கடை முதலாளியிடம் சென்று, மிகவும் பசிக்கிறது, கையில் காசில்லை, ஏதாவது உணவு கொடுங்கள் என்று ஹிந்தி மொழியில் கேட்க, அவனை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்து விட்டு, எனக்கெதிரே இருக்கும் டேபிளிற்கு கூட்டி வந்து அமரச்செய்து, அவனைப்பற்றி ஏதேதோ கேள்விகள் கேட்டு விசாரணை செய்தார்.
இதைப்பார்த்த எனக்கு சற்று கோபம் வந்தது. கொஞ்சம் சாப்பாடு கொடுக்குறதுக்கு இவ்வளவு விசாரணை என்ன வேண்டி கிடக்கிறது. அவன் பொய் சொல்லி சாப்பிடுபவனாக இருந்தாலும், கொஞ்சம் சாப்பாடு கொடுப்பதில் அப்படி என்ன ஏமாந்து போய் விடப்போகிறோம்? இதோ, அவனுக்கு பதில் சொல்லக்கூட தெம்பு இல்லை என்பது மிகத்தெளிவாக தெரிகிறதே?
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். வேலை தேடி துபாய்க்கு வந்ததாகவும், எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். எழுந்து சென்று, ஒரு சாப்பாடு கொடுத்துருங்க, நான் பணம் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லி விடலாமென்று தோன்றி கொண்டிருக்கும் பொழுதே, அவனின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்து விட்டு, "சரி, நான் உனக்கு விசாவும், வேலையும் தரேன், இங்கேயே தங்கிக்க. முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு" என்று சட்டென்று கூறினார் அந்த கடை முதலாளி.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவனின் விழிகளிலில் தேங்கி நின்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, நம்பிக்கையும் உறுதியும் நிரம்பத் தொடங்கியதை கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது.
எவ்வளவு பெரிய மனது அந்த கடைக்காரருக்கு? யார் கண்டது? ஒரு வேளை இந்த ஒரு நிமிடம், அவன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தப் போகும் ஓர் உன்னத தருணமாகக்கூட இருக்கக் கூடும்.
நாம் காட்டும் அன்பும், சிறு உதவியும் பிறர் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றங்களை உருவாக்குமென்று ஒவ்வொருவரும் உணர்ந்தாலே போதும், இந்த உலகம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்.
வயிற்றுக்கு ஏதும் கிடைக்காதா என்று ஏங்கி நின்றவனுக்கு வாழ்க்கை பரிசாக கிடைத்ததை நேரில் கண்ட திருப்தியில் வயிறு நிரப்பச்சென்ற நான் மனதையும் நிரப்பிக் கொண்டு வெளியே வந்தேன்..
#சின்ன_சின்ன_அன்பில்தானே_ஜீவனிருக்கு ❤️
ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
No comments:
Post a Comment