
புரையோடும் புற்று நோய்கள்
இருதயம் என்ற அந்த பிரதான உறுப்பைத் தொற்றிக் கொள்ளும் வியாதிகள் அனந்தம் ! அனந்தம் ! அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் கவலை, பயம், சந்தேகம் ,கோபம், பொறாமை போன்ற வியாதிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஒருவன் ஏதாவதொரு கவலையால் பீடிக்கப்படும்போது, அவனுக்கு உணவு செல்ல மறுக்கிறது. உறக்கம் பிடிப்பதில்லை. அவன் எவ்வளவு திடகாத்திரம் படைத்தவனாக இருந்தாலும், நாளடைவில் நலிந்து உருக்குலைந்து போகிறான்.
பயம் என்பதும் ஒரு நோய். அந்நோய் ஒரு மனிதனைக் கவ்விக் கொண்டால் அது அவனை அழிக்கும் வரை ஓய்வதில்லை. ‘ அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று கூறுவர்.
சற்று கடுமையான உடல் நோயால் பாதிக்கப்பட்டால் எங்கே இந்நோய் நம்மை மரணிக்கச் செய்துவிடுமோவென்று பயந்து சாகக் கூடிய மனிதர்கள் பலரை நாம் கண்டு வருகிறோம்.
பயத்தைப் போன்று சந்தேகம் என்பதும் ஒரு கொடிய நோயாகும். ‘தன் குடும்பத்தினர் தவறான நடத்தையை மேற்கொண்டு விடுவார்களோ? நம் தொழிலாளர்கள் நாணயமில்லாது நடப்பார்களோ? நமக்கு யாரும் செய்வினை செய்திருப்பார்களோ? நமக்கு யாரும் மருந்திட்டிருப்பார்களோ?’ என்பன போன்று பல வகைகளில் மனிதன் சந்தேகம் கொள்கிறான். சிலர் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் சந்தேகப்பிராணியாகவே இருப்பார்கள். சந்தேகம் என்ற நோய் பீடித்து விட்டால் அது சதாவும் சிந்தனையை குழப்பிக் கொண்டே இருக்கும். இதனால் மனிதன் உண்ணப் பிடிக்காமல் உறக்கம் வராமல் தவிப்பான்.
மனிதனை அழிக்கும் குணங்களில் கோபம் என்பது பிரதான இடத்தை வகிப்பதை, இன்றைய உடல்கூறு நிபுணர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள். ஹார்ட் – அட்டாக், பிளட் – பிரஷ்ஷர் போன்ற ஆட்கொல்லி நோய்கள் மனிதனைத் தாக்குவதற்கு கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவையே முக்கிய காரணங்களாக அவர்கள் கூறுகின்றனர்.
http://kiyamath.blogspot.in/
No comments:
Post a Comment